Published:Updated:

`கொள்ளைபோனது 115 கிலோ ஐம்பொன் சிலைதானா?’- காட்பாடி மாரியம்மன் கோயில் சர்ச்சை

காட்பாடியில் உள்ள அம்மன் கோயிலில், 115 கிலோ எடையிலான ஐம்பொன் சிலையை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றதாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

சிலை கொள்ளைபோன மாரியம்மன் கோயில்
சிலை கொள்ளைபோன மாரியம்மன் கோயில்

வேலூரை அடுத்த காட்பாடியிலிருந்து வள்ளிமலை செல்லும் சாலையில் உள்ள வி.டி.கே நகரில், பழைமையான மாரியம்மன் கோயில் அமைந்திருக்கிறது. இங்கு, மூன்று அடி உயரத்தில் 115 கிலோ எடையிலான ஐம்பொன் அம்மன் சிலை, பீடத்துடன் இருந்ததாகச் சொல்கிறார்கள்.

மாரியம்மன் கோயில்
மாரியம்மன் கோயில்

நேற்றிரவு பூஜையை முடித்துவிட்டு அர்ச்சகர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். நள்ளிரவில் கோயிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் ஐம்பொன் சிலையைக் கொள்ளையடித்துச் சென்றதாக கூறப்படுகிறது. இன்று காலை கோயிலுக்கு வந்த நிர்வாகிகளும், அர்ச்சகரும் சிலை மாயமாகியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். 

உடனே, காட்பாடி காவல் நிலையத்துக்குச் சென்று புகார் அளித்தனர். போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்திவருகிறார்கள். இதுபற்றி, காட்பாடி போலீஸாரிடம் கேட்டதற்கு, ``ஐம்பொன்னால் செய்யப்பட்ட 5 கிலோ சிலையின் மதிப்பே பல லட்சம் ரூபாய் இருக்கும்.

காட்பாடி காவல் நிலையம்
காட்பாடி காவல் நிலையம்

ஆனால், திருடப்பட்டதாக சொல்லும் இவர்களின் 115 கிலோ சிலையின் மதிப்பு வெறும் 15 லட்சத்திலிருந்து 20 லட்சம் ரூபாய்தான் இருக்கும் என்கிறார்கள். இது, நம்பும்படியாக இல்லை. சாதாரண சிலையாக இருக்கலாம். கோயிலின் இரண்டு கதவுகளை திறந்தே வைத்திருக்கிறார்கள். அருகிலிருக்கும் ரயில்வே கேட்டும் நள்ளிரவில் மூடப்பட்டிருந்தது.

இதை வைத்துப் பார்க்கும்போது, உள்ளூரைச் சேர்ந்தவர்களே சிலையைத் திருடியிருக்கலாம். ஐம்பொன் சிலை இருக்கும் கோயில்களுக்குப் பாதுகாப்பு வழங்கிவருகிறோம். இவர்கள், ஏன் எங்களுக்கு ஐம்பொன் சிலை இருக்கும் தகவலை இதுவரை சொல்லவில்லை. அப்படி, ஐம்பொன் சிலை இருப்பதைத் தெரிவித்திருந்தால் நாங்கள் பாதுகாப்பு வழங்கியிருப்போமே’’ என்றனர்.

இந்த சிலைக்கு அருகில் உள்ள பீடத்தில்தான் ஐம்பொன் சிலை இருந்ததாகச் சொல்கிறார்கள்.
இந்த சிலைக்கு அருகில் உள்ள பீடத்தில்தான் ஐம்பொன் சிலை இருந்ததாகச் சொல்கிறார்கள்.

இதுபற்றி கோயில் நிர்வாகிகளிடம் பேசினோம். ``அது, ஐம்பொன்னால் ஆன சிலைதான். பித்தளை, செம்பு, வெண்கலம், வெள்ளி, தங்கம் போன்றவற்றை பக்தர்களிடம் காணிக்கையாக கிலோ கணக்கில் பெற்று வாலாஜாபேட்டையில் உருவாக்கி கோயிலில் பிரதிஷ்டை செய்து வழிபட்டுவந்தோம். சிலையைக் கண்டுபிடித்துக் கொடுத்தால் ஐம்பொன் சிலை என்பதை உறுதிப்படுத்துவோம்’’ என்றனர்.