Published:Updated:

விழுப்புரம்: கொரோனாவால் வேலை இல்லை; மாடுகள் தொடர் திருட்டு! - 6 பேர் கொண்ட கும்பல் சிக்கியது எப்படி?

கைதுசெய்யப்பட்ட மாடு திருட்டுக் கும்பல்.
கைதுசெய்யப்பட்ட மாடு திருட்டுக் கும்பல்.

பகல் நேரங்களில் உளவு பார்த்து, நள்ளிரவு நேரங்களில் மாடுகளைத் தொடர்ந்து திருடி விற்பனை செய்துவந்த ஆறு நபர்களைக்கொண்ட கும்பல் நேற்று முன்தினம் பிடிபட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏழை மக்களின் மாடுகள் தொடர்ந்து திருட்டுப்போகும் சம்பவங்கள் அண்மை மாதங்களாக அரங்கேறிவந்தன. இந்தநிலையில், திண்டிவனத்திலுள்ள தனியார் உணவகம் அருகே திண்டிவனம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆனந்தராசன் நேற்று முன்தினம் (06.07.2021) காலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியே, இரண்டு மாடு மற்றும் கன்றை ஏற்றிக்கொண்டு ஒரு வாகனமும் (டாட்டா ஏஸ்), அந்த வாகனத்தைத் தொடர்ந்து ஜீப் ஒன்றும் வந்திருக்கிறது. இரண்டு வாகனங்களையும் நிறுத்தி அவற்றிலிருந்த ஆறு நபர்களையும் விசாரித்தபோது, ஒருவருக்கு ஒருவர் முரணான பதில்களைக் கூறியுள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியபோது, மாடுகளைத் திருடி விற்பனை செய்துவந்ததும், அப்போது அச்சிறுப்பாக்கத்தைச் சேர்ந்த மாடு வியாபாரி ஒருவரிடம் மாடுகளை விற்பனை செய்ய வாகனத்தில் ஏற்றிச் சென்றதும் தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட 6 நபர்கள்.
கைதுசெய்யப்பட்ட 6 நபர்கள்.

மாடுகளைத் திருடி விற்பனை செய்துவந்த தமிழ்ராஜ், மணிகண்டன், அஜித்குமார், ஆனந்தபாபு, திருமூர்த்தி, அய்யனார் ஆகிய ஆறு பேரையும் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தின்படி, திண்டிவனம், ரோஷனை, ஒலக்கூர் காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் திருடப்பட்ட, வெவ்வேறு பகுதிகளிலிருந்த 10 மாடுகளையும், வாகன சோதனையின்போது சிக்கிய மூன்று மாடுகளையும் சேர்த்து மொத்தம் 13 மாடுகளை மீட்டதோடு, கடத்தலுக்குப் பயன்படுத்திய மினி சரக்கு வாகனம் மற்றும் ஜீப்பையும் பறிமுதல் செய்துள்ளனர் காவல்துறையினர்.

வியாபாரப் பேச்சு; கலர் ஜெராக்ஸ் பணம்; ஆடு மேய்க்கும் முதியவர்களைக் குறிவைக்கும் நூதன கும்பல்!

இது தொடர்பாக திண்டிவனம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆனந்தராசனிடம் பேசினோம். ``நேற்றுக் காலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, மாடுகளை ஏற்றிவந்த வாகனத்தையும், பின்னால் வந்த ஜீப்பையும் நிறுத்தி விசாரித்தோம். 'எங்களுடைய மாடுகள்தான்' என்றும் அச்சிறுப்பாக்கத்தில் விற்பனைக்காக மாடுகளை ஏற்றிச் செல்வதாகவும் கூறினர். பார்ப்பதற்கு வயதில் சிறியவர்களாகத் தெரிந்தனர். தமிழ்ராஜ் என்பவரிடம் தொடர்ந்து விசாரித்ததில் மாடுகளைத் திருடி விற்பனை செய்துவந்ததை ஒப்புக்கொண்டார்.

ரோஷனை, திண்டிவனம், ஒலக்கூர் காவல் பகுதிகளில் திருடப்பட்ட மொத்தம் 13 மாடுகளை மீட்டு, சம்பந்தப்பட்ட உரிமையாளர்களிடம் ஒப்படைத்துவிட்டோம். தமிழ்ராஜ் என்பவர் சிறுவந்தாடு பகுதியில் துணிக்கடை மற்றும் உணவகத்தை வைத்து நடத்திவருகிறார். கொரோனா காலத்தில் வேலை இல்லாமல் போகவே, தனக்கு நெருக்கமான நபர்களின் உதவியோடு மாடுகளைத் திருடி விற்பனை செய்யத் தொடங்கியுள்ளனர். அவர்கள் வைத்திருக்கும் ஜீப் மூலம் பகல் நேரத்தில் சுற்றிப் பார்த்துவிட்டு, ஆட்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும் இடங்களைக் கண்டறிந்துகொண்டு இரவு 12 மணிக்கு மேல் ஜீப் மற்றும் டாட்டா ஏஸ் வாகனத்துடன் சென்று மாடுகளைத் திருடி கைவரிசையைக் காட்டிவந்துள்ளனர். பெரும்பாலும் போலிஸ் கண்ணில் சிக்காதவாறு கிராமப்புறச் சாலைகள் மூலமாகவே சென்று வந்துள்ளனர். யாருக்கும் சந்தேகம் வராதபடி செயல்பட்டுள்ளனர். உதாரணமாக, இன்று காலை அந்தப் பகுதியில் நெருங்கிய இடங்களில் சந்தை நடக்கும் என்றால், அதற்கு முன்தினம் இரவு மாடுகளைத் திருடி வந்துள்ளனர். யாராவது கேட்டால் 'சந்தைக்குப் போகிறது மாடு' என்று சொல்வதற்கு ஏற்ப செயல்பட்டுள்ளனர்.

மாதிரி படம் - மாடு
மாதிரி படம் - மாடு

அவர்களுடைய போன் நம்பரை ட்ரேஸ் செய்தபோதும், இரவு நேரங்களில் மூவிங்கில் இருந்தது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் விசாரித்தபோது, செஞ்சி, விழுப்புரம், கோட்டகுப்பம் போன்ற பல பகுதிகளில் மாடுகளைத் திருடி விற்பனை செய்துவந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. ஆறு பேர் மீதும் திருட்டு வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைத்துள்ளோம். மேலும் தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் தெரிவிக்கிறோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு