Published:Updated:

மகளுக்குப் பிடித்த பாடலைப் பாடிய தந்தை!- கண்கலங்க வைத்த மெர்சியின் இறுதிச்சடங்கு

சென்னையில் கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்த பட்டதாரி பெண் மெர்சி. இவரின் இறுதி நிகழ்ச்சியில் அவருக்குப்பிடித்த பாடலை தந்தை பாடியது அனைவருக்கும் கண்ணீரை வரவழைத்தது.

மெர்சி
மெர்சி

சென்னை அடுத்த ஆவடி அருகில் உள்ள பட்டாபிராம், காந்திநகர், 1-வது தெருவைச் சேர்ந்தவர் தாமஸ். ஓய்வு பெற்ற காவலர். இவரின் மகள் மெர்சி (21). பி.காம் படித்துவிட்டு அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றிவந்தார். மெர்சிக்கும் அவரின் அத்தை மகனான இன்ஜினீயர் அப்புக்கும் திருமணம் நடத்த இருவீட்டிலும் முடிவு செய்யப்பட்டு அக்டோபர் 2-ம் தேதி நிச்சயதார்த்தமும் நடந்தது. கடந்த 4-ம் தேதி பைக்கில் சென்ற அப்பும் மெர்சியும் கிணற்றுக்குள் இறங்கினர். அப்போது கால் தவறிய மெர்சி, அப்புவின் மீது விழுந்தார். இதனால் இருவரும் தண்ணீருக்குள் விழுந்து உயிருக்குப்போராடினர்.

அப்பு, மெர்சி
அப்பு, மெர்சி
`அவளின் ஆசையை நிறைவேற்றத்தான் கிணற்றில் இறங்கினேன்!'- மெர்சி மரணத்தால் கண்ணீர்வடிக்கும் இன்ஜினீயர்

தண்ணீரில் தத்தளித்த மெர்சி உயிரிழந்தார். அப்பு உயிரோடு காப்பாற்றப்பட்டார். சம்பவ இடத்தில் என்ன நடந்தது என்பதை அப்பு நம்மிடம் விளக்கமாகக் கூறியிருந்த நிலையில் மெர்சியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியின் போது காவலர் தாமஸ், தன்னுடைய மகளுக்குப்பிடித்த பாடலைப் பாடியுள்ளார். அதைக் கேட்டவர்களும் கண்ணீர்மல்க அந்தப்பாடலைப் பாடியுள்ளனர்.

கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்த மெர்சி, பட்டாபிராமில் உள்ள சர்ச்சில் உள்ள பாடல்குழுவில் இருந்துள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகை நாள்களில் மெர்சி அழகாகப் பாடுவார். இதனால் ஆலயத்துக்கு வரும் அனைவருக்கும் மெர்சியை நன்றாகத் தெரியும். கிணற்றுக்குள் விழுந்து மெர்சி இறந்த தகவலையறிந்தவர்கள் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்தனர். கிறிஸ்துவ முறைப்படி மெர்சிக்கு இறுதி அஞ்சலி நடந்தது.

அப்போது திடீரென மைக்கைப்பிடித்த மெர்சியின் அப்பா தாமஸ், என் மகளின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு நன்றி. உம்முடைய (இயேசு) பாதத்தில் விதைக்கிறேன். நூறும் அறுபதுமாக பலப்படுத்தும். என் அன்புமகளை பரலோக ராஜ்ஜியத்தில் மனமகிழ்ச்சியாக வைத்திருப்பார் என்று பிரார்த்தனை செய்தார். அதைத் தொடர்ந்து மெர்சிக்கு ரொம்பப் பிடித்த கிறிஸ்தவப் பாடலான அல்லேலுயா, துன்பமும் துயரமும் வேதனையோ உம்மை விட்டு.... என்று தொடங்கும் பாடலைக் கண்ணீர்மல்க பாடினார். அதைக்கேட்ட அனைவரும் கண்ணீரோடு அந்தப்பாடலைப் பாடினர்.

மெர்சியின் தந்தை தாமஸ்
மெர்சியின் தந்தை தாமஸ்

கிணற்றுக்குள் விழுந்து தண்ணீரில் தத்தளித்த இன்ஜினீயர் அப்புவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மெர்சி இறந்த தகவல் 5-ம் தேதிதான் அப்புவுக்குத் தெரிவிக்கப்பட்டது. அதைக்கேட்டதும் அவர் கதறித் துடித்தார். மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குவந்த அப்பு, மெர்சியின் சடலத்தைப் பார்த்து கண்ணீர்விட்டு அழுதார். கல்லறைத் தோட்டத்தில் மெர்சியின் முகத்தைப் பார்க்க முடியாத அவர் சோகத்தோடு வீடு திரும்பினார்.