புதுக்கோட்டை நகர்ப் பகுதிக்குட்பட்ட வசந்தபுரி பகுதியைச் சேர்ந்தவர் சோலைகணேசன். இவர் திருமணமாகி விவாகரத்து பெற்றவர். இவர் சிங்கப்பூரில் சில ஆண்டுகள் பணிபுரிந்துவந்திருக்கிறார்.
அப்போது சென்னையைப் பூர்வீகமாகக்கொண்ட, சிங்கப்பூரில் வசித்துவரும் ஆரோக்கியமேரி என்கிற ஆக்னஸ் சங்கீதா டான்பாஸ் (36) உடன் இவருக்கு ஃபேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. நட்பாகப் பழகிவந்த இருவரும், 2010-ல் சிங்கப்பூரில் பதிவுத் திருமணம் செய்திருக்கின்றனர். திருமணத்தின்போது, ரூ.72,85,000 வரதட்சணையாக ஆரோக்கிய மேரி கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சோலைகணேசனும் அவர் பெற்றோரும் ஆரோக்கியமேரியிடம் கூடுதலாக வரதட்சணை கேட்டு அவருக்கு நெருக்கடி கொடுத்துவந்திருக்கின்றனர். மேலும், ஆரோக்கியமேரிக்குத் தெரியாமல் சோலைகணேசனுக்கு அவர் பெற்றோர் மூன்றாவதாக 17-வயது சிறுமி ஒருவரைத் திருமணம் செய்துவைக்க ஏற்பாடு செய்திருக்கின்றனர்.
இதையறிந்து சோலைகணேசன் குடும்பம் குறித்து ஆரோக்கியமேரி விசாரித்திருக்கிறார். அப்போதுதான், அவர் ஏற்கெனெவே திருமணமாகி விவாகரத்துப் பெற்றவர் என்பது தெரியவந்திருக்கிறது. அதையறிந்த ஆரோக்கியமேரி அதிர்ச்சியடைந்திருக்கிறார். மேலும், வரதட்சணைக்காக 17 வயது சிறுமியை சோலைகணேசன் திருமணம் செய்துகொள்ள முயன்றதும் தெரியவந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதையடுத்து சிங்கப்பூரிலிருந்து புதுக்கோட்டைக்கு வந்த ஆரோக்கியமேரி, 2018-ம் ஆண்டு புதுக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் கொடுத்தார். அதன்பேரில், விசாரணை செய்த போலீஸார் சோலைகணேசன், அவர் தாய் ராஜம்மாள், தங்கை கமலஜோதி, தம்பி முருகேசன், சித்தப்பா நாரயணசாமி ஆகியோர்மீது வழக்கு பதிவு செய்து சோலைகணேசனைக் கைதுசெய்தனர்.
இந்த வழக்கு கடந்த நான்கு வருடங்களாக புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இந்த நிலையில், வழக்கை விசாரித்த மகிளா நீதிமன்ற நீதிபதி சத்யா நேற்றைய தினம் அதிரடி தீர்ப்பளித்தார். அதில், சோலைகணேசனுக்கு 7 பிரிவுகளின் கீழ் 37 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2.6 லட்சம் அபராதமும் விதித்தார்.

அபராதத்தைக் கட்டத் தவறினால், கூடுதலாக ஐந்தரை ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அதேபோல சோலைகணேசனின் தாய் ராஜம்மாளுக்கு உடந்தையாக இருந்த குற்றத்துக்காக 5 பிரிவுகளின் கீழ் 19 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1.9 லட்சம் அபராதமும் விதித்தார்.
சோலைகணேசனின் சகோதரி கமலஜோதிக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1.5 லட்சம் அபராதமும் விதித்தார். மேலும், சித்தப்பா நாராயணசாமிக்கு ஐந்து பிரிவுகளின் கீழ் 19 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1.9 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. தம்பி முருகேசனுக்கு 16 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1.6 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து சோலைகணேசனையும், அவர் குடும்பத்தினரையும் போலீஸார் சிறையில் அடைத்தனர்.