Published:Updated:

மகாராஷ்டிரா: 'ரமணா' பட பாணி; இறந்த பெண்ணுக்குச் சிகிச்சை; சிக்கிய மருத்துவர்!

யோகேஷ், சலீம், சாய்ரா
யோகேஷ், சலீம், சாய்ரா

மகாராஷ்டிராவில் இறந்த பெண் ஒருவரை, பணத்துக்காக உயிருடன் இருப்பதாகக் கூறி சிகிச்சையளித்த டாக்டர் கைதுசெய்யப்பட்டார்.

இறந்தவர்களின் உடலை வைத்துக்கொண்டு சிகிச்சையளித்து கூடுதல் பணம் வசூலிப்பதைத் திரைப்படங்களில்தான் பார்த்திருக்கிறோம். ஆனால் அது போன்ற ஒரு சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள சாங்கிலியில் ஆதார் ஹெல்த்கேர் என்ற மருத்துவமனை செயல்பட்டுவருகிறது. இந்த மருத்துவமனையில் சாய்ரா ஹமீத் ஷேக் என்ற பெண் லேசான பக்கவாதத்துடன் சிகிச்சைக்காகக் கொண்டுவரப்பட்டார்.

ஆதார் ஹெல்த்கேர்
ஆதார் ஹெல்த்கேர்

அவரைச் சோதித்துவிட்டு இரண்டு நாள்களில் அனுப்பிவிடுவதாக டாக்டர் யோகேஷ் தெரிவித்தார். ஆனால் சாய்ராவுக்கு உடல்நிலை திடீரென மேலும் பாதிக்கப்பட்டது. அவருக்குச் செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டது. சாய்ராவுக்குத் தொடர்ந்து சிகிச்சையளிக்க வேண்டும் என்று அவரின் மகன் சலீம் ஷேக்கிடம் தெரிவிக்கப்பட்டது. இதனால் தொடர்ந்து சாய்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தொற்று ஏற்பட்டுவிடும் என்று கூறி, சாய்ராவின் அருகில் உறவினர்கள் யாரும் செல்லக் கூடாது என்று டாக்டர்கள் தெரிவித்திருந்தனர்.

இறந்த பெண்ணுக்கு சிகிச்சை
இறந்த பெண்ணுக்கு சிகிச்சை
Representational image
சென்னை: `ஆட்டோவில் கடத்தப்பட்ட இளம்பெண்; புத்திசாலித்தனமாகத் தப்பித்தது எப்படி?'

இது குறித்து சலீம் ஷேக் கூறுகையில், ``என் தாயார் எந்த அசைவும் இல்லாமல் படுத்திருந்தார். கண்கள் மூடப்பட்டிருந்ததால் அவர் உறக்கத்தில் இருப்பதாக நினைத்தோம். ஆனால், திடீரென எங்களை அழைத்த டாக்டர் எங்கள் தாயார் இறந்துவிட்டதாகத் தெரிவித்தார். நாங்கள் சென்றபோது எனது தாயாரின் கண், காது, மூக்கிலிருந்து ரத்தம் வந்திருந்தது. கண் வெளியில் வந்திருந்தது. அதோடு எனது தாயாரின் உடலிலிருந்து துர்நாற்றம் வீசியது. உடனே டாக்டரிடம் சென்று இது குறித்துக் கேட்டு வாக்குவாதம் செய்தோம். ஆனால் அவர்கள் உடலை உடனே எடுத்துச் செல்லும்படி கூறினர். நாங்கள் மேற்கொண்டு வாக்குவாதம் செய்யாமல் உடலை எடுத்து வந்தோம். சிகிச்சைச் செலவாக ரூ.2.15 லட்சம் செலுத்த வேண்டும் என்று சொன்னார்கள். சிறிது கட்டணச் சலுகை கொடுத்து ரூ.1.83 லட்சத்தை செலுத்தினோம். சில நாள்கள் கழித்து மருத்துவமனையில் இறப்புச் சான்றிதழை வாங்கியபோது அதில் என் தாயார் இறந்த தேதியை டாக்டர்கள் சொன்ன தேதியைக் குறிப்பிடாமல் இரண்டு நாள்கள் முன் தேதியிட்டுக் குறிப்பிட்டிருந்தனர். தாயார் இறந்த பிறகு இரண்டு நாள்கள் மருத்துவமனையில் வைத்திருந்து, கூடுதலாக 40,000 ரூபாய் கட்டணம் வசூலித்துள்ளனர். இது குறித்து உடனே போலீஸில் புகார் செய்தேன்’’ என்றார். இந்தப் புகாரைத் தொடர்ந்து போலீஸார் வழக்கு பதிவு செய்து, டாக்டர் யோகேஷைக் கைதுசெய்துள்ளனர். இதற்கு முன்பு அவர் வேறு யாராவது நோயாளிகளிடம் இது போன்று மோசடி செய்தாரா என்பது குறித்து மேற்கொண்டு விசாரித்துவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு