Published:Updated:

தூத்துக்குடியில் அதிகரிக்கும் இளம் வயது குற்றவாளிகள்! என்ன காரணம்?

துறைமுக நகரம்... தொழிற்சாலை நகரமான தூத்துக்குடி, கடந்த மூன்று மாதங்களில் கொலை நகரமாக மாறி உள்ளது. இதுவரை நடந்த 20 கொலைக் குற்றங்களில் ஈடுபட்டு, கைதாகியவர்களில் பெரும்பாலானோர் 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் என்பதுதான் வேதனை அளிக்கிறது.

young criminals
young criminals

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதத்தில் 11 கொலைகள், ஆகஸ்ட் மாதத்தில் 4, செப்டம்பரில் 5 என, மொத்தம் 20 கொலைகள் நடந்துள்ளன. ஜூலை 4-ல் குளத்தூரில் காதல் திருமணம் செய்த சோலைராஜா, ஜோதி தம்பதியினர் தூங்கிக்கொண்டிருக்கும்போதே வெட்டிச் சாய்க்கப்பட்டனர். ஜோதியின் தந்தையே இச்சம்பவத்தில் நேரடியாக ஈடுபட்டதால் ஆணவக் கொலையாகப் பேசப்பட்டது. அதே மாதம் 22-ம் தேதி தி.மு.க செயற்குழு உறுப்பினர் கருணாகரன் தோட்டத்தின் முன்பே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

Murder
Murder

ஆகஸ்ட் 21-ல், கொலை வழக்கு விசாரணையில் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த சிவகுமார், நீதிமன்றம், காவல்நிலையம் அருகில் சினிமா காட்சியையே விஞ்சும் வகையில் நடுரோட்டில் வைத்து வெட்டப்பட்டார். 14 ஆண்டுகள் கழித்துப் பழிக்குப் பழியாக நடந்தது இச்சம்பவம். அதே மாதத்தில் 27-ம் தேதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ரவுடி சிந்தா பாண்டியன் கொலை செய்யப்பட்டார்.

செப்டம்பர் 15-ம் தேதி தெருவுக்குள் வேகமாக பைக் ஓட்டிச் சென்றவரை ``ஏய் தெருவுக்குள்ள மெதுவா போப்பா... சின்னப்பிள்ளைகள் குறுக்க வந்தா என்ன ஆகும்?” என எச்சரித்த இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.

``ஏய்.. தெருவுக்குள்ள மெதுவா போப்பா..!” - இளைஞர்களை எச்சரித்த இருவருக்கு நேர்ந்த துயரம்

அதேநாளில், அடுத்த சில மணிநேரத்திலேயே தன் வீட்டின் அருகில் மது அருந்திக்கொண்டிருந்தவர்களைத் தட்டிக்கேட்ட லாரி டிரைவர் சொரிமுத்துவை தூங்கிக்கொண்டிருந்தபோது கத்தியால் குத்தி கொலை செய்தது போதைக் கும்பல். கடந்த 23-ம் தேதி மதிய உணவு இடைவேளைக்கு வீட்டுக்குச் சாப்பிடச் சென்ற பாலிடெக்னிக் மாணவர், முன்விரோதம் காரணமாகக் கல்லூரி அருகிலேயே துரத்தி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மற்ற கொலைகள் குடும்ப பிரச்னைகளுக்காக நடந்தவை.

Murder
Murder

``அதிகப்படியான கஞ்சா நடமாட்டம்தான் தொடர் கொலைகளுக்குக் காரணம். போலீஸாரின் இரவு நேர ரோந்து என்பதே தற்போது இல்லை. குற்றவழக்குகளில் வாரண்ட் பிறக்கப்பட்டும் பிடிபடாமல் டிமிக்கி கொடுத்து வருபர்கள், ஏதாவது சம்பவங்களை நடத்திவிட்டு தப்பியோடிவிடுகின்றனர். அவர்களைப் பிடிக்க போலீஸாரும் தீவிரம் காட்டவில்லை” எனக் குற்றம்சாட்டுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

கொலை, கொள்ளை, வழிப்பறி... என எந்தெந்தத் தேதியில் என்னென்ன குற்றங்கள் நடைபெற்றன என்று, மூன்று மாதத்துக்கான தேதிகளுடன்கூடிய குற்றப்பட்டியல் ஒன்றும் சமூகவளைதளங்களில் வைரலானது.

“பொதுமக்கள் மத்தியில் அவசர அழைப்பு எண் 100 என்பது பற்றி விழிப்புணர்வு இல்லாதது பின்னடைவாக உள்ளது. 200 வாகனங்களில் போலீஸ் ரோந்து இரவு பகலாகத் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பழைய குற்றவாளிகளின் நடமாட்டம் ரகசியமாகக் கண்காணிக்கப்படுகிறது. கடந்த 2 மாதங்களில் மட்டும் 10 வழக்குகளில் 19 குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. 9 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

SP Arun Balagopalan
SP Arun Balagopalan

போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் 45 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 340 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 100-க்கு வரும் அழைப்புகளில் 14 நிமிடங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்கிறார் மாவட்ட எஸ்.பி அருண்பால கோபாலன்.

இந்தச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களில் 18 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள்தாம் அதிகம். சில கொலைகளில் நன்றாகப் பழகிய நண்பர்களே கொலை செய்துள்ளனர்.

இளம் வயதுக் குற்றவாளிகள் அதிகரிக்க என்ன காரணம் என்பது குறித்து தூத்துக்குடியைச் சேர்ந்த மனநல மருத்துவர் சிவசைலத்திடம் பேசினோம், ``இது போன்ற கொலைக் குற்றங்களில் தற்போது இளம் வயதுகொலையாளிகள் அதிக எண்ணிக்கையில் ஈடுபடுகின்றனர் என்பது வருத்தமளிக்கிறது, தாம் என்ன செய்கிறோம் என்பதை உணராமல் தவறான நண்பர்களின் சகவாசத்தால் கொலை போன்ற பெரிய குற்றங்களை சாதாரணமாகச் செய்கின்றனர். சமூக வளைதளங்களின் தாக்கமும் இதற்கு முக்கிய காரணம். சிறுவனாக இருப்பவன் தன்னை எல்லோரும் பெரிய ஆளாக நினைத்து மரியாதை செய்ய வேண்டும் என்ற நோக்கில் இவ்வாறு செயல்படுகின்றனர்.

சிவசைலம் - மனநல மருத்துவர்
சிவசைலம் - மனநல மருத்துவர்

தன்னை தாழ்வாகக் கருதும் இவர்கள், இந்தச் சமூகம் தன்னை அண்ணாந்து உயர்வாகப் பார்க்க வேண்டும் என்றும் எண்ணுகிறார்கள். சினிமாக்களில் தற்போது ரத்தத்தைத் தெறிக்க விடுகிற காட்சிகளே அதிகம் காட்டப்படுகிறது. அதுதான் ஆண்களின் ஆளுமை என்ற கோணத்தில் தவறாகச் சித்திரிக்கப்படுகிறது. கசங்கியசட்டை, 15 நாள் தாடி, மூர்க்கத்தனம் ஆகியவைதான் வீரமுள்ள ஆண் என்ற எண்ணம் இவர்களது மனதில் ஆழமாக விதைக்கப்படுகிறது.

சாதாரண தவறும் பெருங்குற்றத்தையும் வேறுபடுத்த இவர்கள் உணராததும் ஒரு காரணம். கொலையைக்கூட ஒரு சாதாரண சம்பவமாக எண்ணுகிறார்கள். மது, கஞ்சா போன்ற போதைப் பழக்க வழக்கங்களும், இது போன்ற சம்பவம் நடக்க மிக முக்கிய காரணம். சாதிய உணர்வு, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் விதைக்கப்படுகிறது. சாதியைக் காக்க வந்தவர்கள் தாங்கள் என்ற மனோநிலை அவர்களுக்குள் ஏற்படுத்தப்படுகிறது. இதைப் போக்க பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். போதைப் பழக்கங்களிலிருந்து இளைஞர்கள் மீட்கப்பட வேண்டும்.

young criminals
young criminals

வாழ்க்கையில் இது போன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வாழ்க்கையைத் தொலைத்த பழைய குற்றவாளிகளின் வாழ்க்கைப் பாடத்தைக் காட்ட வேண்டும். நன்நெறி வகுப்புகள், ஒழுக்க முறைகளைச் சிறுவயதிலிருந்தே போதிக்க வேண்டும். பிள்ளைகளைத் தொடக்கத்திலிருந்தே கண்காணித்து, தவறு செய்யும் பட்சத்தில் கவுன்சலிங் கொடுத்து, அவர்களைத் திருத்த வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமை” என்றார்.