Published:Updated:

ஆதிச்சநல்லூர்: இரும்புத் தடுப்புகளைத் திருடி, கட்டிகளாக விற்க முயற்சி!-சிசிடிவி-யால் சிக்கிய கும்பல்

செய்துங்கநல்லூர் காவல் நிலையம்
செய்துங்கநல்லூர் காவல் நிலையம்

ஆதிச்சநல்லூர் அகழாய்வுப் பகுதியைச் சுற்றிப் போடப்பட்ட இரும்புத் தடுப்புகளை திருடிச் சென்று, உடைத்து உருக்கி, கட்டிகளாக்கி விற்பனை செய்ய முயன்றவர்களை போலீஸார் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூரில், தமிழக தொல்லியல்துறை சார்பில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. 114 ஏக்கர் பரப்பைச் சுற்றி கடந்த 2019-ம் ஆண்டு முதல் ரூ.2 கோடி மதிப்பிலான கம்பிவேலி அமைக்கும் பணி நடந்துவருகிறது. அது கொரோனா பரவல் காரணமாக தற்காலிமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், முந்தைய 2020-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில், ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

கைதுசெய்யப்பட்டவர்கள்
கைதுசெய்யப்பட்டவர்கள்

இதையடுத்து கடந்த 2020-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் முதல் அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடத்தைத் தேர்வு செய்யும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்றுவருகிறது. வேலி அமைப்பதற்காக ஆங்காங்கே பரம்பு சுற்றி பல்வேறு இடங்களில் இரும்புக்கம்பிகள் போடப்பட்டிருந்தன. இந்தநிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு 700 கிலோ எடையிலான 12 பெரிய இரும்புக்கம்பிகளை இரவோடு இரவாக மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

இது குறித்து மத்திய தொல்லியல்துறை அலுவலர் எத்திஸ்குமார், செய்துங்கநல்லூர் காவல் நிலையத்திலும், தூத்துக்குடி எஸ்.பி ஜெயக்குமாரிடமும் புகார் அளித்தார். எஸ்.பி-யின் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. கம்பிகள் காணாமல்போன நாளில், ஆதிச்சநல்லூர் மற்றும் அதனருகிலுள்ள கிராமங்கள் வழியாகச் சென்ற வாகனங்களை அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் ஆய்வு செய்தனர்.

கட்டிகளாக உருக்கப்பட்ட இரும்புக்கம்பிகள்
கட்டிகளாக உருக்கப்பட்ட இரும்புக்கம்பிகள்

அப்போது பேய்குளம் பகுதியிலிருந்த சிசிடிவி கேமராப்பதிவில், இரும்புக்கம்பிகளுடன் சென்ற வாகனத்தை போலீஸார் கண்டுபிடித்தனர். பிறகு அந்த வாகனம் செல்லும் வழியைப் பின்பற்றி நடத்திய ஆய்வில் நெல்லை மாவட்டம், திசையன்விளையிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த மினி லாரி உரிமையாளரைத் தேடிக் கண்டுபிடித்தனர். விசாரணையில், இரண்டு வாகனத்தில் வந்து அடுத்தடுத்த நாள்களில் கிரில் தடுப்புகளைக் கடத்திச் சென்றது தெரியவந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆதிச்சநல்லூர், சிவகளை அகழாய்வு... அருங்காட்சியகம் அமைக்க தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை!

இது குறித்து திசையன்விளையைச் சேர்ந்த உதயகுமார், இடையன்குடியைச் சேர்ந்த சுபாஷ், மகாதேவபுரத்தைச் சேர்ந்த தங்கபாண்டி, உவரியைச் சேர்ந்த பட்டீஸ்வரன் உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில், உதயகுமார், சுபாஷ் ஆகிய இருவரைக் கைதுசெய்தனர். அத்துடன் இவர்கள் கடத்தப் பயன்படுத்திய இரண்டு மினிலாரிகளையும் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், கிரில் தடுப்புகளைச் சிறு சிறு கம்பிகளாக உடைத்து இட்டமொழியை சேர்ந்த அருள்ராஜ் என்பவரிடம் விற்றுள்ளனர் என்பது தெரிந்தது. அவர், இதை உருக்கி 10 இரும்புக்கட்டிகளாக்கி வைத்திருந்தார்.

திருட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட 2 மினி லாரிகள்
திருட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட 2 மினி லாரிகள்

அந்த 10 இரும்புக்கட்டிகளையும் பறிமுதல் செய்து, அருள்ராஜையும் கைதுசெய்து விசாரணை நடத்திவருகிறார்கள். இந்தத் திருட்டுக்குப் பிறகு ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறையினர், இரண்டு ஷிஃப்ட் காவலர்களை நியமித்துள்ளனர். அத்துடன், செய்துங்கநல்லூர் போலீஸார், புறக்காவல் நிலையம் மூலமாக ஆதிச்சநல்லூர் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். இரும்பு கிரில் தடுப்புகளைத் திருடிச் சென்று உடைத்து உருக்கி, கட்டிகளாக விற்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு