Published:Updated:

அடிக்கடி ரோந்து.. சர்ச் மணியால் கூடிய மக்கள்..எஸ்.ஐ-க்கு அதிர்ச்சிக்கொடுத்த குமரி கிராம மக்கள்!

முள்ளூர்த்துறை மீனவர் கிராமத்தில் குவிக்கப்பட்டுள்ள போலீஸ்
முள்ளூர்த்துறை மீனவர் கிராமத்தில் குவிக்கப்பட்டுள்ள போலீஸ்

அந்த சமயத்தில் சிலர் அங்குள்ள சர்ச்சில் மணி அடித்து மக்களை கூட்டினர். போலீஸ் வாகனத்தின் இரண்டுபக்கமும் மக்கள் கூடி கல்லெறிந்தனர்.

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக அரசு அறிவித்துள்ள 144 தடை உத்தரவை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை காவல் நிலைய உதவி ஆய்வாளர் இளங்கோவன் தலைமையிலான போலீசார் முள்ளூர்த்துறை மீனவ கிராமத்தில் தடுப்பு நடவடிக்கை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டமாக ஆங்காங்கே நின்று கொண்டிருந்தனர். அவர்களை சமூக இடைவெளியை பின்பற்றுமாறு போலீசார் கேட்டுக் கொணனர். மேலும் அப்பகுதியில் வாலிபர்கள் கடற்கரையோரத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார்கள். அவர்களையும் போலீசார் கண்டித்து விரட்டியடித்துள்ளனர்.

இதனால் அப்பகுதி மக்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் ஆலய மணியை ஒலிக்க வைத்து பொதுமக்களை திரட்டி போலீசாரை கல்வீசி தாக்கியுள்ளனர். மேலும் காவல் துறைக்கு சொந்தமான இரண்டு வாகனங்களையும் கல்வீசி உடைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீஸார் தடியடி நடத்தினர்.

உடைக்கப்பட்ட போலீஸ் வாகனம்
உடைக்கப்பட்ட போலீஸ் வாகனம்

இந்த நிலையில் அப்பகுதியினர் கல்வீசி தாக்கியதில் இதில் புதுக்கடை காவல் உதவி ஆய்வாளர் இளங்கோவன், தலைமை காவலர் ராஜேஷ்குமார் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து குளச்சல் ஏ.எஸ்.பி. விஸ்வேஷ் சாஸ்திரி போலீஸ் படையுடன் அங்கு வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தார். போலீஸ் மீதும், போலீஸ் வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்திய சிலர் கைது செய்யப்பட்டனர். உதவி ஆய்வாளர் இளங்கோவன் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. பதற்றத்தை தவிர்க்க முள்ளூர்துறை கிராமத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து குளச்சல் ஏ.எஸ்.பி. விஸ்வேஷ் சாஸ்திரி கூறுகையில், "கடலோரப் பகுதிகளை டெல்டா என்ற தனிப்படை அமைத்து கண்காணித்து வருகிறோம். அந்த படையினர் புதுக்கடை எஸ்.ஐ இளங்கோ தலைமையில் முள்ளூர்த்துறை கடற்கரைக் கிராமத்தில் ரோந்து சென்றனர். அப்போது இங்கு பொதுமக்கள் கூட்டமாக நின்றனர். அவர்களை எஸ்.ஐ. இளங்கோ விலக்கினார். அப்போது சிலர் வாக்குவாதம் செய்தனர். அந்த சமயத்தில் சிலர் அங்குள்ள சர்ச்சில் மணி அடித்து மக்களை கூட்டினர். போலீஸ் வாகனத்தின் இரண்டுபக்கமும் மக்கள் கூடி கல்லெறிந்தனர்.

ஏ.எஸ்.பி. விஸ்வேஷ் சாஸ்திரி
ஏ.எஸ்.பி. விஸ்வேஷ் சாஸ்திரி

அதில் போலீஸ் வாகனம் சேதமானதுடன், எஸ்.ஐ. இளங்கோவில் காலில் காயம் ஏற்பட்டது. அவர் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர்கொடுத்த ஸ்டேட்மெண்ட்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கை மதிக்காதவர்கள், போலீஸ்மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் முள்ளூர்த்துறை மீனவர் கிராமத்தில் சென்று பார்வையிட்டார். பின்னர் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் கூறுகையில், "கடற்கரையில் கிரிக்கெட் விளையாடியதில் ஒருவரை காவல்துறையினர் பிடித்து அடித்துள்ளனர். இதனால் பயந்துபோன சிலர் மணி அடித்தனர். அப்போது மக்கள் அங்கு கூடினர். மக்களுக்கும் போலீசுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கல்வீச்சு போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன.

காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார்
காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார்

இது சம்பந்தமாக 31 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஊர் கமிட்டி ஒத்துழைக்கும் என பங்குதந்தை கூறியுள்ளார். ஆனாலும் போலீஸார் இரவு நேரங்களில் முள்ளூர்த்துறை கிராமத்துக்குள் நுழைந்து வீடுகளின் கதவுகளை உடைத்து மக்களிடம் அராஜகம் செய்கின்றனர். எனவே இதுகுறித்து கலெக்டர் மற்றும் எஸ்.பி.யிடம் மனு கொடுக்க உள்ளோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு