Published:Updated:

`ஒரு வருஷம்தான் சிரமம், அப்புறம் மாசம் இரண்டரை லட்சம் சம்பளம்!'- சினிமாவை விஞ்சிய சென்னை சீட்டிங்

கப்பலில் வேலை எனக்கூறி இன்ஜினீயர்கள், பட்டதாரிகளை ஒரு டீம் ஏமாற்றியுள்ளது. அவர்கள் சிக்கிய கதை சினிமாவை விஞ்சும் வகையில் உள்ளது.

SHIP
SHIP

நெல்லை மாவட்டம், வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் சரண் (25). இவர், வேளச்சேரி காவல் நிலையத்தில் நேற்று புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது, ``என் தந்தை பில்டிங் கான்டிராக்டராக பணியாற்றிவருகிறார். என் அண்ணன் மஸ்கட்டில் குடும்பத்தோடு வசித்துவருகிறார். நான் இன்ஜினீயரிங் படிப்பை நெல்லையிலும் கடல்சார்ந்த படிப்பைக் கொச்சியிலும் படித்தேன். நான் கடல்சார்ந்த வேலைக்கு முயற்சி செய்தபோது ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த கண்ணன் என்பவர் கப்பல் வேலைக்கு ஆள்களை சேர்த்துவிடுவதாகத் தகவல் கிடைத்தது. இதனால் நானும் என் அப்பாவும் கண்ணனைச் சந்தித்தோம். அப்போது அவர், கப்பலில் டி.எம்.இ வேலை வாங்கித் தர 5,20,000 ரூபாய் செலவாகும் என்று கூறினார்.

அதன்பிறகு எனக்கு போன் செய்த கண்ணன், சென்னை வேளச்சேரிக்கு வருமாறு கூறினார். அதன்படி நான் கடந்த 24.6.2019-ல் வேளச்சேரி வந்தேன். அங்கு என்னைப் போல வேலையில் சேருவதற்காக ஆந்திராவைச் சேர்ந்த ரோகித், கேரளாவைச் சேர்ந்த விஷ்ணு ஆகியோர் வந்திருந்தனர். அப்போது ஆட்டோவில் பெலிக்ஸ், ஆதி, பாண்டியராஜன், ஆட்டோ டிரைவர் நவீன் ஆகியோர் அங்கு வந்தனர். அவர்கள் கண்ணன் அனுப்பியதாக எங்களிடம் கூறினர்.

SHIP
SHIP

வேலையில் சேருவதற்கான முன்பணத்தை பெலிக்ஸ், பாண்டியராஜன், ஆதி ஆகியோரிடம் கொடுத்தோம். பிறகு அவர்கள் இன்டர்வியூவுக்கு எங்களை அழைத்துச் செல்வதாகக் கூறினார்கள். அதற்காக மறுநாள் வேளச்சேரிக்கு வந்தோம். அங்குவந்த அவர்கள் எங்களை ஓ.எம்.ஆரில் உள்ள கப்பல் வேலை தொடர்பான கம்பெனிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு கம்பெனியின் மேலாளர் ஜெயக்குமார் என ஒருவர் எங்களிடம் பேசினார். ` நீங்கள் கொடுத்த அட்வான்ஸ் பணத்தில் எனக்கு பங்கு வந்துவிட்டது. மீதி தொகையை மெடிக்கல் டெஸ்ட்டுக்கு வரும்போது கொடுத்துவிட வேண்டும்' என்று கூறி எங்களின் கல்விச் சான்றிதழ்களை சரிபார்த்துவிட்டு அனுப்பிவைத்தார் ஜெயக்குமார்.

அதன்பிறகு 15 நாள்களுக்குப்பிறகு அவர் எங்களிடம் போனில் பேசினார். அப்போது, 5.7.2019-ம் அன்று மெடிக்கல் டெஸ்ட்டுக்கு தி.நகருக்கு வரும்படி கூறினார். அங்கு வந்த ஆதி, பெலிக்ஸ், பாண்டியராஜன் ஆகியோர் மீதிபணத்தை எங்களிடம் வாங்கிக் கொண்டனர். ரோகித் மட்டும் வங்கியின் மூலம் கண்ணனுக்கு 2,10,000 ரூபாயை அனுப்பி வைத்தார். எங்களைப் போல கப்பலில் வேலைக்குச் சேர்த்துவிடுவதாகக் கூறி, 58 பேரிடம் சுமார் 2 கோடி ரூபாய் வரை பணம் வாங்கியுள்ளார் கண்ணன். அதன்பிறகு அவர்கள் கப்பலில் எங்களுக்கு வேலை வாங்கித் தரவில்லை. இதுகுறித்து, பெலிக்ஸிடம் கேட்டபோது அவர் சரியான பதில் அளிக்கவில்லை.

Representational image
Representational image

வேலை கிடைக்காததால் எங்களிடம் பணத்தை வாங்கியவர்களைத் தேடிச் சென்றோம். ஆனால், அவர்கள் தலைமறைவாகிவிட்டனர். எனவே, கப்பலில் வேலைவாங்கித் தருவதாகக்கூறி எங்களை ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு பணத்தையும் கல்விச் சான்றிதழ்கள், பாஸ்போர்ட், கப்பலில் பயணிக்கக்கூடிய சான்றான சிடிஎஸ் ஆகியவற்றை மீட்டுத்தரும்படி கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

புகாரின்பேரில் அடையாறு துணை கமிஷனர் பகலவன் மேற்பார்வையில் வேளச்சேரி இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கப்பல் வேலைக்காக பணத்தை வாங்கி ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து பெலிக்ஸ், கண்ணன் ஆகியோரை போலீஸார் கைது செய்து அவர்களிடமிருந்து 45,100 ரூபாயையும் பறிமுதல் செய்துள்ளனர். தலைமறைவாக இருப்பவர்களைப் போலீஸார் தேடிவருகின்றனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சென்னை துரைப்பாக்கம் ஓ.எம்.ஆர். சாலை, மேட்டுக்குப்பம் பகுதியில் கடல்சார் வேலைவாய்ப்பு நிறுவனம் இயங்கிவருகிறது. இந்த நிறுவனத்தின் மூலம் கப்பல்களில் வேலை வாங்கித்தருவதாக கூறி சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த பெலிக்ஸ், ஸ்ரீவில்லிபுத்தூர் கண்ணன், திருப்பூர் பாண்டியராஜன், ராயபுரத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் மற்றும் சிலர் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தமிழகம் முழுவதும் கப்பலில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி விளம்பரப்படுத்தியுள்ளனர். அதை நம்பி தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மும்பை ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள், பல லட்சம் ரூபாய் கொடுத்து ஏமாந்துள்ளனர்.

FRAUD
FRAUD

பதவிக்கு ஏற்ப 5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை வாங்கியுள்ளனர். மேலும், பணம் கொடுத்தவர்களை நம்ப வைக்க அந்தக் கம்பெனியின் வளாகத்திலேயே இன்டர்வியூவும் நடத்தப்பட்டுள்ளது. அதற்கு அந்தக் கம்பெனியைச் சேர்ந்த ஒருவர் உதவியுள்ளார். பணத்தைக் கொடுத்தவர்கள் கம்பெனிக்குச் சென்று விசாரித்தபோதுதான், தாங்கள் ஏமாந்தது தெரியவந்துள்ளது. மேலும், போலி ஏஜென்டுகளான கண்ணன் மற்றும் அவரின் கூட்டாளிகள், கப்பலில் வேலை என நம்பவைத்துப் பலரை ஏமாற்றியுள்ளனர். இந்த வழக்கை வேளச்சேரி காவல் நிலையத்திலிருந்து சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றவுள்ளோம்" என்றனர்.

