Published:Updated:

சென்னை: கோவிட்ஷீல்டுக்கு ரூ.500; கோவெக்சினுக்கு ரூ.800 - தடுப்பூசிக்கு லஞ்சம் கேட்ட ஊழியர்கள்!

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

சென்னையில் தடுப்பூசிக்கு லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் மருத்துவமனை ஊழியர்கள் 2 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகிறார்கள்.

சென்னை புழல் லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் நந்தகோபால் (29). இவரின் மனைவி சாருபிரபா. இவர்கள் இருவரும் நேற்று புழல் ஜிஎன்டி சாலையில் உள்ள மாநகராட்சி மண்டலத்துக்குட்டப்பட்ட நகர்புற சமுதாய நல மருத்துவமனையில் கொரோனா நோய் தடுப்பு ஊசி செலுத்திக்கொள்ள சென்றனர். அப்போது தடுப்பு ஊசி மருந்து இல்லை என அங்குள்ள ஊழியர்கள் தெரிவித்தனர். அதனால் இருவரும் வீட்டுக்குச் செல்ல முடிவுசெய்தனர்.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

இந்த சமயத்தில் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தினகரன் (42) என்பவர், 500 ரூபாய் லஞ்சமாகக் கொடுத்தால் தடுப்பு ஊசி செலுத்திக்கொள்ள எற்பாடு செய்வதாக நந்தகோபாலிடம் கூறியிருக்கிறார். அதற்கு சம்மதம் தெரிவித்த நந்தகோபால், அவரின் மனைவி சாருபிரபா ஆகியோரை ஊசி போடுவதற்காக மருத்துவமனைக்குள் தினகரன் அழைத்துச் சென்றிருக்கிறார். பின்னர் அங்கிருந்த பிரசாந்த் என்பவரிடம் நந்தகோபாலையும் சாருபிரபாவுக்கும் ஊசி செலுத்துமாறு தினகரன் கூறியிருக்கிறார். உடனே பிரசாந்த், 500 ரூபாய் கொடுத்தால் ஊசி செலுத்திக்கொள்ளலாம் என்று தெரிவித்திருக்கிறார்.

இதையடுத்து நந்தகோபால் கையில் வைத்திருந்த 300 ரூபாயை பிரசாந்த்திடம் கொடுத்திருக்கிறார். மீதிப்பணத்தை கூகுள் பே மூலம் பிரசாந்த்துக்கு நந்தகோபால் அனுப்பி வைத்திருக்கிறார். இதையடுத்து இருவருக்கும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பிரசாந்த் ஏற்பாடு செய்திருக்கிறார். இதுகுறித்து புழல் காவல் நிலையத்தில் நந்தகோபால் புகாரளித்திருக்கிறார். அதன்பேரில் போலீஸார் , காவாலளி தினகரன், பிரசாந்த் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வந்தவர்களிடம் மருத்துவமனையில் பணியாற்றும் தினகரன், பிரசாந்த் ஆகியோர் லஞ்சம் கேட்பதாக நந்தகோபால் எங்களிடம் புகாரளித்தார். பணம் கொடுத்தற்கு ஆதாரத்தையும் அவர் எங்களிடம் கொடுத்தார். அதன்பேரில் தினகரன், பிரசாந்த் ஆகியோரிடம் விசாரணை நடத்தினோம். தினகரன், புழல் கதிர்வேடு பகுதியைச் சேர்ந்தவர். இவர் தனியார் செக்யூரிட்டி நிறுவனம் மூலம் மருத்துவமனை பாதுகாப்பு பணிக்கு வந்திருக்கிறார். பிரசாந்த், மருத்துவமனையில் தற்காலிகமாக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் சேர்ந்துதான் தடுப்பூசி இல்லை என பொதுமக்களிடம் கூறி வந்திருக்கின்றனர். பின்னர் பணம் கொடுப்பவர்களுக்கு தடுப்பூசி ஏற்பாடு செய்து வந்திருக்கின்றனர். இவர்கள் இருவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

சென்னை புழல் காவல் நிலையத்தில் நந்தகோபால் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, "நானும் எனது மனைவியும் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்காக புழலில் உள்ள நகர்புற சமுதாய நல மருத்துவமனைக்கு கடந்த 31-ம் தேதி சென்றிருந்தோம். ஆனால் தடுப்பு ஊசி இல்லை என அங்கிருந்தவர்கள் கூறினர். அப்போது பாதுகாப்பு பணியிலிருந்த தினகரன் என்பவர் கோவிட் ஷீல்டு என்ற தடுப்பூசி போட 500 ரூபாய், கோவேசின் என்ற தடுப்பூசி செலுத்த 800 ரூபாய் என என்னிடம் லஞ்சம் கேட்டார். உடனே நான் இலவசமாகத்தானே அரசு தடுப்பூசி வழங்கி வருகிறது என்று தினகரனிடம் கூறினேன்.

தினகரன், பிரசாந்த்
தினகரன், பிரசாந்த்

இதையடுத்து தடுப்பூசிக்கு லஞ்சம் கேட்பவர்களை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்து தினகரன் கேட்ட பணத்தைக் கொடுப்பதாகக் கூறினேன். அதன்பிறகு தினகரன், மருத்துவமனையில் உதவியாளராகப் பணியாற்றும் பிரசாந்த்தை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அவருக்கு ஆன்-லைன் மூலம் பணத்தை அனுப்பி வைத்தேன். அந்த ஆதாரமும் என்னிடம் உள்ளது. மேலும் என்னிடம் தடுப்பூசி செலுத்துவதற்கு லஞ்சமாக பணம் கேட்டதை செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்தேன். எனவே பொதுமக்களை ஏமாற்றுவதோடு அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்திய இவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருக்கிறார். கொரோனா தடுப்பூசி செலுத்த லஞ்சம் வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு