டெல்லியை சேர்ந்தவர் கனிகா கோயல், அவர் கணவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகள் இருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் நீதிமன்ற உத்தரவுப்படி கனிகாவின் முன்னாள் கணவர் தனது மகளை காண அமெரிக்காவில் இருந்து டெல்லி வருவது வழக்கம். இந்த ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதியில் இருந்து 18-ம் தேதி வரை தனது மகளை காண தனது தாயாருடன் கனிகாவின் முன்னாள் கணவர் டெல்லி வந்திருந்தார்.
அவர்கள் டெல்லியில் 5 ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் தங்கி இருந்தனர். கனிகா தனது மகளை கொண்டு வந்து அவர்களிடம் விட்டுவிட்டுச் சென்றார். அடிக்கடி தனது மகளுடன் போனில் கனிகா தொடர்பில் இருந்தார். இந்நிலையில் கடந்த 15-ம் தேதி திடீரென கனிகாவால் அவரின் மகளை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் மறுநாள் கனிகா தனது மகளை விட்டுச்சென்ற ஹோட்டலுக்கு சென்றார். ஆனால் அங்கு மகள், அவரின் முன்னாள் கணவர், மாமியார் என யாரையும் காணவில்லை.

உடனே இது குறித்து போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையின் போது கண்காணிப்பு கேமராவை சோதனை செய்ததில் 15-ம் தேதி இரவு 10.45 மணிக்கு மூன்று பேரும் ஹோட்டலில் இருந்து டாக்சியில் புறப்பட்டு சென்றது தெளிவாக தெரிந்தது. ஆனால் அதன் பிறகு அவர்கள் திரும்ப வரவில்லை. விசாரணையில் மூன்று பேரும் நேபாளத்துக்குப் புறப்பட்டு சென்று இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் டெல்லியில் உள்ள நேபாள தூதரகம் மற்றும் அமெரிக்க தூதரகத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். தாயும், மகனும் சேர்ந்து திட்டமிட்டு குழந்தையை கடத்தி சென்று இருப்பது தெரிய வந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
