Published:Updated:

சென்னை சிட்லபாக்கத்தில் ஆட்டோவில் கடத்தப்பட்ட சிறுமி... ஒரு மணி நேரத்தில் மீட்கப்பட்டது எப்படி?

சிறுமியைக் கடத்திய சம்சுதீன்

சென்னையில் ஆட்டோவில் கடத்தப்பட்ட சிறுமி அடுத்த ஒரு மணி நேரத்தில் மீட்கப்பட்ட சம்பவம் நடந்திருக்கிறது.

சென்னை சிட்லபாக்கத்தில் ஆட்டோவில் கடத்தப்பட்ட சிறுமி... ஒரு மணி நேரத்தில் மீட்கப்பட்டது எப்படி?

சென்னையில் ஆட்டோவில் கடத்தப்பட்ட சிறுமி அடுத்த ஒரு மணி நேரத்தில் மீட்கப்பட்ட சம்பவம் நடந்திருக்கிறது.

Published:Updated:
சிறுமியைக் கடத்திய சம்சுதீன்

சென்னை அருகிலுள்ள சிட்லபாக்கம் திருமலை நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் வினோத். தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் இவருக்கு நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. நேற்று மாலை இந்தச் சிறுமி தெருவில் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது அந்தப் பகுதிக்கு ஆட்டோவில் வந்த மர்ம நபர் ஒருவர், விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை ஆட்டோவில் கடத்திச் சென்றார்.

சிறுமி கடத்தல்
சிறுமி கடத்தல்

இந்தச் சம்பவத்தைப் பார்த்த அந்தப் பகுதி மக்கள் தகவலைக் குழந்தையின் பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார்கள். இதனால் அதிர்ச்சியடைந்த குழந்தையின் தந்தை வினோத், இது குறித்து சிட்லபாக்கம் பகுதி காவல்துறையில் புகார் தெரிவித்திருக்கிறார். புகாரின் பெயரில், உடனடியாக அந்தப் பகுதியில் பணியிலிருந்த போலீஸாருக்குச் சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் குறித்துத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்தப் புகாரையடுத்து, தாம்பரம் சென்னை பகுதிகளில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. காவல் ஆய்வாளர்கள், போக்குவரத்துக் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீஸார் சிறுமியைத் தீவிரமாகத் தேடிவந்தனர். அந்தப் பகுதிகளிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்து பார்த்ததில், ஆட்டோவில் சிறுமியைக் கடத்திச் சென்ற நபர் சிக்கியிருக்கிறார்.

சிறுமி கடத்தல்
சிறுமி கடத்தல்

இந்த சிசிடிவி காட்சிகளைக்கொண்டு ஆட்டோவைத் தேடும் பணி தொடங்கியது. ரோந்துப் பணியிலிருந்த குரோம்பேட்டை பகுதி போலீஸார், அந்த வழியாக வந்த ஆட்டோவைச் சோதனை செய்தனர். குரோம்பேட்டை எம்ஐடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட காவலர்கள் கடத்தல் ஆட்டோவை அடையாளம் கண்டு மடக்கிப்பிடித்தனர். ஆட்டோவிலிருந்த சிறுமியை பத்திரமாக மீட்டு, அவரின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

சிறுமியைக் கடத்தியவரைக் கைதுசெய்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில், குற்றத்தில் ஈடுபட்ட நபர், குரோம்பேட்டை ராதாநகர் பகுதியைச் சேர்ந்த சம்சுதீன் (34) என்பதும், இவர் சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் சரித்திரப் பதிவேடு குற்றவாளி என்பதும் தெரியவந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

சிறுமியைக் கடத்திய சம்சுதீன்
சிறுமியைக் கடத்திய சம்சுதீன்

மேலும், குழந்தையைக் கடத்தியதற்கான காரணம் என்ன என்பது தொடர்பாகவும், இந்தக் கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்றும் போலீஸார் தீவிர விசாரணை செய்துவருகின்றனர். ஆட்டோவில் கடத்தப்பட்ட சிறுமியை அடுத்த ஒரு மணி நேரத்தில் மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்த காவல்துறையினருக்குப் பலதரப்பினரும் பாராட்டு தெரிவித்துவருகின்றனர். மேலும், தெருவில் விளையாடிய குழந்தை கடத்தப்பட்ட சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.