Published:Updated:

நூதன முறையில் மோசடி; குவியும் புகார்கள்! - ரஃபோல் நிறுவன உரிமையாளர் தலைமறைவு

ரஃபோல் நிறுவனத்தின் மீது பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்களிடமிருந்து, பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் 1,000-க்கும் அதிகமான புகார்கள் குவிந்துள்ளன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கடந்த ஜூலை மாதம் வியக்கவைக்கும் விளம்பரத்தை `Rafoll Retails Pvt Ltd Egg Mart' என்ற நிறுவனம் வெளியிட்டிருந்தது. அந்த விளம்பரத்தில், ஒரு முட்டை 2.24 ரூபாய் விலையில் வழங்கப்படும் என்றும், 700 ரூபாய் முதலீடு செய்தல் வாரம் ஆறு முட்டை, 1,400 ரூபாய் முதலீடு செய்தல் 12 முட்டை, 2,800 ரூபாய் முதலீடு செய்தல் 24 முட்டை நேரடியாக அவர்களின் வீடுகளுக்கே டெலிவரி செய்யப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இந்தச் சலுகை முதலில் வரும் ஐந்து லட்சம் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ரஃபோல் நிறுவன விளம்பரம்
ரஃபோல் நிறுவன விளம்பரம்

இந்த விளம்பரத்தை அடுத்து பல பொதுமக்களும், குறைந்த விலையில் முட்டைகளை வாங்க அந்த நிறுவனத்தின் வங்கிக் கணக்குக்குப் பணம் செலுத்தினர். இந்த விளம்பரத்தில் கூறப்பட்டதுபோலக் குறைந்த விலையில் முட்டை கொடுப்பது சாத்தியமே இல்லை என்று முட்டை விற்பனையாளர்களும், விநியோகஸ்தர்கள் சங்கமும் தெரிவித்திருந்தனர். இந்த விளம்பரத்தில் ஏதோ வில்லங்கம் இருப்பதாகக் கருதிய பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளரை நேரடியாக விசாரணைக்கு வரும்படி சம்மன் அனுப்பினார்.

இதைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தின் உரிமையாளரான அரக்கோணத்தைச் சேர்ந்த சிவம் நரேந்திரன், கிண்டியிலுள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். இவரிடம் குற்றப்பிரிவு காவல்துறை சார்பில் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறியிருக்கிறார். மேலும், விசாரணையில் உரிய அனுமதி எதுவும் பெறாமல் திருமுல்லைவாயிலில் நிறுவனம் நடத்திவருவதும் தெரியவந்தது. அதுமட்டுமின்றி, அவர்கள் நிறுவனம் வெளியிட்டிருந்த விளம்பரத்தை நம்பிப் பலரும் அனுப்பிய பணத்துக்கு ரசீது எதுவும் அனுப்பப்படவில்லை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

மோசடி நிறுவனம்
மோசடி நிறுவனம்

அந்தத் திட்டத்தில் சேருவதற்கு நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் 300-க்கும் அதிகமான பேர் 4.5 லட்சம் ரூபாயை அனுப்பியிருந்தனர். அந்தப் பணத்தையெல்லாம் அவர்களின் வங்கிக் கணக்குக்கே காவல்துறையினர் திரும்பி அனுப்பினர். மேலும், அந்த வங்கிக் கணக்குக்கு இனி யாரும் பணம் அனுப்ப முடியாமல் செய்ததோடு, அந்த அனுமதி பெறாத நிறுவனத்தை மூடினர். அந்த நிறுவனம் ஏற்கெனவே பலசரக்கு வியாபாரம் செய்துவருவதும் குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் இந்தச் சம்பவம் நடந்தபோதே, `விளம்பரங்களை நம்பி மக்கள் யாரும் ஏமாற வேண்டாம்’ என்று குற்றப்பிரிவு காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கைவிடப்பட்டது.

`இன்டர்நெட் பேக்கிங்கில் நூதன மோசடி; உஷார்..!' - SBI வாடிக்கையாளரின் நேரடி அனுபவம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தநிலையில் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்ததாக, தமிழகம், கர்நாடக, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான புகார்கள் சென்னை கிண்டியிலுள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகதுக்க்கு வந்தவண்ணம் இருந்திருக்கிறது. இந்த நிறுவனத்தின் சார்பில் பல்வேறு சீட்டுத் திட்டங்கள் நடத்தப்பட்டு வந்துள்ளன. இந்தத் திட்டங்களில் முதலில் சேர்ந்த நபர்களுக்கு மளிகைப் பொருள்கள், பரிசுப் பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன. கடைசியாக மாதம் 3,000 ரூபாய் சீட்டுக் கட்டிய யாருக்குமே பணமோ, பொருளோ எதுவுமே வழங்கப்படவில்லை. ஏமாந்த பொதுமக்கள் பலர் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகாரளிக்க வந்திருந்தனர்.

அடித்து நொறுக்கப்பட்ட நிறுவனம்
அடித்து நொறுக்கப்பட்ட நிறுவனம்

இது குறித்து அந்த நிறுவன உரிமையாளர் சிவம் ஓர் ஆடியோ வெளியிட்டது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அந்த ஆடியோவில், தன்னைக் குறித்து காவல்துறையில் புகார் வழங்கினால் அனைவருக்கும் மஞ்சள் நோட்டீஸ் வழங்கிவிடுவேன் என்று மிரட்டும் தொனியில் பேசியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த நிறுவனத்தில் நுழைந்து நிறுவனத்தை அடித்து நொறுக்கியுள்ளனர். தங்கள் பணத்தைத் திரும்பப் பெற்றுத் தருமாறு முதலீடு செய்த மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் தலைமறைவாக இருக்கும் சிவன் உள்ளிட்ட 12 நபர்களைத் தேடிவருகிறார்கள்.

இது போன்ற கவர்ச்சிகரமான திட்டம் என்ற பெயரில் நம்பகத்தன்மை இல்லாத மோசடி நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என்று காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு