Published:Updated:

`3,000 செலவழிச்சேன். காதலிகிட்ட இருந்து வாங்கிக் கொடுங்க!' - போலீஸாரை மிரளவைத்த சென்னை மெக்கானிக்

எஸ்.மகேஷ்

மதுரவாயல் காவல் நிலையம் முன்பு மெக்கானிக் ஒருவர், ` செலவழித்த பணத்தை காதலியிடமிருந்து திரும்ப வாங்கிக் கொடுங்கள்' என்று கூறினார். திடீரென அவர், பிளேடால் கையை அறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

vicky
vicky

`தேவதையை கண்டேன்' படத்தில் கதாநாயகி ஸ்ரீதேவியை காதலிப்பார் நடிகர் தனுஷ். டீ விற்கும் நபர் என்று தெரிந்தவுடன் காதலை ஏற்க மறுத்துவிடுவார். இதனால் காதலித்து ஏமாற்றிய ஸ்ரீதேவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாடியிலிருந்து குதிப்பதாக தனுஷ் ரகளை செய்வார். பிறகு ஸ்ரீதேவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனுஷ் காவல் நிலையத்தில் புகார் கொடுப்பார். படத்தில் வரும் இந்தக் காட்சியைப் போன்று மதுரவாயல் காவல் நிலையத்தில் நேற்றிரவு நடந்துள்ளது.

vicky
vicky

சென்னை மதுரவாயல் காவல் நிலையத்துக்கு நேற்றிரவு வாலிபர் ஒருவர் வந்தார். போதையில் இருந்த அவர், `நான் காதலித்த பெண், என்னை ஏமாற்றிவிட்டார். நான் அவளை உயிருக்கு உயிராக காதலித்தேன். காதலித்தபோது அவளுக்குச் செலவு செய்த 3,000 ரூபாயை திரும்ப வாங்கித் தர வேண்டும். மேலும், என்னை ஏமாற்றிய அவள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறினார்.

இரவு நேரம் என்பதால் போலீஸார் அந்த வாலிபரைக் கண்டுகொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர், `எனக்கு காவல் நிலையத்தில் நியாயம் கிடைக்காது' என்று கூறியபடி பூந்தமல்லி நெடுஞ்சாலைப் பகுதிக்கு வந்தார். சாலையில் வேகமாக வாகனங்கள் சென்ற சமயத்தில் சர்வசாதாரணமாக ரோட்டைக் கடந்தார். திடீரென தன்னுடைய சட்டைப் பையிலிருந்து பிளேடை எடுத்தார். கண் இமைக்கும் நேரத்தில் தன்னுடைய கையில் பல இடங்களில் வெட்டினார். இதனால் கையிலிருந்து ரத்தம் வெளியேறியது. அதைப் பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

vicky
vicky

போலீஸார் நடத்திய விசாரணையில், அந்த வாலிபரின் பெயர் மதுரவாயல் மேட்டுக்குப்பத்தைச் சேர்ந்த விக்கி என்கிற கீரிப்புள்ள (21) எனத் தெரியவந்தது. விசாரணை நடத்த விக்கியை போலீஸார் தேடினர். ஆனால், விக்கி அங்கு இல்லை. மேலும், அவர் எங்கு சென்றார் என்றும் தெரியவில்லை. இதையடுத்து விக்கியின் முகவரி, அவர் வேலை செய்யும் இடம் உள்ளிட்ட விவரங்களை போலீஸார் சேகரித்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கஞ்சா போதையில் இருந்த விக்கி, மெக்கானிக் வேலைபார்த்து வருகிறார். காவல் நிலைய பகுதியில் நேற்றிரவு ரகளையில் ஈடுபட்டார். `காதலி என்னை ஏமாற்றிவிட்டார், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று உளறியுள்ளார். தற்கொலை செய்துகொள்வதாகக்கூறியபடி இடது கையை பிளேடால் பலதடவை வெட்டியுள்ளார். அதன்பிறகு காதலி வீட்டின் முன் தர்ணாவில் ஈடுபடப் போவதாகக் கூறிவிட்டுச் சென்றுவிட்டார். போதை தெளிந்தபிறகு விக்கியிடம் விசாரணை நடத்தவுள்ளோம்" என்றார்.

vicky
vicky

போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் கேட்டபோது ``மெக்கானிக் விக்கி, அந்தப்பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியைக் காதலித்துள்ளார். தற்போது அந்தச் சிறுமி, விக்கியிடம் சரிவர பேசவில்லை. இதனால்தான் காதலி மீது புகார் கொடுக்க விக்கி காவல் நிலையத்துக்கு வந்துள்ளார். ஆனால், அவர் காவல் நிலையத்தில் எழுத்துபூர்வமாக புகார் கொடுக்கவில்லை. மேலும், விக்கி கையை அறுத்த தகவலும் விசாரணையில்தான் தெரியவந்தது" என்றார்.