உயர் பதவியில் இருப்பவர்கள் எப்போதும் தங்களது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யத் தவறுவதில்லை. அந்த வகையில், பீகாரில் காவல் நிலையத்துக்கு வந்த பெண்ணை மசாஜ் செய்யச் சொல்லியிருக்கிறார் ஒரு போலீஸ்காரர்.
பீகார் மாநிலம், சகர்ஷா மாவட்டத்தில் உள்ள தஹர் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக இருப்பவர் சசி பூஷண் சின்ஹா. இந்தக் காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டிருந்த தன் மகனை விடுவிக்கும்படி கேட்பதற்காக பெண் ஒருவர் அங்கு சென்றிருக்கிறார். அந்தப் பெண், எஸ்.ஐ சின்ஹாவிடம் தன் மகனை விட்டுவிடும்படி கேட்டுக்கொண்டார். உடனே சின்ஹா `உடம்பு ஒரே வலியாக இருக்கிறது... கொஞ்சம் உடம்பைப் பிடித்துவிட்டு!' என்று சொல்லி கடுகு எண்ணெயை அந்தப் பெண்ணிடம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அதோடு சின்ஹா தனது சட்டை மற்றும் பனியனை கழற்றிவிட்டு துண்டு ஒன்றை கட்டிக்கொண்டு மசாஜ் செய்யும்படி கேட்டிருக்கிறார். அந்தப் பெண்ணும் வேறு வழியில்லாமல் ஆயில் ஊற்றி அவருக்கு மசாஜ் செய்திருக்கிறார். அருகில் வேறு ஒரு பெண் அமர்ந்திருந்தார்.
அந்தப் பெண் மசாஜ் செய்துகொண்டிருந்தபோது சின்ஹா வழக்கறிஞர் ஒருவருடன் போனில் பேசினார். அந்தப் பெண்ணின் மகனுக்கு ஜாமீன் ஏற்பாடு செய்யும்படியும், அந்தப் பெண் ஏழை என்பதால் அவரால் பணம் கொடுக்க முடியாது என்றும் சின்ஹா வழக்கறிஞரிடம் போனில் பேசிக்கொண்டிருந்தார். அதோடு ஜாமீனுக்குத் தேவையான 10 ஆயிரம் ரூபாயைத் தானே கொடுப்பதாகவும், இரண்டு பெண்களை அனுப்பி வைப்பதாகவும், அவர்களிடம் ஜாமீனுக்குத் தேவையான ஆவணங்களை வாங்கிக்கொள்ளும்படி போனில் பேசிக்கொண்டிருந்தார்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதை அங்கிருந்த யாரோ வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துவிட்டனர். இந்த வீடியோ வைரலானதையடுத்து, உடனே சின்ஹா மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லிபி சிங் உத்தரவிட்டார். இந்த நிலையில், விசாரணை அறிக்கையின் அடிப்படையில் சின்ஹா தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.