Published:Updated:

கர்ப்பிணி யானையைக் கொன்ற ‘பன்னி படக்கம்’!

யானை
பிரீமியம் ஸ்டோரி
யானை

தாடை கிழிந்து... பற்கள் உடைந்து... உயிர் போராட்டத்தில் 15 நாள்கள்

கர்ப்பிணி யானையைக் கொன்ற ‘பன்னி படக்கம்’!

தாடை கிழிந்து... பற்கள் உடைந்து... உயிர் போராட்டத்தில் 15 நாள்கள்

Published:Updated:
யானை
பிரீமியம் ஸ்டோரி
யானை
யிற்றில் சிசுவுடன் உயிரிழந்த ஒரு யானைக்காக, கொரோனா கொடூரத்துக்கு நடுவேயும் நாடே கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கிறது. இதன் பின்னணி என்ன, இதைவைத்து நடத்தப்படும் அரசியல் என்ன என்பதையெல்லாம் களமிறங்கி விசாரித்தோம்.

மே 25-ம் தேதி... ‘கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டம், மன்னார்காடு அருகே வெள்ளியார் ஆற்றில் யானை ஒன்று நின்றுகொண்டிருக்கிறது’ என்று வனத்துறைக்குத் தகவல் கிடைத்தது. உடனடியாக மருத்துவக்குழு கும்கி யானைகளுடன் வெள்ளியார் ஆற்றுக்கு விரைந்தது. ஆனால், வனத்துறையின் முயற்சிகள் அனைத்தும் வீணாகி, 27-ம் தேதி மாலை அந்த யானை உயிரிழந்துவிட்டது. 28-ம் தேதி பிரேத பரிசோதனை முடிவில் அந்த யானை கர்ப்பமாக இருந்ததும், வெடிமருந்து உணவைச் சாப்பிட்டு கடுமையான காயங்கள் ஏற்பட்டிருந்ததும் தெரியவந்தது.

கர்ப்பிணி யானையைக் கொன்ற ‘பன்னி படக்கம்’!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த நிலையில், மே 30-ம் தேதி வனத்துறை ஊழியர் மோகன் கிருஷ்ணன், தன் ஃபேஸ்புக் பக்கத்தில் இந்தச் சம்பவம் தொடர்பாக உருக்கமான பதிவை எழுதினார். அதன் பிறகுதான் விஷயம் தேசிய அளவில் பேசுபொருளானது. பன்றிகளுக்கு வைக்கும் ‘பன்னி படக்கம்’ (அவுட்டுக்காய்) என்னும் வெடியை உண்டு, யானை உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக வில்சன் என்ற ரப்பர் எஸ்டேட் பணியாளர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

உள்ளூர்வாசிகளிடம் பேசினோம். ‘‘இந்த வனப்பகுதிகளில் யானைகள் அதிகம். சமீபகாலமாக, மனித - விலங்கு எதிர்கொள்ளல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஆண்டு சைலன்ட் வேலி அருகே இரண்டு யானைகளைத் துப்பாக்கியால் சுட்டு வேட்டை யாடிய இருவர் கைது செய்யப்பட்டனர். கடந்த மாதம் மட்டும் சைலன்ட் வேலியில் வனவிலங்கு களை வேட்டையாடிய விவகாரத்தில் 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தற்போது யானைக்கு பன்னி படக்கம் கொடுத்து கொலை செய்த சம்பவத்தில், வில்சன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் எஸ்டேட் உரிமையாளர் அப்துல் கரீம், அவரின் மகன் ரியாசுதின் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். அவர்கள் நீண்டகாலமாக வனவிலங்கு களை இறைச்சிக்காக வேட்டையாடி பிசினஸ் செய்துவருகின்றனர். அந்த மாவட்டத்தின் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட முக்கிய வி.ஐ.பி-களுக்கு காட்டு விலங்குகளின் இறைச்சியை சப்ளை செய்வது இவர்களின் தொழில். அந்தவகையில் வில்சன், ‘பன்னி படக்கம்’ வைப்பதில் கைதேர்ந்தவன். எல்லோராலும் அதைப் பயன்படுத்த முடியாது. கொஞ்சம் தவறினாலும் நமது கை சிதறிவிடும். பட்டாசுக்கடைகளில் வெடிகளை வாங்கி வந்து, அவற்றிலிருக்கும் மருந்துகள் மூலமாகவே இந்த வெடிகளைத் தயாரிக்கின்றனர்.

யானை
யானை

இந்தச் சம்பவத்தைப் பொறுத்தவரை முதலில் அன்னாசிப் பழத்தில் வெடிவைத்ததாகச் சொன்னார்கள். பிறகு தேங்காயில் வைத்ததாகச் சொல்கின்றனர். பொதுவாக யானைகள் தேங்காய்களை அப்படியே சாப்பிடாது. மேலும், பன்றிகளுக்கு வெடி வைப்பதென்றால், மாமிசக் கொழுப்பில்தான் வைப்பார்கள். அதுதான் சந்தேகத்தை அதிகரிக்கிறது’’ என்றனர்.

மன்னார்காடு சரக வன அலுவலர் சுனில்குமார், ‘‘எப்படியாவது யானையைக் காப்பாற்றிவிடலாம் என்று நினைத்தோம். ஆனால், `யானை பிழைப்பது சாத்தியமில்லை’ என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். காரணம், அதன் தாடை கிழிந்து, பற்கள் உடைந்துவிட்டன. வாயில் புழுக்கள் உருவாகிவிட்டன. 15 நாள்களுக்கும் மேலாக உணவில்லாததால், அதன் எடை பாதியாகக் குறைந்துவிட்டது. தண்ணீரை மட்டுமே குடித்திருக் கிறது. அதனால், யானையைக் காப்பாற்ற முடியவில்லை. முதற்கட்ட விசாரணையில் பன்றி இறைச்சிக்காக வெடி வைத்ததை யானை உண்டது தெரியவந்துள்ளது’’ என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பாலக்காடு மாவட்ட எஸ்.பி-யான சிவ விக்ரம், ‘‘வெடிபொருள், விலங்குகள் வதைத் தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறோம். வனத்துறையுடன் இணைந்து சிறப்புப் படை அமைத்து விசாரித்துவருகிறோம். இருவர் தலைமறைவாக உள்ளனர். விரைவில் அவர்களையும் பிடித்துவிடுவோம். ரப்பர் எஸ்டேட்டிலிருந்து வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பழங்குடி மக்களின் உதவியுடன், வனப்பகுதி அருகே ஆயுதங்களுடன் வலம் வருபவர்களைக் கண்காணித்துவருகிறோம்’’ என்றார்.

கேரள வனத்துறை அமைச்சர் ராஜூ, ‘‘இந்தச் சம்பவம் தொடர்பாக, கேரளாவைக் குறிவைத்து பொய்யான தகவல்கள் பரவிவருகின்றன. சில அரசியல் கட்சிகள் குறுகிய கண்ணோட்டத்தில் முதிர்ச்சியற்ற கருத்துகளைக் கூறிவருகின்றன. உண்மையில், யானைகள் இறப்பு விகிதத்தில் தேசிய சராசரியைவிட, கேரளாவில் இறப்பு விகிதம் குறைவு. கேரளாவில் மொத்தம் 6,000 யானைகள் உள்ளன. 491 பயிற்சி யானைகளை வனத்துறை பராமரித்துவருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் ரயில் விபத்து, வேட்டை, வெடி போன்றவற்றால் 117 யானைகள் செயற்கையாக உயிரிழந்துள்ளன. 200-க்கும் மேற்பட்ட யானைகள் இயற்கை மரணமடைந்துள்ளன.

நாட்டிலேயே வனத்தைப் பராமரிப்பதில் நாங்கள்தான் முதலிடம் வகிக்கிறோம். அதே நேரத்தில், வனப்பகுதி அருகே குடியிருப்புகள் இருப்பதால் மனித - விலங்கு எதிர்கொள்ளல் இங்கேயும் இருக்கின்றன. அவற்றைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுத்துவருகிறோம். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளோம். வனவிலங்குகளுக்குத் தீங்கு விளைவிப்பவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

யானை அரசியல்!

‘கேரளத்தில் யானை இறந்த சம்பவம் கொலை பாதகம்’ என்று ஆவேசமாகக் கருத்து தெரிவித்த பா.ஜ.க எம்.பி-யான மேனகா காந்தி, ‘‘நாட்டில் அதிக அக்கிரமங்கள் நடப்பது மலப்புரத்தில்தான். சாலைகளில் விஷம் கலந்த தானியங்களைத் தூவி பறவைகளைக் கொல்வார்கள். ராகுல் காந்தி இந்த விஷயத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?’’ என்று கேள்வி எழுப்பி, கேரளாவின் வயநாடு தொகுதி எம்.பி-யாக இருக்கும் ராகுல் காந்தியையும் இதில் கோத்துவிட்டு அரசியல் தீயைப் பற்றவைத்தார். யானை இறந்தது பாலக்காட்டில் என்றாலும், மலப்புரம் மாவட்டம் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் பகுதி என்பதால், அந்தப் பகுதிக்கு எதிரான பிரசாரத்தை பா.ஜ.க-வினர் மேற்கொள்வதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த விஷயத்தில் கேரளத்தில் பா.ஜ.க தவிர பிற கட்சிகள் அனைத்தும் இணைந்து தங்கள் எதிர்ப்பைப் பதிவுசெய்தனர்.

கர்ப்பிணி யானையைக் கொன்ற ‘பன்னி படக்கம்’!

இதுபற்றிப் பேசிய முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் குஞ்ஞாலிகுட்டி, ‘‘யானையைக் கொன்றது கண்டனத்துக்குரியது, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். அதேசமயம் பாலக்காடு மாவட்டம், மன்னார்காட்டில் நடந்த சம்பவத்தை மலப்புரத்தில் நடந்ததாகச் சித்திரிக்க சில மத்திய அமைச்சர்கள் முயல்கிறார்கள். இந்தப் பிரசாரம் பா.ஜ.க-வின் வகுப்புவாத அஜண்டாக்களில் ஒன்று’’ எனக் கூறியுள்ளார்.

காங்கிரஸ் எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா, ‘‘பாலக்காட்டில் யானை மரணம் அடைந்த சம்பவத்தை வைத்து மலப்புரம் மாவட்டத்துக்கும், கேரளத்துக்கும் எதிராக வெளியிட்ட வெறுக்கத்தக்க அறிக்கையை பா.ஜ.க எம்.பி-யான மேனகா காந்தி திரும்பப் பெறுவதுடன் மன்னிப்பும் கேட்க வேண்டும்’’ எனத் தெரிவித்ததுடன், இந்தக் கருத்தை வலியுறுத்தி மேனகா காந்திக்கு கடிதமும் எழுதியுள்ளார்.

இதுபற்றி கேரள முதல்வர் பினராயி விஜயன், ‘‘இந்தச் சம்பவத்தை வைத்து கேரளத்துக்கு எதிராகவும், மலப்புரத்துக்கு எதிராகவும் தேசிய அளவில் திட்டமிட்ட பிரசாரம் நடத்தப்படுகிறது. மத்திய அமைச்சர் உள்ளிட்டவர்கள் இத்தகைய பிரசாரத்தின் மூலம் கேரளத்தையும் மலப்புரத்தையும் மோசமாகச் சித்திரிக்க முயல்கிறார்கள். கொரோனா தொற்றுக்கு எதிராக கேரளம் எடுத்துவரும் சிறப்பான நடவடிக்கைகளை மறைக்கும் விதமாக யானை இறந்த விவகாரத்தில் பொய்ப் பிரசாரம் நடத்துகிறார்கள்’’ என்றார் ஆவேசமாக.

மலப்புரம் குறித்து கருத்து தெரிவித்த மேனகா காந்திமீது காவல் நிலையத்தில் புகார்கள் கொடுக்கப் பட்டதை அடுத்து, அவர்மீது மலப்புரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கு கேரள பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ‘‘மீடியாக்களில் வெளியான செய்தி அடிப்படையில்தான் மலப்புரத்தில் யானை இறந்தது என மேனகா காந்தி கூறினார். கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட சம்பவத்தில் அரசின் வீழ்ச்சியை மறைக்கவே வழக்கு என்ற ஆயுதத்தைக் கையிலெடுக்கிறார்கள்’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism