Published:Updated:

கஷ்டத்தில் குடும்பம்; ரூ.50 லட்சம் இன்ஷூரன்ஸ்! - தன்னையே கொல்ல ரூ.80,000 கொடுத்த கந்துவட்டிக்காரர்

சத்யா கோபாலன்

ராஜஸ்தான், பல்பீர் சிங்கின் கொலையில் சிக்கியவர்கள் கொடுத்துள்ள வாக்குமூலம் காவலர்களை அதிரவைத்துள்ளது.

Murder
Murder

ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா நகரைச் சேர்ந்தவர் 38 வயதான பல்பீர் சிங் கரோல். இவர் தன் பகுதியில் உணவகம் நடத்திக்கொண்டு, வட்டிக்கு விட்டு பணம் வசூலிக்கும் தொழிலும் செய்து வருகிறார். மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோருடன் வசித்து வருகிறார் பல்பீர். இந்நிலையில் கடந்த செப்டம்பர் 2-ம் தேதி ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள ஒரு காட்டுப் பகுதியில் பல்பீர் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.

Crime
Crime

அந்த வழியாகச் சென்ற சிலர் பல்பீரை பார்த்துவிட்டு காவலர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர், சம்பவ இடத்துக்கு வந்த காவலர்கள் இறந்தவரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பிறகு, அவரின் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து வந்த பிரேதப் பரிசோதனை அறிக்கையில் , பல்பீர் கழுத்து நெறிக்கப்பட்டு மூச்சுச் திணறி உயிரிழந்துள்ளார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து பல்பீர் மரணத்தில் சந்தேகம் அதிகரிக்கவே, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தீவிரப் படுத்தினர் பில்வாரா நகர காவல்துறையினர். இதற்காக, பல்பீரின் செல்போன் அழைப்புகள், அவரது வீட்டுக்கு அருகில் உள்ள சிசிடிவி கேமரா போன்ற அனைத்தையும் சோதனை செய்துள்ளனர். விசாரணையின் முடிவில் அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்வீர் சிங் மற்றும் சுனில் யாதவ் ஆகிய இருவர் மீது காவலர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

Rajvir Singh, Sunil Yadav
Rajvir Singh, Sunil Yadav
Dainik Bhaskar.com

இதையடுத்து கடந்த திங்கள்கிழமை கைது செய்யப்பட்ட அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இருவரும் கூறிய வாக்குமூலத்தைக் கேட்டு மொத்த காவல்துறையினரும் அதிர்ந்து போயுள்ளனர். வாக்குமூலம் பற்றிப் பேசிய காவல்துறை கண்காணிப்பாளர் மஹாவீர், ``வட்டிக்கு விட்டு பணம் வசூலிப்பதுதான் பல்பீர் சிங்கின் தொழில். சிறப்பாகச் சென்று கொண்டிருந்த அவரது தொழில் கடந்த ஆறு மாதமாக நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. பல்வேறு நபர்களிடம் அளித்திருந்த 20 லட்சம் ரூபாயை வசூலிக்க முடியாமல் திணறி வந்துள்ளார்.

Vikatan

அதனால் ஆறு மாதங்களாகவே கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்த பல்பீர், இதனால் தன் குடும்பம் எந்த கஷ்டத்தையும் அனுபவிக்கக் கூடாது என நினைத்துள்ளார். கடந்த மாதம் ஒரு தனியார் வங்கிக்குச் சென்று தன் பெயரில் 50 லட்சம் ரூபாய்க்கு இன்ஷூரன்ஸ் எடுத்துள்ளார். தான் இறந்தால் அந்தப் பணம் தன் குடும்பத்துக்குச் செல்ல வேண்டும் என யோசித்து அதில் அவர்கள் பெயரையும் சேர்த்துள்ளார்.

Insurance
Insurance

இன்ஷூரன்ஸுக்குக்கான முதல் மாத தவணை செலுத்திய பின்னர் நேராகச் சென்று கைது செய்யப்பட்ட இருவரையும் சந்தித்து நடந்த சம்பவங்கள் அனைத்தும் கூறியுள்ளார். தன்னைக் கொலை செய்தால் அவர்களுக்கு 80,000 ரூபாய் பணம் கொடுப்பதாகத் தெரிவித்து, முன் பணமாக ரூ.10,000 கொடுத்துவிட்டு மீதி பணம் தன்னை கொலை செய்யும்போது தன் பாக்கெட்டில் இருக்கும் எனக் கூறிவிட்டு வந்துள்ளார். குற்றவாளிகளும் இதற்கு ஒப்புக்கொண்டுள்ளனர்.

இறுதியாகக் கடந்த செப்டம்பர் 2-ம் தேதி திட்டமிட்டப்படி யாரும் இல்லாத இடத்துக்குச் சென்று இருவரும் பல்பீரை கொலை செய்துள்ளனர். குற்றவாளிகளில் ஒருவர் பல்பீரின் கை, கால்களைக் கட்டியுள்ளார். மற்றொருவர் கழுத்தை நெறித்து அவரை கொலை செய்துள்ளார். பின்னர், பல்பீரில் பாக்கெட்டில் இருந்த பணத்தை இருவரும் எடுத்துக்கொண்டு எதுவும் நடக்காதது போல் சென்றுள்ளனர். ’கடன் சுமையால் தன் குடும்பம் கஷ்டப்படக் கூடாது’ என்பதாக இப்படிச் செய்துள்ளார் பல்பீர் சிங். இதனால் தன்னைக் கொல்லத் தானே திட்டம் போட்டுக் கொடுத்துள்ளார்” எனக் கூறியுள்ளார் காவல் அதிகாரி.

Rajasthan police
Rajasthan police

ஆனால், இதை மறுத்துள்ள பல்பீர் சிங்கின் சகோதரர் மகேந்திர சிங், “பல்பீர் ஒரு நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர். தன் உணவகத் தொழிலில் தற்போதுதான் வளர்ந்து வருகிறார். அவர் பொருளாதார பிரச்னையில் உள்ளார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. தன்னை கொல்ல 80,000 அளித்துள்ளார் என்றால் அவருக்கு உடனடியாக அவ்வளவு பணம் கிடைத்திருக்க வாய்பில்லை. எனவே, காவலர்கள் இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார். பல்பீர் சிங் இறப்பில் யார் மீதேனும் சந்தேகம் உள்ளதா எனக் காவலர்கள், அவர்களின் உறவினரிடம் விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.