Published:Updated:

ஆக்கிரமிக்கப்பட்ட ஏரிக்காகப் போராடி கொலை செய்யப்பட்ட வீரமலை, நல்லதம்பி குடும்பம் எப்படி இருக்கிறது?

குடும்பத்தின் தூணாக இருந்த இரண்டு தலைமகன்களை இழந்து, அச்சொடிந்த தேராக நொடிந்துக் கிடக்கிறது, இருவர் குடும்பம். இன்னொரு பக்கம், `சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும்' என்று ஊருக்காக உழைக்கும் பல சமூக ஆர்வலர்களை இந்தக் கொலைச் சம்பவம் பதறவும் வைத்திருக்கிறது.

நிற்கதியாக நிற்கும் வீரமலை குடும்பம்
நிற்கதியாக நிற்கும் வீரமலை குடும்பம் ( நா.ராஜமுருகன் )

ஆக்கிரமிக்கப்பட்ட 198 ஏக்கர் ஏரியை மீட்க சட்டப் போராட்டம் நடத்திய வீரமலையும், அவருடைய மகன் நல்லதம்பியும் சமூக விரோதிகளால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு ஒரு வாரம் ஓடிவிட்டது. `கொலை செய்த குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருந்த குளித்தலை இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் சஸ்பெண்டு' , `இந்த விஷயத்தில் ஆரம்பத்தில் இருந்தே அக்கறை காட்டாத மாவட்ட நிர்வாகத்துக்கு நோட்டீஸ்' , `பத்திரிகை செய்திகளின் அடிப்படையில் வழக்கை தாமாக எடுத்துக்கொண்டது, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை', `சமூக ஆர்வலர்கள் கொலை செய்யப்பட்டத்தைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் போராட்டம்' என்று இந்தச் சம்பவத்தைச் சுற்றி எவ்வளவோ செய்திகள்.

நிர்க்கதியாக நிற்கும் வீரமலை குடும்பம்
நிர்க்கதியாக நிற்கும் வீரமலை குடும்பம்
நா.ராஜமுருகன்

ஆனால், குடும்பத்தின் தூணாக இருந்த இரண்டு தலைமகன்களை இழந்து, அச்சொடிந்த தேராக நொடிந்துக் கிடக்கிறது, இருவருடைய குடும்பம். இன்னொரு பக்கம், `சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும்' என்று ஊருக்காக உழைக்கும் பல சமூக ஆர்வலர்களை இந்தக் கொலை சம்பவம் பதறவும் வைத்திருக்கிறது.

திருச்சி மாவட்டம், இனாம்புலியூரைச் சேர்ந்தவர்கள்தான் வீரமலை, நல்லதம்பி. அருகில் உள்ள கரூர் மாவட்ட எல்லை கிராமமான முதலைப்பட்டியில், ஆக்கிரமிக்கப்பட்ட 198 ஏக்கர் ஏரி உள்ளது. அதை மீட்க சட்டப் போராட்டம் நடத்தி அதில் வெற்றிகாணவேதான், ஆக்கிரமிப்பாளர்களால் துள்ளத்துடிக்க வெட்டிச் சாய்க்கப்பட்டிருக்கிறார்கள் தந்தையும், மகனும். திக்குத் தெரியாத இருட்டில் கிடக்கிறது அவர்களது குடும்பம்.

தாமரை, சரஸ்வதி மற்றும் அன்னலட்சுமி
தாமரை, சரஸ்வதி மற்றும் அன்னலட்சுமி
நா.ராஜமுருகன்
வீரமலை குடும்பத்துல ஒத்த ஆம்பளைகூட மிச்சமிருக்கக் கூடாது'னு என் பேரனையும் கொல்ல, அவன்மேல ஈட்டியை எறிஞ்சாங்க பாவிங்க. ஈட்டி கால்ல பட, உயிர்பயத்துல ஓடிப்போய் மறைஞ்சிகிட்டான் என் பேரன். இல்லைன்னா, என் குடும்பத்துல இப்ப மிச்சமிருக்கிற ஒரு ஆம்பளையையும் எமனுக்கு வாரிக் கொடுத்திருப்பேன்.
தாமரை

வீரமலையின் மனைவி தாமரையை யாராலும் ஆறுதல்படுத்தமுடியவில்லை. அழுகையினூடேதான் பேசினார்.

"'ஊர் வம்பு நமக்கு எதுக்கு?'னு ரெண்டு ஆம்பளைங்ககிட்டயும் தலைத்தலையாக அடிச்சிக்கிட்டேன். ஆனா, `ஏரியை மீட்காமல் விடமாட்டேன்'னு கோர்ட்டுல கேஸ் போட்டார் என் கணவர். கோர்ட்டு தீர்ப்புபடி ஏரியில் ஆக்கிரமிக்கப்பட்ட 40 ஏக்கர் நிலத்தை அதிகாரிகள் வந்து அளந்தாங்க. அந்த கோபத்துல ஊர்கூட்டம் போட்டு, ஜெயகாந்தன்ங்கிற ரவுடியை ஏவிவிட்டு, என் கணவரையும், மகனையும் அநியாயமா கொன்னுப்போட்டுட்டாங்க. பலமுறை இந்தக் கும்பல் என் கணவரை கொல்லப்பார்த்துச்சு.

தாமரை (வீரமலை மனைவி)
தாமரை (வீரமலை மனைவி)
நா.ராஜமுருகன்

`என் உயிருக்கு ஆபத்து இருக்கு'னு என் கணவர் கலெக்டர், போலீஸ்னு பலருக்கும் புகார் கொடுத்தாரு. யாரும் கண்டுக்கலை. இன்னைக்கு என் குடும்பமே நடுத்தெருவுல நிக்குது. 38, 36 வயசுகள்ல இருக்கிற என்னோட ரெண்டு பொம்பளை புள்ளைங்களுக்கும் இன்னும் கல்யாணம் ஆகலை. செத்துப்போன என் மகனுக்கு 11 வயசுல பொன்னர், 7 வயசுல இனியான்னு ரெண்டு பிள்ளைங்க. அன்னைக்கு என் பேரன் பொன்னரை பள்ளிக்கூடத்துக்கு வேன்ல ஏத்திவிட உக்கார்ந்திருந்த என் கணவரைதான் கொலைவெறிப் பிடிச்ச கும்பல், ஆட்டை வெட்டுறாப்புல நெஞ்சுல ஈரமே இல்லாம வெட்டிப்போட்டுட்டு போயிடுச்சு.

அதோட, `வீரமலை குடும்பத்துல ஒத்த ஆம்பளைகூட மிச்சமிருக்கக் கூடாது'னு என் பேரனையும் கொல்ல, அவன்மேல ஈட்டியை எறிஞ்சாங்க பாவிங்க. ஈட்டி கால்ல பட, உயிர்பயத்துல ஓடிப்போய் மறைஞ்சிகிட்டான் என் பேரன். இல்லைன்னா, என் குடும்பத்துல இப்ப மிச்சமிருக்கிற ஒரு ஆம்பளையையும் எமனுக்கு வாரிக் கொடுத்திருப்பேன். இனி, பொம்பளைங்க நாங்க எப்படி இந்தக் குடும்பத்தை நகர்த்துவோம். எனக்கும் உடம்புல இல்லாத நோய் இல்லை. கண்ணை மூடி தூங்க முடியலை. தூங்க நினைச்சா, கண்ணு முன்னால கோரமா செத்துக்கிடந்த என்னோட கணவர், மகன் உடம்புங்கதான் முன்னே வருது. எதிர்காலத்தை நெனைச்சா பயமாயிருக்கு சாமீ.." என்று பெருங்குரலெடுத்து அழுகிறார்.

`40 ஏக்கர் ஏரியை மீட்டெடுக்க வழக்கு போட்டார்!' - குளித்தலையில் சமூக ஆர்வலர், மகனுக்கு நடந்த பயங்கரம்

நல்லதம்பியின் மனைவியான தமிழரசி இரண்டு குழந்தைகளை எப்படி கரைசேர்ப்பது என்ற கவலைகள் தெறிக்கும் முகத்தோடு நம்மிடம் பேசினார்.

