Published:Updated:

கார் சேஸ், தூத்துக்குடி குண்டு, டாக்குமென்ட் மாஃபியா... தேனாம்பேட்டை குண்டுவீச்சு பின்னணி என்ன?

வெடிகுண்டு வீசப்பட்ட இடம்

தேனாம்பேட்டை வெடிகுண்டு வீச்சு வழக்கில், டபுள் டாக்குமென்ட் மாஃபியா இருப்பதாகக் கூறப்படுகிறது. #TamilnaduCrimeDiary

கார் சேஸ், தூத்துக்குடி குண்டு, டாக்குமென்ட் மாஃபியா... தேனாம்பேட்டை குண்டுவீச்சு பின்னணி என்ன?

தேனாம்பேட்டை வெடிகுண்டு வீச்சு வழக்கில், டபுள் டாக்குமென்ட் மாஃபியா இருப்பதாகக் கூறப்படுகிறது. #TamilnaduCrimeDiary

Published:Updated:
வெடிகுண்டு வீசப்பட்ட இடம்

``சார், ஸ்டேஷன் பக்கத்துலயே பாம் வீசிட்டாங்க சார். உடனே யாராவது வாங்க...”

மார்ச் 3-ம் தேதி மாலை தேனாம்பேட்டை காவல் நிலையத்துக்குள் ஓடிவந்த நபர் ஒருவர், மூச்சிரைக்க இப்படி கூற போலீஸாருக்கே வியர்த்துவிட்டது. அமெரிக்க தூதரகம், ஜெமினி மேம்பாலம், காமராஜர் அரங்கம், மசூதி என முக்கிய இடங்கள் அமைந்துள்ள பகுதி, 24 மணிநேரமும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட பகுதியாகும். இங்கேயே பட்டப்பகலில் நடைபெற்ற இந்த வெடிகுண்டு வீச்சு சம்பவம் சென்னை மக்களை பீதியடைய வைத்துள்ளது. ரவுடிகள் சி.டி.மணி, காக்கா தோப்பு பாலாஜி இருவரையும் குறிவைத்து நிகழ்த்தப்பட்ட இந்தத் தாக்குதலின் பின்னணியில் `டபுள் டாக்குமென்ட்’ நில விவகாரம் இருப்பதாக கூறப்படுகிறது. சிறைக்குள்ளிருந்து ஸ்கெட்ச், திகிலூட்டும் சேசிங், மயிரிழையில் தப்பித்த ரவுடிகள் என கலவரமாகவே கடந்துள்ள மார்ச் 3-ம் தேதி, சென்னை ரவுடிகள் கேங் வார் உச்சக்கட்டத்தை அடைந்திருப்பதை உணர்த்துவதாக போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

சி.டி.மணி
சி.டி.மணி

யார் இந்த சி.டி.மணி?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சென்னை தேனாம்பேட்டை தாமஸ் சாலையைச் சேர்ந்தவர் மணிகண்டன். 90’களில் சாதாரண பிளாட்பார வியாபாரியாக வாழ்க்கையை தொடங்கிய மணிகண்டன், பின்னாளில் திருட்டு சிடி விற்பனையில் இறங்கினார். அந்தத் தொழிலில் கொடிகட்டிப் பறந்ததால், மணிகண்டனின் பெயர் சிடி மணி என்றானது. பிற்பாடு உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு சிறுசிறு திருட்டுச் சம்பவங்கள், செயின் பறிப்பு குற்றச் செயல்களில் ஈடுபட்ட சிடி மணிக்கு, ரவுடி திண்டுக்கல் பாண்டியின் நட்பு கிடைத்தது. 2009-ல் திண்டுக்கல் பாண்டியை என்கவுன்டரில் போலீஸ் கொன்றுவிட, அவரிடத்தைப் பிடிப்பதற்கு சிடி மணிக்கும் மற்ற சிஷ்யர்களுக்கும் இடையே போட்டி எழுந்தது. அடுத்தடுத்து கொலைகள் விழுந்தன. சென்னை அலறி முடிப்பதற்குள், தென்சென்னை முழுவதையும் சிடி மணி தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். இன்று ரியல் எஸ்டேட், ஆள்கடத்தல், கொலை, போலி டாக்குமென்ட் விவகாரங்களில் மணியின் கை சென்னையில் ஓங்கியிருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மணியின் ஸ்பெஷாலிட்டியே போலீஸாரை அவர் கையாளும் விதம்தான். தான் பயணிக்கும் காரில் எப்போதுமே இருபது லட்சத்துக்கும் குறையாமல் பணத்தை எடுத்துச் செல்வார். ஒருவேளை தன்னை போலீஸார் பிடித்துவிட்டால், அப்படியே அவர்களிடம் சரண்டராகி, ``என்னைக் கொன்னுடாதீங்க. கார்ல 20 லட்ச ரூபாய் பணமிருக்கு, எடுத்துகிட்டு என்னைய கோர்ட்ல ஆஜர்படுத்திடுங்க” என்று டீல் பேசுவார். பணத்துக்கு மயங்கும் போலீஸார், மணியைக் கைது செய்து ஸ்டேஷனுக்கு அழைத்து வருவார்கள். அதற்குள் விஷயத்தை தெரிந்துகொள்ளும் அவருடைய ஆதரவாளர்கள், மணியின் கைதை மீடியாக்களுக்கு பரப்பிவிடுவார்கள். மணியை அதற்கு மேல் என்கவுன்டர் செய்யமுடியாமல் போய்விடும். காவல்துறைக்குள் மணிக்கு அபரிமிதமான ஆட்கள் உள்ளதால்தான், ரவுடி பினு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் போலீஸ் குறிவைத்திருப்பதை முன்கூட்டியே அறிந்து தப்பிச் சென்றார்.

காக்கா தோப்பு பாலாஜி
காக்கா தோப்பு பாலாஜி

யார் இந்த காக்கா தோப்பு பாலாஜி?

சிடி மணி ஹைடெக் டான் என்றால், காக்கா தோப்பு பாலாஜி லோக்கல் டான். சென்னை பிராட்வே காக்கா தோப்பு பகுதியிலுள்ள வள்ளுவர் நகர்தான் பாலாஜியின் பூர்வீகம். இவரது சித்தப்பா துரை, வியாசர்பாடியில் பெரிய ரவுடியாக வலம் வந்ததைப் பார்த்து, பாலாஜிக்கும் ரவுடியாகும் ஆசை துளிர்விட்டது. ஒன்பதாம் வகுப்போடு படிப்பை கைவிட்ட காக்கா தோப்பு பாலாஜி, நண்பர்கள் யுவராஜ், இன்பராஜ் ஆகியோருடன் இணைந்து மூலக்கொத்தளம் ரவுடி புஷ்பாவைக் கொலை செய்தார். யார் பெரியவர் என்கிற போட்டியில் நண்பன் யுவராஜையும் காக்கா தோப்பு பாலாஜி போட்டுத் தள்ளிவிட, வடசென்னையில் பெரிய ரவுடியாக உருவெடுத்தார். அப்போது ரவுடி குறநடராஜனுடன் ஏற்படுத்திக்கொண்ட நட்பால், வெளிமாவட்ட கொலை அசைன்மென்டுகளையும் முடித்துக் கொடுத்தார். செம்மரக்கடத்தலில் கோலோச்சிய மாதவரம் மனோஜ் மூலமாக, செம்மரத் தொழிலிலும் கால் பதித்த பாலாஜியின் எல்லை, ஆந்திராவின் தடா வரை விரிந்துள்ளது. இன்று வடசென்னை ஏரியாக்களில் கையாளப்படும் கன்டெய்னர் முதல் குடோன்கள் வரையில் அனைத்தும் பாலாஜியின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. காக்கா தோப்பு பாலாஜிதான் சென்னையின் இன்றைய நம்பர் ஒன் தாதா. இப்படிப்பட்ட இவர்கள் இருவருக்கும்தான் ஒரு கும்பல் குறிவைத்து வெடிகுண்டு வீசியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டார்கெட் பார்ச்சூனர்

மார்ச் 3-ம் தேதி சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜரான காக்கா தோப்பு பாலாஜி, சிடி மணி இருவரும் உணவருந்திவிட்டு சென்னை தி.நகர் நோக்கி மாலை 3 மணியளவில் கிளம்பியுள்ளனர். சிடி மணியின் டொயோட்டா பார்ச்சூனர் காரை அவரது வழக்கறிஞர் ஓட்டியுள்ளார். கார் அண்ணாசலையை தொட்டவுடன் நான்கு பைக்குகளில் எட்டு பேர் வாகனத்தைப் பின்தொடரத் தொடங்கியுள்ளனர்.

தேனாம்பேட்டை வெடிகுண்டு வீச்சு சம்பவ இடத்தின் சிசிடிவி காட்சிகள்
தேனாம்பேட்டை வெடிகுண்டு வீச்சு சம்பவ இடத்தின் சிசிடிவி காட்சிகள்

தாராப்பூர் டவர், ஸ்பென்ஸர் சிக்னல், ஆனந்த் தியேட்டர் சிக்னல் என ஒவ்வொரு சிக்னலிலும் காரில் இருந்த காக்கா தோப்பு பாலாஜி, சிடி மணி இருவரையும் போட்டுத் தள்ள சமயம் பார்த்தவர்கள், டிராபிக் அதிகமாக இருந்ததால் நெருங்க முடியாமல் தவித்துள்ளனர்.

தேனாம்பேட்டை வெடிகுண்டு வீச்சு சம்பவ இடத்தின் சிசிடிவி காட்சிகள்
தேனாம்பேட்டை வெடிகுண்டு வீச்சு சம்பவ இடத்தின் சிசிடிவி காட்சிகள்

``நம்மளை சுத்திட்டானுங்க, ரூட்டை மாத்து!”

ஆயிரம் விளக்கு மசூதியைத் தாண்டியவுடன் காரை சிலர் பின்தொடர்வதை சிடி மணி முதலில் பார்த்துள்ளார். வண்டியை ஜெமினி மேம்பாலத்தின் மீது ஏற்றாமல், கீழே போகச் சொல்லியுள்ளார். ஜெமினி மேம்பாலம் சிக்னலில் நின்ற கார், க்ரீன் சிக்னல் விழுவதற்கு முன்னதாகவே தேனாம்பேட்டையை நோக்கிச் சீற ஆரம்பித்துள்ளது. இதை சற்றும் எதிர்பாராத பைக் பார்ட்டிகள், காருக்கு அருகே நெருங்கியுள்ளனர். ``நம்மளை சுத்திட்டானுங்க, ரூட்டை மாத்து” என்று மணி சத்தமிட்டுள்ளார். மின்னல் வேகத்தில் பாலத்துக்கு அடியில் சென்ற கார், சர்வீஸ் சாலையில் இடதுபுறம் திரும்பி, ஒன்வேயில் எதிர்திசையில் தறிகெட்டு பறந்துள்ளது.

``தப்பிக்குறான், காயை எறிங்கடா!”

பாலத்துக்கு அடியில் சென்ற கார், காமராஜர் அரங்கம் அருகே மேயர் சுந்தர் ராவ் சாலையில் ஒன்வேயில் திரும்பியுள்ளது. இந்த திடீர் திசைமாற்றலை எதிர்பாராத பைக் பார்ட்டிகள், ``தப்பிக்குறான், காயை எறிங்கடா”, எனக் கத்தியபடியே இரண்டு வெடிகுண்டுகளை பார்ச்சூனர் காரை நோக்கி வீசியுள்ளனர். குறிதவறி சாலையில் விழுந்து வெடித்த வெடிகுண்டுகள், அருகிலிருந்த கார் ஷோரூம் உரிமையாளர் காபர்கானின் கார் கண்ணாடிகளைப் பதம் பார்த்தன. அதற்குள்ளாக ரவுடிகள் காக்கா தோப்பு பாலாஜி, சிடி மணி இருவரும் தப்பிவிட்டனர். இச்சம்பவம் தொடர்பாக, வெடிகுண்டு வீசிய கல்லூரி மாணவர் மகேஷ் என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

வீசப்படும் வெடிகுண்டு
வீசப்படும் வெடிகுண்டு

இச்சம்பவத்தில் பூந்தமல்லி சிறைச்சாலையிலுள்ள மயிலாப்பூர் ரவுடி சிவக்குமார், வண்ணாரப்பேட்டை ரவுடி சம்போ செந்தில் ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன. சிறையிலிருந்து சிவக்குமார் ஸ்கெட்ச் போட்டு கொடுத்துவிட, சம்போ செந்தில் ஏற்பாட்டில்தான் இந்தக் கொலைத் திட்டம் தீட்டப்பட்டு, இரண்டு கார், நான்கு பைக்குகளில் கூலிப்படை இறங்கியதாகக் கூறப்படுகிறது. காரில் இருந்த கூலிப்படையினர், அண்ணாசலை ஆலையம்மன் கோவில் அருகிலும் ஜெமினி மேம்பாலத்துக்கு கீழும் காத்திருந்துள்ளனர்.

தடயவியல் நிபுணர் சோதனை
தடயவியல் நிபுணர் சோதனை

உஷாரான சிடி மணி திடீரென தனது ரூட்டை மாற்றியதால், எதிர்தரப்பின் ஸ்கெட்ச் பாழானதாகக் கூறப்படுகிறது. வெடிகுண்டை வீசியவுடன் காரில் இருந்து பிஸ்டலுடன் இறங்க சிடி மணி முற்பட்டுள்ளார். ``சுத்தி எத்தனை பேர் இருக்காணுங்கனு தெரியாது. தப்பிச்சிருவோம்” என பாலாஜி உஷார்படுத்த, இருவரும் தப்பியுள்ளனர்.

அ.தி.மு.க தென்சென்னை வடக்கு மாவட்ட இளைஞரணி பொறுப்பிலுள்ள ஒருவர்தான் தற்போது சிடி மணிக்கு அரசியல் ஆதரவு தருபவர். இதனால்தான் காக்காதோப்பு பாலாஜியும் மணியும் பயணித்த காரில் ஜெயலலிதா படம் இருந்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த இளைஞரணிப் பிரமுகரை நெருங்க போலீஸ் தயங்குவதால் ரவுடிகளின் அட்டகாசம் கொடிகட்டிப் பறக்கிறது.

மடிப்பாக்கம் மேப்
மடிப்பாக்கம் மேப்

டபுள் டாக்குமென்ட் - பின்னணி

இந்தத் தாக்குதலின் பின்னணியில் டபுள் டாக்குமென்ட் விவகாரம் இருப்பதாக காவல்துறை வட்டாரம் கூறுகிறது. சென்னை மாநகர காவல்துறையின் உயரதிகாரி ஒருவர் நம்மிடம் கூறுகையில், ``மடிப்பாக்கம் பகுதியிலுள்ள சதுப்பு நிலங்களை நான்கு கிரவுண்ட் ப்ளாட்டுகளாக பிரித்து, டபுள் டாக்குமென்ட் தயாரித்து ஒரு கும்பல் விற்று வந்தது. முதலில் சதுப்பு நிலத்துக்கு ஒரு சர்வே எண் பதிவார்கள், அதை ஒருவர் பெயரில் `பவர் ஆப் அட்டார்னி' செய்து கொடுப்பார்கள். இதற்கு ஒரு கிரவுண்டுக்கு 30,000 ரூபாய் லஞ்சமாக வசூலிக்கப்படுகிறது. `பவர் ஆப் அட்டார்னி' அளிக்கப்பட்ட நிலத்தை இன்னொருவரின் பெயருக்கு ரிஜிஸ்டர் செய்வார்கள். இதற்கு நான்கு லட்ச ரூபாய் வரையில் லஞ்சம் அளிக்கப்படுகிறது.

`திரு'வான தாதாதான் இத்தொழிலில் முதலில் கோலோச்சியவர். நிலங்களை விற்று கோடி கோடியாக சம்பாதித்தார். அவருக்குப் போட்டியாக சிடி மணியின் கோஷ்டி டபுள் டாக்குமென்ட் தயாரித்து இடங்களை விற்கும் தொழிலில் இறங்கியது. இதில் கோடிக்கணக்கில் மதிப்புள்ள சொத்துகள் கைமாறின. இன்றும் சுமார் 400 கோடி மதிப்பிலான சதுப்புநில சொத்துகள் மடிப்பாக்கத்தில் உள்ளன. இதில் ஏற்பட்ட தொழில் போட்டியால்தான், மார்ச் 3-ம் தேதி சிடி மணி, காக்கா தோப்பு பாலாஜி மீது வெடிகுண்டுத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

