தமிழகம் முழுவதும் தனியார் நிதி நிறுவனம் ஒன்று அதிக வட்டி தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக, பாதிக்கப்பட்டவர்கள் புகாரளித்திருந்த நிலையில் பொருளாதார குற்றப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்துவருகின்றனர்.
புகாரின் அடிப்படையில் போலீஸார், அந்த நிதி நிறுவனத்தின் சோழவந்தான் கிளை பங்குதாரர் காரைக்குடி சாமியார் தோப்பு பகுதியைச் சேர்ந்த பழனியப்பன், சோழவந்தானைச் சேர்ந்த மருதுபாண்டி, ராஜு, மோகனசுந்தரம் ஆகியோரைக் கைதுசெய்தனர். இதையடுத்து, கைதானவர்கள் நான்கு பேரும் தினமும் ராமநாதபுரம் பொருளாதார குற்றப் பிரிவில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதன்படி நான்கு பேரும் தேவிப்பட்டினத்தில் விடுதி ஒன்றில் தங்கியிருந்து பொருளாதார குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் கையெழுத்திட்டுவந்தனர்.

இந்த நிலையில், நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த சுப்பையா என்ற சுரேஷ், முருகன், மேலும் இரண்டு நபர்கள் இவர்களிடம் பணம் கொடுத்து ஏமாந்திருக்கின்றனர் எனச் சொல்லப்படுகிறது. இதையடுத்து, பழனியப்பன் உள்ளிட்ட நான்கு பேரும் ராமநாதபுரத்தில் தங்கியிருந்து, காவல் நிலையத்தில் கையெழுத்திட்டுவருவதை பாதிக்கப்பட்டவர்கள் அறிந்துகொண்டனர். அதோடு, ராமநாதபுரம் புக்குளத்தைச் சேர்ந்த முத்து பிரகாஷ் என்பவர் உதவியுடன், இவர்கள் ராமநாதபுரத்தில் தங்கியிருந்து நோட்டமிட்டு வந்திருக்கின்றனர்.
அதன்படி, கடந்த வாரம் வழக்கம்போல் குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு இரண்டு மோட்டார் சைக்கிள்களில் நான்கு பேரும் தேவிப்பட்டினத்துக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களைப் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் காரில் பின்தொடர்ந்து விரட்டிச் சென்று, கிழக்கு கடற்கரை சாலை பழங்குளம் அருகே பழனியப்பன், மருதுபாண்டி ஆகியோரின் மோட்டார் சைக்கிளை மறித்து பணத்தைக் கேட்டிருக்கின்றனர். அவர்கள் இருவரும் பிடிப்பட்டதைக் கண்டு ராஜு, மோகனசுந்தரம் ஆகியோர் தப்பிச் சென்றனர். அதேபோல் மருதுபாண்டியும் அந்த வழியாக வந்த பேருந்தில் ஏறித் தப்பினார். இதையடுத்து பழனியப்பனைப் பணம் கேட்டு காரில் கடத்திச் சென்றனர்.

இது குறித்து மருதுபாண்டி தேவிபட்டினம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதையடுத்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின்பேரில், கேணிக்கரை இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். போலீஸார் தேடி வருவதை அறிந்து பழனியப்பனை சென்னையிலேயே விட்டுவிட்டு சுரேஷ் உள்ளிட்டோர் தப்பிச் சென்றுவிட்டனர். இதையடுத்து போலீஸார் பழனியப்பனை மீட்டு நேற்று ராமநாதபுரத்துக்கு அழைத்துவந்தனர். இது தொடர்பாக, கடத்தல் கும்பலுக்கு உதவியாக இருந்த முத்துபிரகாஷைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்தக் கடத்தல் சம்பவம் ராமநாதபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.