காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் தானபிள்ளை வீதியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரின் மனைவி அன்னலட்சுமி (42). இவரை நேற்று முன்தினம் யாரோ படுகொலை செய்து கழிவுநீர் கால்வாயில் வீசியிருந்தனர். தகவலறிந்த போலீஸார் அன்னலட்சுமியின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். சந்தேகத்தின் பேரில் 15 பேரிடம் போலீஸார் விசாரித்ததில், அன்னலட்சுமியில் எதிர்வீட்டில் வசிக்கும் வாலிபர் சாகுல் ஹமீது கைதுசெய்யப்பட்டார். அவரிடம் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.
அன்னலட்சுமிக்கும் சிதம்பரத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்பவருக்கும் திருமணம் நடந்தது. சுமார் 15 வருடங்களுக்கு முன் பாஸ்கர் மரணமடைந்தார். இந்தத் தம்பதிக்கு குழந்தை இல்லை. அக்கம் பக்கம் உள்ளவர்களிடமிருந்து அன்னலட்சுமி எப்போதும் விலகியே வாழ்ந்துவந்திருக்கிறார். அவ்வப்போது அந்தப் பகுதிவாசிகளிடம் அன்னலட்சுமி தகராறு செய்தும்வந்திருக்கிறார். சண்டையில் வாய்க்கு வந்தபடி ஏசுவதால் இவர் மீது திருப்பட்டினம் காவல்நிலையத்தில் வழக்குகளும் நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

சம்பவத்தன்று விடியற்காலை அன்னலட்சுமியின் எதிர் வீட்டில் வசிக்கும் சாகுல் ஹமீது, சிறுநீர் கழிக்க வீட்டிலிருந்து வெளியே வந்திருக்கிறார். அதைப் பார்த்த அன்னலட்சுமி சாகுல் ஹமீதுடன் வாக்குவாதத்தில் ஈடுபட, தொடர்ந்து அருவருக்கத்தக்க வார்த்தைகளால் சாகுல் ஹமீதை அன்னலட்சுமி ஏசியதால் கைகலப்பானது. இதில், மூங்கில்தடியை எடுத்து அன்னலட்சுமியின் தலையில் அடித்திருக்கிறார் சாகுல் ஹமீது. இதில் சம்பவ இடத்திலேயே அன்னலட்சுமி உயிரிழந்துள்ளார். இதனால் பயந்துபோன சாகுல் ஹமீது, அன்னலட்சுமியின் உடலை அருகிலிருந்த கழிவுநீர் கால்வாயில் தள்ளிவிட்டு ஏதும் அறியாதவர்போல வீட்டுக்குள் சென்றுவிட்டார்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இது பற்றி போலீஸ் தரப்பில் விசாரித்தோம். ``அன்னலட்சுமியின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட சாகுல் ஹமீது "ஐயோ... அக்கா... உன்னை எந்தப் பாவி கொலை செஞ்சான்?" என்று பலவும் கூறி கதறி அழுதார். தன்மீது சந்தேகம் வராதபடி சுடுகாடு வரை சோகமாகச் சென்றார்.
ஏற்கெனவே விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதாலும், அவரின் போலிக் கதறாலும் சந்தேகம் ஏற்படவே, மீண்டும் விசாரணை செய்ததில், அன்னலட்சுமியைக் கொன்றதை சாகுல்ஹமீது ஒப்புக்கொண்டார். பலமுறை பொது இடங்களில் ஏசியதாலும், தன்னிடம் தரக்குறைவாக நடந்தும், தகாத வார்த்தைகளால் பேசவும் செய்ததாலேயே மூங்கில்தடியை எடுத்தது அன்னலட்சுமியின் தலையில் பலமுறை அடித்துக் கொன்றதாக சாகுல் ஹமீது வாக்குமூலம் தரவே, அவரை காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து புதுச்சேரி மத்திய சிறையில் அடைத்திருக்கிறோம்" என்றனர்.