நாட்டு வெடிகுண்டு
நாட்டு வெடிகுண்டு

தூத்துக்குடி மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்லும்போது, இலங்கை கடற்படை போன்று வேடமிட்டு கொள்ளையடிக்க வரும் இலங்கை நபர்களை அச்சுறுத்த கையோடு நாட்டு வெடிகுண்டுகளைக் கொண்டு செல்வார்கள். தண்ணீரில் வீசியெறிந்தாலும் வீரியமாக வெடிக்க கூடிய குண்டுகள் அவை. அந்த வகை குண்டுகள்தான் இச்சம்பவத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. துப்பாக்கியோடும் கூலிப்படையினர் காத்திருந்துள்ளனர். சிடி மணியும் காக்கா தோப்பு பாலாஜியும் காரில் இருந்து இறங்கியிருந்தால் பெரிய துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறியிருக்கும். சம்போ செந்தில், மயிலாப்பூர் சிவக்குமார் எல்லோரும் கருவிகள்தான். உண்மையான குற்றவாளி யார் என்பதை விசாரித்து வருகிறோம்” என்றார்.

சம்பவம் நடைபெற்ற இடத்தில் மூன்று அதிநவீன சிசிடிவி கேமராக்கள் போலீஸாரால் பொருத்தப்பட்டுள்ளன. மூன்றுமே வேலை செய்யவில்லை. இச்சம்பவம் தொடர்பாக தாம்பரம், மதுரை, தென்காசி நீதிமன்றங்களில் மொத்தம் 13 பேர் சரணடைந்துள்ளனர். வெடிகுண்டு வீசிய மகேஷ் என்கிற இளைஞரையும் அவரது நண்பரையும் போலீஸ் கைது செய்துள்ளது. இவர்கள் யாராவது வாயைத் திறந்தால் மட்டுமே ஏதாவது உண்மை வெளிவரும். தற்போதைக்கு, கார் ஷோரூம் உரிமையாளர் காபர்கான் அளித்த புகாரின் அடிப்படையிலேயே போலீஸ் வழக்கு பதிந்துள்ளது. இதற்கிடையே, சிடி மணியின் வழக்கறிஞர் தங்கராஜ் தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்திருக்கிறார். அதில், `சம்பவத்தன்று சிடி மணி, காக்கா தோப்பு பாலாஜி இருவருடன் நான் பார்ச்சூனர் காரில் பயணித்தேன். அப்போது சிலர் எங்களைக் கொலை செய்யும் நோக்குடன் துப்பாக்கியால் சுட்டபடி வந்தனர். மயிரிழையில் அவர்களிடம் இருந்து தப்பித்தோம். எனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்' என்று கோரியுள்ளார்.

சம்பவ இடத்தை பார்வையிடும் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன்
சம்பவ இடத்தை பார்வையிடும் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன்

ரவுடிகளுக்கு இடையேயான போட்டியில், இவர்கள் வீசியெறிந்த குண்டு யாராவது பொதுமக்கள் மீது பட்டு வெடித்திருந்தால், அவர்களின் உயிருக்கும் குடும்பத்துக்கும் யார் பொறுப்பேற்பது? காவல்துறையிலுள்ள சில ஆய்வாளர்களும் உதவி கமிஷனர்களும் ரவுடிகளோடு இணக்கமாக இருந்துகொண்டு அவர்களுக்குத் தகவல்களை அளிக்கின்றனர். இவர்களை களையெடுக்க கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் முயற்சி செய்தாலும், சம்பந்தப்பட்டவர்கள் ஏதாவது ஒரு அமைச்சரை பிடித்துக்கொண்டு சிபாரிசுக்கு வருவதால் மேல்நடவடிக்கை ஏதுமற்று போய்விடுகிறது. சென்னையில் போலீஸ் - ரவுடிகள் கூட்டணி முதலில் அறுபட வேண்டும். ரவுடிகளின் கொட்டத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்கினால் மட்டுமே அமைதி நிலவும். உள்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சாட்டையை எடுத்தால் மட்டுமே நிலைமை கட்டுக்குள் வரும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism