Published:Updated:

`மானிடகுலத்துக்கு எதிரானது; இனி அவரும் ஆஜராகமாட்டார்!’ -இன்ஜினீயர் சுஜிக்கு எதிராக வழக்கறிஞர் சங்கம்

நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ராஜேஷ்
நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ராஜேஷ்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள எந்த வழக்கறிஞர்களும் சுஜி வழக்கில் ஆஜராகக் கூடாது எனக் கேட்டுக்கொள்கிறோம். ஜாக் நிர்வாகிகளிடம் ஆலோசித்து தமிழகத்தில் எந்த வழக்கறிஞர்களும் ஆஜராகக் கூடாது எனக் கேட்டுகொள்ள உள்ளோம்.

தமிழகம் முழுவதும் பல பெண்களை முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் ஏமாற்றி பணமோசடி செய்த இன்ஜினீயர் சுஜி என்ற காசி, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சமூக வலைதளங்களில் போலியாகக் கணக்குகளைத் தொடங்கி அதன் மூலம் இளம் பெண்களுக்கு காதல் வலை விரித்து ஏமாற்றியதோடு தனிமையில் நெருக்கமாக இருந்துள்ளார். அப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுத்து வைத்து அதைக் காட்டி பணம் மோசடியிலும் ஈடுபட்டுள்ளார்.

சுஜியிடம் சிறுமிகள் முதல் திருமணம் ஆன பெண்கள் வரை ஏமாந்துள்ளனர். அனைவரிடமும் பணம் மற்றும் நகைகளை வாங்கி மோசடி செய்துள்ளார் சுஜி. ஆனால், சுஜியிடம் பெண்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்ததால் யாரும் வெளியில் சொல்லாமல் அமைதியாக இருந்துவிட்டனர். இந்த நிலையில்தான் சென்னையைச் சேர்ந்த பெண் மருத்துவர் காசி தன்னைக் காதலிப்பதாக ஏமாற்றி பணம் பறித்ததுடன் இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படத்தை பதிவேற்றம் செய்ததாகப் புகார் அளித்தார்.

சுஜி என்கிற காசி
சுஜி என்கிற காசி
twitter

புகாரின்பேரில் சுஜியை போலீஸார் கைது செய்தனர். அதன் பின்னர் சுஜியால் ஏமாந்த சிறுமி உள்ளிட்ட சில பெண்கள் புகார் அளித்தனர். மேலும் கந்துவட்டிக்கு பணம் கொடுத்து அதிகவட்டி வாங்கியதுடன், ஹார்லி டேவிட்சன் பைக்கையும் எடுத்துக்கொண்டதாக வடசேரி காவல் நிலையத்தில் ஒருவர் புகார் அளித்தார். அதன்பேரில் சுஜி பயன்படுத்திய ஹார்லி டேவிட்சன் பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

சுஜி நெருங்கிப் பழகும் பெண்களுக்கு போன் செய்து மிரட்டுவது, அவர்களின் புகைப்படங்களை வலைதளங்களில் பதிவிடும் இரண்டு நபர்கள் குறித்து போலீஸ் விசாரணையில் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் டேசன் ஜினோ (19) கைது செய்யப்பட்டார். மேலும், சவுதி அரேபியாவில் இருக்கும் சுஜியின் மற்றொரு நண்பரை கைது செய்ய போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சுஜி மீது ஒரு கந்துவட்டி மற்றும் ஐந்து பெண்கள் புகார் அளித்ததன்பேரில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுஜியின் மீது குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில் மேலும் அவர் ஏமாற்றிய பெண்கள் குறித்த பட்டியலை எடுக்கும் முயற்சியில் போலீஸார் இறங்கியுள்ளனர். இந்த நிலையில் சுஜியை ஜாமீனில் வெளியே எடுக்க தீவிர முயற்சி நடந்து வருகிறது. இதற்காக சுஜி சார்பில் வழக்கறிஞர் ஒருவர் கோர்ட்டில் ஆஜராகி வருகிறார். இந்த நிலையில் சுஜியின் வழக்கில் எந்த வழக்கறிஞரும் ஆஜராகக் கூடாது என நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

நாகர்கோவில் வழக்கறிஞர் சங்க தலைவர் ராஜேஷ்
நாகர்கோவில் வழக்கறிஞர் சங்க தலைவர் ராஜேஷ்

இதுகுறித்து நாகர்கோவில் வழக்கறிஞர் சங்க தலைவர் ராஜேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "அப்பாவி பெண்கள், சிறுமிகளை ஏமாற்றிய சுஜி என்ற காசியின் வழக்குக்கு ஆதரவாக வாதிடுவது மானிடகுலத்துக்கு எதிரானது. எனவே, அவருக்கு ஆதரவாக நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கத்தின் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகக் கூடாது எனத் தீர்மானித்துள்ளோம். மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள எந்த வழக்கறிஞர்களும் சுஜி வழக்கில் ஆஜராகக் கூடாது எனக் கேட்டுக்கொள்கிறோம். ஜாக் நிர்வாகிகளிடம் ஆலோசித்து தமிழகத்தில் எந்த வழக்கறிஞர்களும் ஆஜராகக் கூடாது எனக் கேட்டுக்கொள்ள உள்ளோம். ஏற்கெனவே சுஜி வழக்கில் ஆஜரான வழக்கறிஞரும் ஆஜராக மாட்டார்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு