Published:Updated:

அதிவேகமாகப் பறந்த கார்; துப்புக் கொடுத்த கேட்டரிங் ஊழியர்! - கேரளாவை அதிரவைத்த தொழிலதிபர் கொலை

மனோகரன்
மனோகரன் ( Manorama )

கேரள பெட்ரோல் பங்க் உரிமையாளர் கொலை திட்டமிட்டு பணத்துக்காக அரங்கேற்றப்பட்டுள்ளது. குற்றவாளிகள் அளித்த வாக்குமூலத்தில் அவர்கள் நடத்திய நாடகம் வெளிவந்துள்ளது.

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம், கைப்பமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன் (68). இவர் அதே பகுதியில் சொந்தமாக பெட்ரோல் பங்க் நடத்திவந்துள்ளார். கடந்த இரு நாள்களுக்கு முன்பு தன்னுடைய வீட்டுக்கு இரவு நேரத்தில் செல்லும்போது, இவரின் மகள் போன் செய்துள்ளார். அப்போது போனை எடுத்த மர்ம நபர், `மனோகரன் காரில் தூங்கிக்கொண்டிருக்கிறார். சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்துவிடுவார்’ எனத் தெரிவித்துள்ளனர்.

பெட்ரோல் பங்க்
பெட்ரோல் பங்க்

மறுநாள் காலை வரை அவர் வராததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர், திருச்சூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. புகார் அளிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே சாலையோரத்தில் மனோகரன் இறந்து கிடந்த தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த காவலர்கள் மனோகரனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

அதற்குள், திருவரங்காடு ரயில்நிலையம் அருகில் மனோகரனின் கார் நிற்பதாகத் தகவல் கிடைக்க, அதையும் மீட்டு சோதனை நடத்தினர். இந்தச் சோதனை நடந்துகொண்டிருக்கும்போதே, பிரேதப் பரிசோதனையில் மனோகரன் மூச்சுத் திணறி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இதனால் தீவிர விசாரணையில் இறங்கிய போலீஸார், முதலில் அவரின் பெட்ரோல் பங்கில் விசாரணை நடத்திவிட்டு அருகிலிருந்த சிசிடிவி காட்சிகளைச் சோதனை செய்தனர்.

கேரளா கொலை
கேரளா கொலை
Manorama

அந்த வீடியோவில் மூன்று நபர்கள் நீண்டநேரமாக மனோகரை நோட்டமிட்டு இறுதியாக அவர் சென்ற காரைப் பின்தொடர்ந்தது தெரியவந்தது. மர்மநபர்கள் மீது தங்கள் பார்வையைத் திருப்பிய போலீஸார் அந்த மூன்றுபேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மனோகரன் எதற்காக கொல்லப்பட்டார், அந்த மூவர் அவரை எப்படிக் கொலை செய்தனர் என்ற தகவல் தெரியாமல் இருந்த நிலையில், `மனோகரனை நாங்கள்தான் கொலை செய்தோம்' என அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். பெயர் குறிப்பிடப்படாத அந்த மூன்று பேரும் அளித்த வாக்குமூலம் தற்போது வெளியாகி கேரள போலீஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

`அவளா இப்படிச் செய்தாள், என்னால் நம்பவே முடியவில்லை'- கேரள ஜோலியின் உண்மை முகத்தை விவரிக்கும் தோழி

திட்டமிட்ட கொலை!

பெட்ரோல் பங்க் உரிமையாளரான மனோகரன், தினமும் இரவு வேலையை முடித்துவிட்டு அன்று வசூலான பணத்தை காரில் வைத்துக்கொண்டு வீட்டுக்குக் கொண்டு செல்வார். இதை அறிந்த குற்றவாளிகள் கடந்த சில நாள்களாகவே அவரை நோட்டமிட்டுள்ளனர். மனோகரன் செல்லும் வழியில் மிகவும் இருட்டாக உள்ள ஓர் இடத்தைத் தேர்வு செய்த அவர்கள், எப்படிப் பணத்தைக் கொள்ளையடிக்க வேண்டும் என்ற முழு பிளானுடன் களத்தில் இறங்கியுள்ளனர். சம்பவம் நடந்த அன்று இரவு வழக்கம் போல் மனோகரன் காரில் தனியாக வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்துள்ளார். இவர் வருகையை எதிர்பார்த்து இருசக்கர வாகனத்துடன் மர்மக் கும்பல் காத்திருந்தது.

கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்
Manorama

மனோகரன் வரும் சமயத்தில் அவருக்கு எதிர்த் திசையில் வந்து காரில் மோதியுள்ளனர். குற்றவாளிகளில் ஒருவர், தனக்கு அடிபட்டது போல சாலையில் இடறி விழுகிறார். என்ன நடந்தது எனக் கேட்பதற்காகக் காரைவிட்டு இறங்கி வந்த மனோகரனை அந்தக் கும்பல் சரமாரியாகத் தாக்கி அவரைக் காருக்குள்ளேயே அடைக்கின்றனர். அப்போது மனோகரன் கத்தாமல் இருக்க வேண்டும் என்பதற்காக டேப் கொண்டு அவரது வாய், கை, கால்களைக் கட்டியுள்ளனர்.

இவை அனைத்தையும் சில நிமிடங்களில் நிகழ்த்தியுள்ளனர். அதற்குள் மூன்று பேரில் ஒருவர், தங்களுடைய இருசக்கர வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு அவரும் காரில் ஏறிக்கொள்கிறார். ஒருவர் காரை இயக்க மற்ற இருவரும் பின்பக்கச் சீட்டில் அமர்ந்துகொண்டு பணம் கேட்டு மனோகரனைத் தாக்கியுள்ளனர். தன்னிடம் பணம் இல்லை என அவர் கூறியும் அதைக் கேட்காத குற்றவாளிகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 2 மணிநேரமாக அவரைத் தாக்கியுள்ளனர்.

அரசியல் கட்சித் தலைவரை சந்தித்த ஜோலி; 2-வது கணவரின் தலையீடு! -கேரள சீரியல் கொலையில் திடீர் திருப்பம்

வலி தாங்கமுடியாத மனோகரன் மூச்சுத் திணறல் ஏற்பட்டு காருக்குள்ளேயே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இதனால் பதற்றமடைந்த அந்தக் கும்பல் அவரது உடலைச் சாலையிலேயே போட்டுவிட்டு காரில் பறந்துள்ளது.

திருச்சூரிலிருந்து மலப்புரம் நோக்கி அவர்கள் சென்றுகொண்டிருக்கும்போது, யாருக்கும் சந்தேகம் வரக் கூடாது என்பதற்காக மனோகரின் கார் பதிவு எண்ணை மாற்றியுள்ளனர். தினமும் மனோகரன் எடுத்துச் செல்லும் 5 லட்சம் ரூபாய்க்கு ஆசைப்பட்டு அவரைக் காரில் கடத்தியுள்ளனர், ஆனால் அன்றைய தினம் துரதிஷ்டவசமாக மனோகரன் பணம் எடுத்துச் செல்லவில்லை எனப் போலீஸாரிடம் பிடிபட்டவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

க்ரைம்
க்ரைம்

துப்பு கொடுத்த கேட்டரிங் ஊழியர்!

மனோகரனின் பக்கத்து வீட்டுக்காரர் சமையல் ஊழியராக வேலை செய்துவருகிறார். மனோகரன் கொல்லப்பட்ட அன்றைய தினம் இரவு, இவர் வீட்டுக்குச் சென்றுகொண்டிருக்கும்போது மனோகரனின் கார் அதிவேகமாகச் சென்றதைப் பார்த்துள்ளார். மனோகரன் இவ்வளவு வேகமாக கார் ஓட்டமாட்டாரே என அப்போதே அவருக்குச் சந்தேகம் எழுந்துள்ளது.

மறுநாள் காலை மனோகரன் காணாமல் போயுள்ளார் என அறிந்ததும், தான் பார்த்த சம்பவத்தை போலீஸில் தெரிவித்துள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டுதான் காருடன் தப்பியவர்களைக் காவலர்கள் கைது செய்துள்ளனர். கேரளாவில் தொடர்ந்து நடக்கும் பயங்கரக் கொலைகளால் அம்மாநில மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

News Credits : Mathrubhumi

அடுத்த கட்டுரைக்கு