"என் கணவரும், மாமனாரும் எங்க வயல்ல போட்டிருக்கிற பூவை வித்து, எங்களை கௌரவமா வாழ வச்சாங்க. என் மகனை தனியார் பள்ளியில் சேர்த்து படிக்க வச்சாங்க. ஆனா, ஏரியை காக்கப் போறேனு கிளம்பி, கொலையாகி, எங்களை இப்படி நட்டாத்துல விட்டுட்டு போயிட்டாங்களே. நான் பத்தாவது வரைக்கும் படிச்சிருக்கேன். `வேலைக்குப் போகலாம்'னு நினைச்சா, விபத்துல பாதிக்கப்பட்ட என் உடம்பு அதுக்கு ஒத்துழைக்காது போலிருக்கு. இரண்டு வருஷத்துக்கு முன்னாடி, ரோட்டில் நின்ன என்னை வேகமா வந்த கார் மோதித் தள்ளிட்டு போய்ட்டு.

உயிர் பொழச்சதே பெருசு. வலதுகை உடைஞ்சுட்டு. பிளேட் வச்சாங்க. வலது மூளை பாதிக்கப்பட்டு, வலது கண் பார்வை மங்கிட்டு. கையைத் தூக்கி சின்ன வேலையைக்கூட பார்க்கமுடியாது. இந்த நிலைமையில் என் பிள்ளைங்கள எப்படி வளர்ப்பேன்? என் பையனுக்கு வேன் பீஸோட சேர்த்து பள்ளிக்கூடத்துக்கு 30,000 கட்டணும். அதை எப்படி பொரட்டுவேன்? என் மகளை ஆளாக்கி, கட்டிக் கொடுப்பேன்? இதைப் பத்தி நெனச்சு நெனச்சு எனக்கு ராத்திரியானா தூக்கம்வரமாட்டேங்குது" என்றார் கண்களில் கண்ணீர் வழிய!

தமிழரசி (நல்லதம்பி மனைவி)
தமிழரசி (நல்லதம்பி மனைவி)
நா.ராஜமுருகன்
எங்க குடும்பத்தை அழிச்சவங்களை சட்டப்படி தண்டிப்பேன். நிலத்துல விவசாயத்தைப் பார்த்து, உடைஞ்சு கிடைக்கும் குடும்பத்தை பாதுகாப்பேன். அதனால், `எனக்கு இந்த ஜென்மத்துல கல்யாணம் வேண்டாம்'னு முடிவுபண்ணிட்டேன். கல்யாண ஆசையை நெஞ்சுக்குள்ளேயே புதைச்சுக்கிட்டேன்"
அன்னலட்சுமி

வீரமலையின் மூத்த மகளான அன்னலட்சுமி,

"எனக்கும், என் தங்கச்சிக்கும் இன்னும் கல்யாணம் ஆகலை. எனக்கு 38 வயசாயிட்டு. தங்கச்சி புத்திசுவாதீனம் இல்லாதவ. எங்கப்பா, `எவ்வளவு சிரமப்பட்டாவது, அன்னலட்சுமிக்காவது திருமணம் பண்ணிப்புடணும்'னு என்னோட அம்மாகிட்ட சொல்லிக்கிட்டே இருப்பார். மாப்பிள்ளையும் பார்த்துக்கிட்டு இருந்தார். ஆனா, ஊருக்காக பாடுபட்ட மனுஷனை இப்படி, ஈவு இரக்கமே இல்லாம கொலைகாரக்கும்பல் கொன்னுப்போட்டுட்டு போயிட்டாங்களே... ஊருக்காக கவலைப்பட்டவருக்கு, சாவுதான் பரிசா? எங்கப்பாவையும், அண்ணனையும் கொன்னவங்களை தூக்குல போடணும் சார். நடுக்கடல்ல தள்ளுனாப்புல என் குடும்பமே அல்லாட்டத்துல இருக்கு. சொந்தமா சின்ன ஓட்டு வீடு, வானம் பார்த்த மூணு ஏக்கர் நிலம், இதைத்தவிர எங்களுக்கு பெருசா சொத்துன்னு ஒண்ணுமில்லை. அதுல உழைச்சு, கிடைச்ச வருமானத்துல எங்களை வாழவச்சாங்க, அப்பாவும், அண்ணனும்.

அன்னலட்சுமி (வீரமலையின் மூத்த மகள்)
அன்னலட்சுமி (வீரமலையின் மூத்த மகள்)
நா.ராஜமுருகன்

இனி நான்தான் ஆம்பளைபுள்ளை மாதிரி இருந்து, இந்த குடும்பத்தைக் கரைசேர்க்கணும். எதிரிகளால் எங்கண்ணன் பையன் பொன்னர் உயிருக்கும் ஆபத்து இருக்கு. அவனை அவங்ககிட்ட இருந்து காப்பாத்தணும். எங்க குடும்பத்தை அழிச்சவங்களை சட்டப்படி தண்டிப்பேன். நிலத்துல விவசாயத்தைப் பார்த்து, உடைஞ்சு கிடைக்கும் குடும்பத்தை பாதுகாப்பேன். அதனால், `எனக்கு இந்த ஜென்மத்துல கல்யாணம் வேண்டாம்'னு முடிவு பண்ணிட்டேன். கல்யாண ஆசையை நெஞ்சுக்குள்ளேயே புதைச்சுக்கிட்டேன்" என்று சொல்லும்போதே, கண்ணீர் பெருக்கெடுக்கிறது. நாம் அவரை ஆசுவாசப்படுத்த முயல, அன்னலட்சுமி உடைந்து அழுகிறார்.

நிர்க்கதியாக நிற்கும் வீரமலை குடும்பத்துக்கு சமூக ஆர்வலர்கள் பலரும் உதவ முன்வந்திருக்கிறார்கள். தமிழ்நாடு முழுக்க இருந்து இனாம்புலியூர் வந்த, பல்வேறு நீர்நிலை பாதுகாப்பு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், வீரமலையின் உறவுகளுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு, ஒரு தொகையை முதல்கட்டமாக கொடுத்துச் சென்றிருக்கிறார்கள். வீரமலையின் குடும்பம் படும் அல்லலை கரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் `இணைந்த கைகள்' என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான சாதிக் அலியிடம் விவரித்தோம். அதைக்கேட்டு அதிர்ந்தவர்...

சாதிக் அலி (இணைந்த கைகள் அமைப்பு)
சாதிக் அலி (இணைந்த கைகள் அமைப்பு)
நா.ராஜமுருகன்

"அந்தக் குடும்பத்துக்கு எங்கள் அமைப்பு உதவும். ஆக்கிரமிக்கப்பட்ட ஏரியை மீட்கப் போராடிய அந்தக் குடும்பத்தை சமூகவிரோதிகள் வெட்டிக்கொன்றதால், அது அவர்களுக்கு மட்டுமான பிரச்னை இல்லை. அநியாயத்துக்கு எதிராக, சமூகத்துக்கு ஆதரவாகப் போராடுகிற ஒவ்வொரு சமூக ஆர்வலருக்கும் ஏற்பட்டுள்ள கொடுமையாகவே கருதவேண்டிருக்கு. இன்னைக்கு வீரமலை குடும்பத்துக்கு நடந்தது, நாளை நமக்கும் நடக்கும். அதனால், அந்தக் குடும்பத்தை தமிழகமே திரண்டு பாதுகாக்க வேண்டும்; அவர்களுக்கு உதவி பண்ணனும். முதல்கட்டமாக, வீரமலையின் பேரன் மற்றும் பேத்தி இருவரின் படிப்புச் செலவுகளை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். மற்ற உதவிகள் தேவைப்பட்டாலும் நாங்கள் செய்கிறோம். வீரமலை குடும்பத்தைப் பார்த்துவிட்டு, மற்ற விஷயங்களைச் சொல்கிறேன்" என்று உறுதி கொடுத்தார்.

இனி, சமூக விரோதிகளிடமிருந்து நீர்நிலைகளை மட்டுமல்ல, அதை பாதுகாக்கத் துடிக்கும் நல் இதயங்களையும் சேர்த்தே பாதுகாக்க வேண்டும் போலிருக்கிறது. எல்லாம் காலக்கொடுமை. வேறென்ன சொல்ல?!