Published:Updated:

`உன்னால தான் இவ்வளவு பிரச்னையும்...!'- வீட்டுக்காக நடுரோட்டில் தம்பியைக் குத்திக்கொன்ற அண்ணன்

எம்.வடிவேல்

பொதுமக்கள் அதிக நடமாட்டமுள்ள தர்மபுரி நகரப் பகுதியில் நடந்துள்ள இந்தக் கொலைச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Cctv footage
Cctv footage

தர்மபுரி சத்யா நகரைச் சேர்ந்தவர் காவேரி. இவருக்கு 5 மகன்கள், மூன்று மகள்கள் உள்ளனர். இவர்களில் நரசிம்மனுக்கு வயது 24, மெக்கானிக் தொழில் செய்து வருகிறார். இவரது அண்ணன் வெங்கடாசலபதி எலக்ட்ரிசியனாகத் தொழில் செய்து வருகிறார். இருவருக்கும் இடையே தர்மபுரி சத்யா நகரில் உள்ள வீட்டின் உரிமை தொடர்பாக தகராறு இருந்துள்ளது. இதுதவிர, பென்னாகரம் சாலையில் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு ஏக்கர் நிலத்தைப் பிரிப்பதிலும் பிரச்னை இருந்துள்ளது. ஊர் பெரியவர்கள் பலமுறை பேசி சமாதானம் செய்தபோதும், வெங்கடாசலபதி அதை ஏற்காமல் தொடர்ந்து தகராறு செய்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட நரசிம்மன்
கொலை செய்யப்பட்ட நரசிம்மன்

இந்தநிலையில், நேற்று மாலை 6 மணியளவில் மெக்கானிக் பணியை முடித்துவிட்டு, நண்பர் மணியுடன் மோட்டார் சைக்கிளில் நரசிம்மன் வீட்டுக்குச் சென்றுள்ளார். பென்னாகரம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, குமரசாம்பேட்டையில் நரசிம்மனைத் தடுத்து நிறுத்திய வெங்கடாசலபதி, கத்தியைக் காட்டி உடன் வந்த மணியை விரட்டி அடித்துள்ளார்.

”உன்னால தாண்டா இவ்வளவு பிரச்னையும். நீ இல்லைனா, நிம்மதியா இருப்பேன்” எனக் கத்திக் கொண்டே, சொந்த தம்பி என்றுகூட பார்க்காமல், நரசிம்மனின் மார்பில் வெங்கடாசலபதி கத்தியால் குத்தியுள்ளார். இதைக் கண்ட பொதுமக்கள் பயத்தில் அலறி நாலாபக்கமும் சிதறி ஓடியுள்ளனர். தம்பியைக் குத்திவிட்டு வெங்கடாசலபதி மின்னல் வேகத்தில் ஓடிவிட்டார். உயிருக்குப் போராடிய நரசிம்மனை மீட்ட பொதுமக்களில் சிலர், அவரை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே நரசிம்மனின் உயிர் பிரிந்தது.

தம்பியின் நண்பனை விரட்டும் அண்ணன்
தம்பியின் நண்பனை விரட்டும் அண்ணன்
தூத்துக்குடியில் நீதிமன்றத்தில் ஆஜராக வந்தவர் நடுரோட்டில் வெட்டிக் கொலை!

பொதுமக்கள் அதிகளவு நடமாட்டமுள்ள தர்மபுரி நகரப் பகுதியில் நடந்துள்ள இந்தக் கொலைச் சம்பவம் தர்மபுரியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக, தர்மபுரி பி1 காவல் ஆய்வாளர் ரத்தினகுமாரிடம் பேசுகையில், ``சொத்துக்காக அண்ணனே தம்பியைக் கொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார். வெங்கடாசலபதி இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துவிட்டோம். விரைவில் அவரைக் கைது செய்வோம்'' என்றார் உறுதியாக.