Published:Updated:

ஒரு சிப்பம் நெல் மூட்டைக்கு ரூ.50! - ரூ.32,800 லஞ்சமாக கேட்ட அதிகாரியை சிக்க வைத்த விவசாயிகள்!

லஞ்சம்
லஞ்சம் ( Representational Image )

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், விவசாயிகள் கொண்டுவந்த நெல்லை வாங்குவதற்கு 32,800 ரூபாய் லஞ்சம் கேட்ட இளநிலை உதவியாளர் குணசேகரன் கையும் களவுமாக பிடிபட்டுள்ளார்.

விவசாயிகள், தங்கள் நிலங்களில் விளைந்த நெல்லை எளிய முறையில் விற்பனை செய்வதற்காக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மாவட்டங்கள் தோறும் பரவலாக செயல்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் கள்ளக்குறிச்சிமாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநாவலூர் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த நெல்லை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். அதன்படி, கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஏழுமலையின் உறவினர்கள் (விவசாயிகள்) தனது நிலத்தில் விளைந்த நெல்லை விற்பனைக்காக இங்கு கொண்டு வந்துள்ளனர். அந்த நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டுமென்றால் 1 சிப்பம் (40 கிலோ) நெல் மூட்டைக்கு 50 ரூபாய் என்ற விதத்தில் 32,800 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார் இளநிலை உதவியாளர் குணசேகரன்.

திருச்சிற்றம்பலம் நேரடி நெல் கொள்முதல் நிலையம்: மூட்டைக்கு ரூ.2 கமிஷன் கேட்ட திமுக நிர்வாகி?!
கைது செய்யப்பட்ட குணசேகரன்
கைது செய்யப்பட்ட குணசேகரன்

முதல் நிலையாக 10,000 ரூபாயை லஞ்சமாக வாங்கிக் கொண்ட அந்த அதிகாரி, 'மீதமுள்ள தொகையை கொடுத்தால் தான் ரசீதை தருவேன்' என்று கறாராக கூறியிருக்கிறார். இதனால் மனமுடைந்து போன ஏழுமலை, பணத்துடன் வருவதாக கூறி புறப்பட்டுச் சென்று, விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். குணசேகரனை ஆதாரத்துடன் பிடிக்க எண்ணிய ஆய்வாளர் ஜேசுதாஸ் உடனான லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ஏழுமலையிடம் கொடுத்தனுப்பி நேரடி கொள்முதல் நிலைய இளநிலை உதவியாளர் குணசேகரனை கையும் களவுமாக பிடித்துள்ளனர். விவசாயிகளிடம் அதிகாரி லஞ்சம் கேட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இதுகுறித்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் பேசினோம். "கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த அவியனூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது தம்பி விஜயகுமார் என்பவரும், மாமன் மகன்கள் இருவரும் விவசாயம் செய்து மொத்தம் 656 சிப்பம் (40 கிலோ) மூட்டை நெல்லை அறுவடை செய்துள்ளனர். இந்த நெல்லை 1 1/2 (ஒன்றரை) மாதங்களுக்கு முன்பாக திருநாவலூரில் உள்ள நேரடி கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதற்காக எடுத்து வந்துள்ளனர். முதலில் நெல்லை கொள்முதல் செய்யாமல் அதிகாரிகள் இழுத்தடித்துள்ளனர். இதனால் ஏழுமலையின் உறவினர்கள் மூவரும், 'இத்தனை நாட்களாக இழுத்தடிக்கின்றனர். மழையில் நனையும் அபாயம் உள்ளது' என்று ஏழுமலையிடம் கூறியுள்ளனர். அதனடிப்படையில் நெல் கொள்முதல் நிலையத்திற்குச் சென்று குணசேகரன் என்ற அதிகாரியிடம் பேசியுள்ளார் ஏழுமலை.

லஞ்ச ஒழிப்பு
லஞ்ச ஒழிப்பு

முதலில் சிட்டா, அடங்கல் கேட்டிருக்கும் குணசேகரன்... பின்னர், அதெல்லாம் வேண்டாம். நெல்லை நானே கொள்முதல் செய்கிறேன். ஆனால், ஒரு மூட்டைக்கு 50 ரூபாய் என மொத்தம் 32,800 ரூபாய் கொடுங்கள் என்று அவரிடம் கேட்டுள்ளார். முதல்கட்டமாக கையிலிருந்த 10,000 ரூபாயை அந்த அதிகாரியிடம் கொடுத்துள்ளார் ஏழுமலை. அதன்பின்னரே கடந்த 24ம் தேதி நெல் மூட்டைகளை எடை போட்டுள்ளார்கள். 'மீதமுள்ள தொகையை தந்தால்தான் எடை போட்டதற்கான ரசீதை தருவேன்' என்று கூறினாராம் குணசேகரன். இதனால் மனமுடைந்து போன ஏழுமலை, நேற்று (28.07.2021) காலை புகார் அளித்தார். முதற்கட்ட விசாரணையை எங்கள் அதிகாரிகள் மறைமுகமாக ஈடுபட்டனர். மதியம் சுமார் 1.30 மணியளவில் புகார் அளித்த ஏழுமலை என்பவரிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பி லஞ்சம் கேட்ட அதிகாரியிடம் கொடுக்கச் சொன்னோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதை பெற்றுக்கொண்ட இளநிலை உதவியாளர் குலசேகரனை கையும் களவுமாக பிடித்து உள்ளோம். ரசாயனம் தடவியபடி கொடுத்தனுப்பிய பணம் மட்டுமின்றி, நேற்று காலையிலிருந்து மதியம் 1.30 மணி வரை மற்ற விவசாயிகளிடமிருந்து லஞ்சமாக பெற்ற 27,500 ரூபாயையும் அவரிடமிருந்து பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளோம்.

Vikatan

குணசேகரன் என்ற நபரை கைது செய்து ஒரு பிரிவின் கீழ் வழக்குப்பதிவும் செய்துள்ளோம். விசாரணை முடிவில் தெரியவரும் தகவல்களை தொடர்ந்து, அது மாறுபட வாய்ப்புள்ளது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு