Published:Updated:

`என் மனைவியிடம் போனில் தவறாகப் பேசியது யார்?’-நிதி நிறுவன ஊழியர்களை அரிவாளால் மிரட்டிய தேனி தொழிலாளி

அரிவாளுடன் வந்த நபர்
அரிவாளுடன் வந்த நபர்

தன் மனைவியை ஆபாசமாகப் பேசிய நபரை வெட்டுவதற்காக அரிவாளுடன் வந்த நபரால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி மாவட்டம் கம்பம் நகரில் இயங்கிவரும் தனியார் ஃபைனான்ஸ் நிறுவனத்துக்குள் நேற்று ஒரு நபர் அரிவாளுடன் நுழைந்து, நிறுவன ஊழியர்களை மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.

அரிவாளுடன் வந்த நபர்
அரிவாளுடன் வந்த நபர்
`நீயா கொலை பண்ண..காமெடி பண்ணாத...!' - சரணடைய வந்தவரைத் திருப்பி அனுப்பிய தேனி போலீஸ்

நடுத்தர மக்கள், பெரும்பாலும் வீட்டுக்குத் தேவையான பொருள்களை ஃபைனான்ஸ் நிறுவனங்கள் மூலமாக மாத தவணையில் பணம் செலுத்தும் முறையில் வாங்குவது வழக்கம். பணத்துக்கான மாத தவணையைச் செலுத்தவில்லை என்றால், ஃபைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து பணத்தை கட்டச் சொல்வது வாடிக்கை. சில சமயங்களில் ஊழியர்கள் மோசமாக செயல்படுவதாகவும், இதுபோன்ற சம்பவங்களால் சில தற்கொலைகளும் நடக்கின்றன.

இந்த நிலையில், கம்பம் நகரில் இயங்கிவரும் தனியார் ஃபைனான்ஸ் நிறுவனத்துக்குள் ஒரு நபர் அரிவாளுடன் நுழைகிறார். அவரைப் பார்த்து அங்குவந்திருந்த வாடிக்கையாளர்கள் வெளியே ஓடிவிடுகிறார்கள். பைனாஸ் ஊழியர்களிடம், அரிவாளைக் காட்டி மிரட்டல் விடுக்கிறார். அவரை சமாதனம் செய்த ஊழியர்கள், விவரம் கேட்கிறார்கள். `மாத தவணையில் வீட்டுக்கு டிவி மற்றும் ஹோம் தியேட்டர் வாங்கினேன். மாதம் பிறந்தால் தவறாமல் தவணையை செலுத்திவருகிறேன். ஆனால், உங்கள் ஃபைனான்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த யாரோ ஒருவன், என் மனைவிக்கு போன் செய்து தவணையைக் கட்ட சென்னது மட்டுமல்லாமல், ஆபாசமாகப் பேசியுள்ளான். அவன் யார்? அவனை வெட்டாமல் இங்கிருந்து போக மாட்டேன்.! அவன் யாருனு சொல்லுங்க…” என்று கூறுகிறார்.

கம்பம்
கம்பம்

அதைக் கேட்டுப் பதறிய ஃபைனான்ஸ் நிறுவன ஊழியர்கள், அவரது கோபத்தைக் குறைக்கும் விதமாக பேசி, சமாதானம் செய்து அனுப்பிவைக்கின்றனர். இவை அனைத்தையும், அந்நிறுவன ஊழியர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்கிறார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. யார் அந்த நபர், என சம்பந்தப்பட்ட நிறுவன ஊழியர்களிடம் கேட்டபோது, தகவல் தர மறுத்துவிட்டனர். இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் ஏதும் கொடுக்கப்படவில்லை. தன் மனைவியை ஆபாசமாகப் பேசிய நபரை வெட்டுவதற்காக அரிவாளுடன் வந்த நபரால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின் செல்ல