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில் ``கப்பலில் வேலை எனக்கூறி இன்ஜினீயர்கள், பட்டதாரிகளை ஏமாற்றியதில் ஒருவர் முன்னாள் அரசு வழக்கறிஞரின் உறவினர். இந்த மோசடிக் கும்பல் திட்டம் போட்டு செயல்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள பிரபலமான கடல் சார்ந்த படிப்பைக் கற்றுக் கொடுக்கும் பல்கலைக்கழகத்தில் படித்து முடித்தவர்களை குறிவைத்து ஏமாற்றியுள்ளது.

12 அல்லது 18 மாதங்கள் பயிற்சி காலத்துக்குப்பிறகு மாதம் 2,50,000 ரூபாய் சம்பளம் எனக்கூறியுள்ளனர். அதனால்தான் ஏராளமானவர்கள் இந்தக் கும்பலிடம் ஏமாந்துள்ளனர். பிரபலமான பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் கேப்டன் ஒருவருக்கும் இந்த மோசடியில் தொடர்பு உள்ளது. மோசடி செய்தவர்கள் கைதான தகவல் கிடைத்ததும் வாங்கிய பணத்தை கேப்டன் திரும்பக் கொடுத்துள்ளார். அவரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளோம்" என்றார்.

FIR
FIR

சிக்கியது எப்படி?

வேலைக்காக பணத்தைக் கொடுத்து ஏமாந்த சிலர், மோசடிக் கும்பலைப் பிடிக்க திட்டமிட்டனர். இதையடுத்து, கப்பலில் வேலை வேண்டும் என பெலிக்ஸ், கண்ணனிடம் போனில் அவர்கள் புதியதாக பேசுவதைப் போல பேசியுள்ளனர். அதை நம்பிய பெலிக்ஸ், கண்ணன் ஆகியோர் சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள ஓர் இடத்துக்கு வரச்சொல்லியுள்ளனர். அங்கு பணத்தோடும் கல்விச் சான்றிதழ்களோடும் வருகிறோம் எனக்கூறி பெலிக்ஸ், கண்ணன் ஆகியோரை நம்ப வைத்துள்ளனர். அதை நம்பிய இருவரும் பணம் வாங்கக் காத்திருந்த சமயத்தில் பணத்தைக் கொடுத்து ஏமாந்தவர்கள் அங்கு சென்றுள்ளனர். அவர்களைப் பார்த்த பெலிக்ஸ், கண்ணன் அதிர்ச்சியடைந்ததோடு தப்பிச் செல்ல முயற்சி செய்துள்ளனர். ஆனால், பணத்தைக் கொடுத்து ஏமாந்தவர்கள் இருவரையும் பிடித்து துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பணம் கொடுத்தவர்களிடம், `நீங்கள் ஒரு வருஷம் கஷ்டப்பட்டால் அடுத்த வருஷம் மாதம் இரண்டரை லட்சம் ரூபாய் சம்பளம் கிடைக்கும்' என்று மோசடிக் கும்பல் கூறியுள்ளது.

மோசடிக் கும்பலால் நம்பவைத்து ஏமாற்றப்பட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த பட்டதாரி சரவணன் நம்மிடம் ``ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள பிரபலமான கடல்சார் வேலைவாய்ப்பு நிறுவனத்தின் ஏஜென்ட்கள் என்று கூறியதோடு அந்த நிறுவனத்திலேயே எனக்கு இன்டர்வியூ நடத்தியதால்தான் பணத்தையும் கல்வி சான்றிதழ்களையும் பாஸ்போர்ட், சிடிஎஸ் போன்ற ஆவணங்களையும் நம்பிக்கையுடன் கொடுத்தேன். நான் ஏமாற்றப்பட்ட தகவல் கிடைத்ததும் சென்னைக்கு வந்து புகார் கொடுத்துள்ளேன்" என்றார்.