தேனி மாவட்டம், வடவீரநாயக்கன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட அம்மாபட்டியைச் சேர்ந்தவர் துரைபாண்டியன். இவரின் வீட்டு மாடியில் மஞ்சள், உப்பு தேய்க்கப்பட்டு காய வைக்கப்பட்டிருந்த சிறுத்தை தோல் அண்மையில் மீட்கப்பட்டது. துரைப்பாண்டியன் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் தலைமறைவாகி இருந்தார். அவர் தேடப்பட்டு வந்த நிலையில், தற்போது 25 நாள்களுக்குப் பிறகு வனத்துறையினர் துரைபாண்டியனைக் கைதுசெய்திருக்கின்றனர்.

இதில் வடபுதுபட்டி ஊராட்சி மன்றத்தின் முன்னாள் வார்டு கவுன்சிலரான துரைபாண்டியன், அவருடைய மனைவி செல்லமணி (47) ஆகியோர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருந்தது. தலைமறைவாக இருந்த துரைபாண்டியை நேற்று சென்னையில் கைதுசெய்த வனத்துறையினர், அவரை தேனிக்கு அழைத்து வந்தனர். பின்னர் தேனி சமதர்மபுரத்திலிருக்கும் வனச்சரக அலுவலகத்தில் விசாரணை நடத்திய பிறகு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பதற்காக அழைத்துச் சென்றனர்.

இது குறித்து வனத்துறையினரிடம் விசாரித்தோம். ``கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வந்த துரைபாண்டியன், வறட்டாறு வனப்பகுதியில் இறந்தகிடந்த சிறுத்தையை எடுத்துவந்து தனது வீட்டு மாடியில் வைத்து அறுத்த பின் இறைச்சியை சுடுகாட்டில் போட்டுவிட்டு, அதன் தோலை வீட்டு மாடியில் உலர வைத்தது தெரியவந்தது. மேலும் இதில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என துரைபாண்டியனை நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரணை செய்தால் தெரியவரும்" என்றனர்.

இருப்பினும், தொடர்ச்சியாக தேனியில் சிறுத்தைகள் தொடர்பான சர்ச்சை எழுந்தவண்ணமாங்கா இருக்கிறது. வனப்பகுதியில் உயிரிழந்த நிலையில் கிடந்ததாகக் கூறப்படும் சிறுத்தை எவ்வாறு இறந்தது... ஏற்கெனவே வேலியில் சிக்கியதாகக் கூறப்படும் சிறுத்தையா என்ற சந்தேகமும் நிலவுகிறது. முழுமையான விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என விலங்குகள் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.