Published:Updated:

குழந்தையைத் தூக்கிய மனநலம் பாதித்த பெண்?! ‘கடத்தல்’ சந்தேகத்தால் அடித்த மக்கள்! ஆரணியில் பரபரப்பு

ஆரணி
ஆரணி

ஆரணி அருகே வீதியில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தையைத் தூக்கிய மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகேயுள்ள கண்ணமங்கலம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி அஞ்சலா. இவர்களின் மூன்று வயது ஆண் குழந்தை சந்தோஷ், இன்று காலை 8 மணியளவில், வீட்டின் முன்புள்ள வீதியில் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது, அந்த வழியாக வந்த அறிமுகமில்லாத பெண் ஒருவர், திடீரென அந்தக் குழந்தையை தூக்கியுள்ளார். குழந்தை அழுதும், அவர் இறக்கிவிடவில்லை. சத்தம்கேட்டு வெளியில் வந்துப் பார்த்துள்ள குழந்தையின் பெற்றோர் அந்தப் பெண் மீது சந்தேகமடைந்துள்ளனர். குழந்தையைக் கடத்த முயற்சிப்பதாக, அவர்கள் சத்தம் போட்டதால் அக்கம், பக்கத்தினரும் ஓடி வந்து அந்தப் பெண்ணைப் பிடித்து தாக்கியுள்ளனர். இதுகுறித்து, தகவலறிந்ததும் கண்ணமங்கலம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்று அந்தப் பெண்ணை மீட்டு காவல் நிலையம் அழைத்துவந்து விசாரித்துள்ளனர்.

தாக்கப்பட்ட பெண்
தாக்கப்பட்ட பெண்

விசாரணையில், திருவண்ணாமலை அருகேயுள்ள தலையாம்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தப் பெண்மணி என்பதும், மேலும் அவர் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் சொல்லப்படுகிறது. கணவரும் பிரிந்து சென்றுவிட்டதால், ஆதரவில்லாமல் இருந்துள்ளார். இந்த நிலையில், வேலூருக்கு வந்த வள்ளி இன்று காலை ஊர் திரும்புவற்காக பேருந்தில் ஏறியுள்ளார். டிக்கெட் எடுக்கப் பணம் இல்லாததால், கண்ணமங்கலம் பேருந்து நிலையத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளார். இதையடுத்து, நடந்து சென்றபோது குழந்தையைத் தூக்கிக் கொஞ்சியுள்ளார். தவறுதலாகச் சந்தேகமடைந்த மக்கள், அவர் தாக்கிக் காயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. உண்மையில், அந்தப் பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் தானா? என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள அவரின் உறவினர்களையும் தொடர்புகொண்டு காவல் நிலையம் வருமாறு போலீஸார் கூறியுள்ளனர். விசாரணையும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

அடுத்த கட்டுரைக்கு