Published:Updated:

` 4 மாநிலங்கள், 100 வழக்குகள், தலைமறைவு வாழ்க்கை!' - திருவாரூர் முருகனின் திகில் பின்னணி

திருச்சி ஜூவல்லரியில் நடந்த கொள்ளையில் ஈடுபட்டது திருவாரூர் முருகனின் கூட்டாளிகள் எனத் தெரியவந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக 4 மாநில போலீஸார் திருவாரூர் முருகனைத் தேடிவருகின்றனர்.

திருவாரூர் முருகன்
திருவாரூர் முருகன்

பெரியளவில் கொள்ளைச் சம்பவங்கள் நடக்கும்போதெல்லாம் காவல்துறையினரின் சந்தேகப்பார்வை பழைய குற்றவாளிகள் மீது விழும். நவீன காலகட்டத்துக்கு ஏற்ப செல்போன் சிக்னல்கள், சிசிடிவி கேமராக்கள் ஆகியவை குற்றங்களைக் கண்டறிய காவல்துறையினருக்கு பெரிதும் உதவியாக இருந்துவருகிறது. திருச்சியில் நடந்த ஜூவல்லரி கொள்ளைச் சம்பவத்தில் துப்பு துலங்கியதால் போலீஸார் நிம்மதியடைந்துள்ளனர். கொள்ளைபோன நகைகளை போலீஸார் மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட தங்க நகைகள்
மீட்கப்பட்ட தங்க நகைகள்

திருச்சி ஜூவல்லரி கொள்ளைச் சம்பவத்தில் போலீஸாரிடம் சிக்கிய மணிகண்டன் கொடுத்த தகவலின் அடிப்படையில், இந்தக் கொள்ளையில் திருவாரூர் முருகனின் மாஸ்டர் பிளான் இருப்பதை போலீஸார் உறுதி செய்துள்ளனர். போலீஸாருக்கு சிம்மசொப்பனமாக வலம் வரும் திருவாரூர் முருகனின் ஃப்ளாஷ்பேக் நீண்ட நெடிய திகில் கதை.

திருவாரூர், கல்லுபட்டறை, சீராத்தோப்பு, பேபிடாக்கீஸ் ரோடு பகுதிதான் முருகனின் சொந்த ஏரியா. ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு என 4 மாநிலங்களிலும் முருகன் மீது 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. கஜினி முகமது போல திருவாரூர் முருகனைப் பிடிக்க 4 மாநில போலீஸாரும் முயற்சி செய்தும் பலனில்லை. கர்நாடகா போலீஸாரிடம் சிக்கிய முருகன், அதன் பிறகு சிக்காத சில்வண்டாகத் தலைமறைவாகவே இருந்துவருகிறார்.

முருகனின் குடும்பம் எங்கு இருக்கிறது என்ற தகவல்கூட காவல்துறையினரிடம் இல்லை. இதுதான் முருகனை போலீஸாரால் பிடிக்க முடியாததற்கு முக்கிய காரணம். மேலும், முருகன், செல்போனை அதிகம் பயன்படுத்துவதில்லை. தன்னுடைய கூட்டாளிகளை, வாக்கி டாக்கி மூலம்தான் தொடர்புகொள்வார். அப்போது, கொள்ளைக்கான ஸ்கெட்ச்சை போட்டுக் கொடுப்பார். கொள்ளை முடிந்ததும் கூட்டாளிகள் வாக்கி டாக்கி மூலம்தான் முருகனை தொடர்புகொள்வார்கள். கொள்ளையடித்த தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள் ஆகியவற்றை பணமாக மாற்றுவதிலும் திருவாரூர் முருகன் டீம் புத்திசாலிகள்.

அண்ணாநகரில் முருகனின் கூட்டாளிகள் கைது குறித்த பிரஸ்மீட்
அண்ணாநகரில் முருகனின் கூட்டாளிகள் கைது குறித்த பிரஸ்மீட்

நகை, வெள்ளிப் பொருள்களை புரோக்கர்கள் மூலம்தான் முருகன் டீம் பணமாக மாற்றும். பிறகு, முருகன் சொல்லும் வங்கிக் கணக்குகளுக்கு அந்தப் பணம் அனுப்பி வைக்கப்படும். இதனால் போலீஸாரால் இந்த டீமை நெருங்கக்கூட முடியாது. இந்தச் சமயத்தில்தான் கடந்த 2018-ம் ஆண்டு அண்ணாநகர் காவல் சரகத்தில் தொடர்ந்து கொள்ளைச் சம்பவங்கள் நடந்தன. இதுகுறித்து அப்போதைய அண்ணாநகர் துணை கமிஷனர் சுதாகர் மேற்பார்வையில் உதவி கமிஷனர் சிவக்குமார், இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீஸார் கொள்ளை தொடர்பாக விசாரித்தனர்.

விசாரணையில் திருவாரூர் முருகனின் வலதுகரமான தினகரன் மற்றும் அவர்களின் கூட்டாளிகள் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்தக் கொள்ளைச் சம்பவங்களுக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்தது திருவாரூர் முருகன். ஆனால், அவரைப் போலீஸாரால் பிடிக்க முடியவில்லை. சிறையில் அடைக்கப்பட்ட தினகரன் மற்றும் அவரின் கூட்டாளிகளான திண்டுக்கல்லைச் சேர்ந்த கோபால், புதுச்சேரியைச் சேர்ந்த ரகு, கார்த்தி, காரைக்குடியைச் சேர்ந்த மணிகண்டன் ஆகியோர் ஜாமீனில் வெளியே வந்துவிட்டனர்.

முருகனின் வலதுகரமான தினகரன்
முருகனின் வலதுகரமான தினகரன்

இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸ் உயரதிகாரி ஒருவர், ``திருவாரூர் முருகன் மீது 4 மாநிலங்களில் வழக்குகள் உள்ளன. பெரிய அளவில் கொள்ளையடிக்க ஸ்கெட்ச் போடுவதுதான் முருகனின் வேலை. வங்கிகள், பங்களா டைப் வீடுகள், ஜூவல்லரிகள்தான் முருகனின் டார்கெட். சென்னை அண்ணாநகர் பகுதியில் உள்ள பங்களா வீடுகளை முருகன் டீம் பிளான் போட்டுக் கொள்ளையடித்துள்ளனர். கொள்ளையடிப்பதற்கு முன் இந்த டீம் சில வழிமுறைகளைப் பின்பற்றியுள்ளது. அதாவது, கொள்ளையடிக்கப் போகும் பகுதிக்கு முதலில் காரில் செல்வார்கள்.

பிறகு, அந்தப் பகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் நோட்டீஸ்களை கதவில் வைத்துவிட்டுச் செல்வார்கள். அந்த நோட்டீஸை யாரும் எடுக்கவில்லை என்றால் அந்த வீட்டில் ஆளில்லை என்பதை முருகன் டீம் உறுதிப்படுத்தும். பிறகு அந்த வீடு மற்றும் வீடு அமைந்துள்ள பகுதிகளில் கார்களில் ரோந்துச் செல்வார்கள். அப்போது முருகன் அந்தக்காரில் இருப்பார். பிறகு, வீட்டை நோட்டமிட்ட பிறகு, எப்படி உள்ளே சென்று கொள்ளையடிக்க வேண்டும் என்பதை முருகன், தன்னுடைய கூட்டாளிகளிடம் விளக்கிச் சொல்வார். பிறகு அங்கிருந்து முருகன் எஸ்கேப் ஆகிவிடுவார். முருகன் கூறிய பிளான்படி கொள்ளையடித்துவிட்டு அவரின் கூட்டாளிகள் தப்பிவிடுவார்கள்.

Vikatan

ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொருவிதமாக இந்த டீம் கொள்ளையடிக்கும். குறிப்பாக ஜூவல்லரி, வங்கிகள் என்றால் சுவரில் துளைபோட்டு உள்ளே செல்வார்கள். இதற்காக கேஸ் சிலிண்டர்கள், துளைபோடுவதற்கான கருவிகள் என அனைத்தும் இந்தக் கும்பலிடம் இருக்கும். கொள்ளையடிக்கும்போது உள்ளே செல்ல ஒரு குழுவும் வெளியில் நோட்டமிட இன்னொரு குழுவும் என இரண்டு குழுக்களாகப் பிரிந்து கொள்வார்கள் கொள்ளையடித்த பணத்தை முருகன்தான் எல்லோருக்கும் பிரித்துக் கொடுப்பார். அதில் சில வழிமுறைகளை அவர் வைத்திருக்கிறார். அனுபவம், நம்பிக்கை அடிப்படையில் பணம் பங்கிடப்படும்.

முருகன் மற்றும் அவரின் கூட்டாளிகள் கொள்ளை நடக்கும் இடங்களில் செல்போன்களைப் பயன்படுத்த மாட்டார்கள். ஏனெனில் செல்போன் சிக்னல் மூலம் போலீஸார் கண்டுபிடிக்காமலிருக்க வாக்கி டாக்கிகளையே இந்தக் கும்பல் பயன்படுத்துவார்கள். மேலும், கடப்பாரையால் துளைபோடுவதில் முருகனின் டீம் ஸ்பெஷல். இதற்கென்று ஒவ்வொரு அளவிலும் கடப்பாரைகளை இவர்கள் வைத்திருப்பார்கள்.

முகமூடி அணிந்த கொள்ளையர்கள்
முகமூடி அணிந்த கொள்ளையர்கள்

கொள்ளையடிக்கப்போகும் இடங்களுக்கு இந்த டீம் சுற்றுலா போல குடும்பத்தினருடன் செல்வார்கள். விடுதிகள், ஹோட்டல்கள் என எங்கும் தங்க மாட்டார்கள். சமைக்கத் தேவையான பொருள்களை காரிலேயே எடுத்துச் செல்வார்கள். முருகனுக்கு உதவி செய்யும் குணம் உள்ளது. இதனால் தன்னுடைய சொந்த ஊரில் உள்ள ஏழைகள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்களுக்கு கொள்ளையடித்த பணத்தைக் கொடுத்துவிடுவார். இதனால் அவரின் சொந்த ஊரில் முருகனுக்கு தனிப்பட்ட செல்வாக்கு இன்றும் இருந்துவருகிறது.

முருகனுக்கு மஞ்சுளா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். ஆரம்பகாலகட்டத்தில் வீடுகளில் கொள்ளையடித்த முருகன், தற்போது பெரிய அளவிலான கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுவருகிறார். தமிழகத்தில் கொள்ளையடித்தால் கேரளாவில் தலைமறைவாகிவிடுவார். கேரளாவில் கைவரிசை காட்டினால் கர்நாடகாவில் பதுங்கிவிடுவார். கர்நாடகாவில் சம்பவம் செய்தால் ஆந்திராவில் தங்குவார். ஆந்திராவில் கொள்ளையடித்துவிட்டு கேரளாவுக்கு சென்றுவிடுவார். இவ்வாறு மாநிலம் விட்டு மாநிலமாக முருகன், இருப்பிடத்தை மாற்றிவருவதால் அவரைப் போலீஸாரால் பிடிக்க முடியவில்லை. கடந்த 4 ஆண்டுகளாக 4 மாநில போலீஸார், முருகனைத் தேடிவருகின்றனர். திருச்சி ஜூவல்லரி கொள்ளைச் சம்பவத்திலும் இந்த டீம், நோட்டமிட்ட பிறகுதான் கைவரிசை காட்டியிருக்க வேண்டும். கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சிக்கிய பிறகுதான் என்ன நடந்தது என்று தெரியவரும். இந்தக் கொள்ளை டீமுக்கு ஆஜராகத் தனியாக ஒரு வழக்கறிஞர்கள் டீம் உள்ளது" என்றார்.

`3 மாநிலங்களில் கைவரிசை; வங்கிகள்தான் முதல் இலக்கு!' - திருச்சி கொள்ளையில் சிக்கிய கும்பலின் பின்னணி

கொள்ளையடித்தப் பணத்தில் ஆடம்பரமாகவும் வசதியாகவும் வாழ்ந்துவரும் முருகன் மற்றும் அவரின் கூட்டாளிகள் சில நலத்திட்ட உதவிகளையும் செய்துவருகின்றனர். ஒருகாலகட்டத்தில் முருகன், தன்னுடைய சொந்த ஊரில் ஆதரவற்றோர் இல்லத்தை ஆரம்பிக்க ஏற்பாடு செய்துள்ளார். ஆனால், அதைத் தொடங்க தடை வந்ததால் அந்தத் திட்டத்தை முருகன் கைவிட்டுவிட்டார்.

காமெடி நடிகர் கஞ்சா கறுப்பு, தாமிரபரணி படத்தில் மரத்துக்கு மரம் தாவும் காட்சிகள் இடம்பிடித்திருக்கும். அதில், `சிறுத்தை சிக்கும், சில்வண்டு சிக்காது' என்று `கஞ்சா' கருப்பு கூறுவார். அதைப்போலத்தான் திருவாரூர் முருகன் 4 ஆண்டுகளுக்கு மேல் 4 மாநில போலீஸாரிடம் சிக்காமல் இருந்துவருகிறார்.