Published:Updated:

`கரன்சிகளை அள்ளிக்கொடுத்து கர்ணனாக வாழ்ந்தார்'- வில்லிவாக்கம் முத்துவேல் அளித்த அதிர்ச்சித் தகவல்

MUTHUVEL
MUTHUVEL

சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைதுசெய்த தி.மு.க பிரமுகர் முத்துவேல், கரன்சிகளை அள்ளிக்கொடுத்து கர்ணனாகவே வாழ்ந்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம், பிரபலமான கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த நிக்கில் கண்ணா புகார் கொடுத்தார். அதில், ராஜமங்கலத்தைச் சேர்ந்த தி.மு.க பிரமுகர் முத்துவேல், 100 கோடி ரூபாய் கடன் வாங்கித் தர கமிஷனாக 2.62 கோடி ரூபாய் வாங்கி ஏமாற்றிவிட்டதாகப் புகார் கொடுத்திருந்தார். அதன்பேரில், கூடுதல் கமிஷனர் ஈஸ்வரமூர்த்தி உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் விசாரணை நடத்தி, முத்துவேலை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

MUTHUVEL
MUTHUVEL

விசாரணையின்போது முத்துவேல் அளித்த வாக்குமூலம் குறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``நான், சென்னை ராஜமங்கலத்தில் குடும்பத்தோடு குடியிருந்துவருகிறேன். என்னுடைய பூர்வீகம் ஆந்திரா. சென்னையிலேயே செட்டிலாகிவிட்டேன். ஆரம்பத்தில் டிரைவராக வேலைபார்த்தேன். அதன்பிறகு, படிப்படியாக உழைத்து முன்னேறினேன். என்னுடைய சகோதரி தி.மு.க-வில் உள்ளார். இதனால் தி.மு.க பிரமுகர்களைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

ரியல் எஸ்டேட், புரொமோட்டர்ஸ் பிசினஸ் செய்தேன். வருமானம் வந்ததால், போயஸ் கார்டனில் மாதம் ஒரு லட்சம் ரூபாய் வாடகையில் அலுவலகத்தை நடத்தினேன். போயஸ் கார்டன் அலுவலகத்துக்கு என்னை சந்திக்க வருபவர்கள், நான் சொல்வதையெல்லாம் நம்பினார்கள். இதனால் பணத் தேவை இருக்கும் பெரிய பெரிய தொழிலதிபர்கள், வி.வி.ஐ.பி-க்கள் என்னை சந்தித்தனர். அவர்களுக்குத் தேவையான பணத்தை ஏற்பாடுசெய்து கொடுத்துவந்தேன்.

MUTHUVEL
MUTHUVEL

சில மாதங்களுக்கு முன், நிக்கில் கண்ணா என்னை சந்தித்தார். அப்போது அவர், தொழிலை விரிவுப்படுத்த 100 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. ஏற்பாடு செய்து தர முடியுமா என்று கேட்டார். உடனே, நான் 100 கோடி ரூபாய் கடன் வேண்டும் என்றால், எனக்கு 2.62 கோடி ரூபாய் கமிஷனாக வேண்டும். அந்தப் பணத்தை உடனடியாக வங்கிக் கணக்குக்கு அனுப்பும்படி கூறினேன். அதன்படி நிக்கில் கண்ணாவும் பணத்தை அனுப்பிவைத்தார். ஆனால், அவருக்கு 100 கோடி ரூபாய் கடனை ஏற்பாடுசெய்ய முடியவில்லை.

பணத்தைக் கேட்டு நிக்கில் கண்ணா நெருக்கடி கொடுத்தார். சில காரணங்களுக்காக நிக்கில் கண்ணா கேட்ட பணத்தை என்னால் ஏற்பாடுசெய்து கொடுக்க முடியவில்லை. கமிஷனாக அவர் கொடுத்த பணத்தையும் என்னால் குறிப்பிட்ட காலத்துக்குள் திரும்ப கொடுக்க முடியவில்லை. என் நிலைமையை நிக்கில் கண்ணாவிடம் கூறினேன். ஆனால், அவர் என்னைப் புரிந்து கொள்ளவில்லை. தொடர்ந்து தொல்லை கொடுத்ததோடு, காவல் நிலையத்திலும் புகார் கொடுத்தார். பிறந்தநாள் விழாவுக்காக சென்னை வந்தபோது, என்னை போலீஸார் பிடித்துவிட்டனர் என்று கூறியுள்ளார்" என்றார்.

MUTHUVEL
MUTHUVEL

இந்த வழக்கை விசாரித்த போலீஸார் கூறுகையில், ``ராஜமங்கலம், கொளத்தூர், வில்லிவாக்கம் என அந்தச் சரக காவல் நிலையங்களில் தொழிலதிபர் முத்துவேலைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். காவல் நிலையங்கள் மட்டுமல்லாமல், அந்தப் பகுதியிலும் முத்துவேல் பிரபலமானவர். தி.மு.க நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல், பொது நிகழ்ச்சிகளுக்கு பணத்தைத் தாராளமாகச் செலவழித்து வந்துள்ளார். வில்லிவாக்கம் ரயில்வே பாலத்தில் மட்டும் முத்துவேல் பிறந்தநாளுக்கு அவரின் ஆதரவாளர்கள் பல டிசைன்களில் நோட்டீஸ் ஒட்டி அமர்க்களப்படுத்தியுள்ளனர்.

கடன் தேவைப்படுவோரை தன்னிடம் அழைத்து வர இரண்டு பேரை முத்துவேல் நியமித்துள்ளார். அவர்கள் இருவரும் புரோக்கர்கள் போல செயல்பட்டுள்ளனர். கடன்தொகைக்கு ஏற்ப அவர்களுக்கு முத்துவேல் பணம் கொடுத்துள்ளார். நிக்கில் கண்ணாவை முத்துவேலிடம் அழைத்துவந்த இருவருக்கும் லட்சக்கணக்கில் பணத்தை வாரி வழங்கியுள்ளார். இதனால் அவர்கள் இருவரையும் தேடிவருகிறோம். முத்துவேல் மீது புகார் வந்ததும், அவர் எங்கு இருக்கிறார் என்பதைக் கண்டறிவதில் காலதாமதம் ஏற்பட்டது. முத்துவேலின் செல்போன் சிக்னல் மூலம் அவரின் இருப்பிடத்துக்குச் செல்வதற்கு முன், அவர் அங்கிருந்து வேறு இடத்துக்குச் சென்றுவிடுவார். பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக வந்த முத்துவேலை கைது செய்துள்ளோம்" என்றனர்.

போயஸ் கார்டன் முகவரி; நடமாடும் நகைக்கடை; வி.வி.ஐ.பி நெருக்கம்! - `வில்லங்க' வில்லிவாக்கம் கர்ணன்

முத்துவேலிடம் கிலோ கணக்கில் கழுத்தில் தங்கச் செயின்களை எதற்காக அணிந்துள்ளீர்கள் என்று போலீஸார் கேட்டதற்கு, ``தங்க நகைகளை அணிவது எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதற்காகத்தான் மாடல், மாடலாக செயின்களை வாங்கி அணிந்துள்ளேன். அது என் ஃபேஷன். மற்றவர்களிடமிருந்து தன்னை வேறுப்படுத்திக் காட்டவே இப்படி அணிந்துள்ளேன்" என்று பதிலளித்துள்ளார்.

``தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ள முத்துவேல், கர்ணனைப் போல கரன்சிகளை அள்ளிக் கொடுத்துள்ளார். அவரைச் சந்திக்க வருபவர்களிடம், எதிர்பார்க்காத நன்கொடைகளைக் கொடுத்துள்ளார். முத்துவேல் ஒரு விழாவில் கலந்துகொள்கிறார் என்றால், முதலில் பேனர், நோட்டீஸ் அடித்து அந்த விழாவை அவரின் ஆதரவாளர்கள் அமர்க்களப்படுத்திவிடுவார்கள். பிறகு, சொகுசு கார்கள் அணிவகுக்க முத்துவேல் பந்தாவாக அங்கு சென்று இறங்குவார். அப்போது, குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது பட்டாசுகளை அவரின் ஆதரவாளர்கள் வெடிப்பார்கள். அதோடு, 'வில்லிவாக்கம் கர்ணன்' என்ற வாழ்த்து கோஷங்கள் கேட்கும். பெண்களுக்கு இலவசமாக சேலை, விழாவுக்கு வருபவர்களுக்கு உணவு என முத்துவேல், வில்லிவாக்கம் கர்ணனாகவே கடந்த சில மாதங்களாக அந்தப் பகுதியில் வலம் வந்துள்ளார்" என்கின்றனர் விவரம் தெரிந்தவர்கள்.

``தங்க நகைகளை அணிவது எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதற்காகத்தான் மாடல் மாடலாக செயின்களை வாங்கி அணிந்துள்ளேன். அது என் ஃபேஷன். மற்றவர்களிடமிருந்து தன்னை வேறுப்படுத்திக் காட்டவே இப்படி அணிந்துள்ளேன்."
முத்துவேல்

பெயரைக் குறிப்பிட வேண்டாம் என்ற நிபந்தனையுடன் பேசிய முத்துவேலின் நண்பர் ஒருவர், ``கோடிக்கணக்கில் பிசினஸ் செய்யும் முத்துவேலுக்கு, நிக்கில் கண்ணாவுக்கு கொடுக்க வேண்டிய 2.62 கோடி ரூபாய் பெரிய விஷயமல்ல. நொடிப் பொழுதில் அந்தப் பணத்தை அவர் கொடுத்துவிடுவார். முத்துவேலின் வளர்ச்சியைப் பிடிக்காத சிலர், அவரை மாட்டிவிட்டுவிட்டனர். உதவி, நன்கொடை எனக் கேட்டு வருபவர்களுக்கு தன்னால் முடிந்ததை முத்துவேல் செய்துவந்தார். சிறுவயது முதல் கஷ்டப்பட்ட முத்துவேல், கடின உழைப்பால் இந்த நிலைமைக்கு உயர்ந்தார். இந்த வழக்கை சட்டப்படி எதிர்கொண்டு, முத்துவேல் குற்றமற்றவர் என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்போம்" என்றார்.

முத்துவேல் தரப்பில் பேச அவரின் வழக்கறிஞர்கள், ஆதரவாளர்கள், குடும்பத்தினரைத் தொடர்புகொள்ள முயற்சி செய்தோம். ஆனால், யாரையும் தொடர்புகொள்ள முடியவில்லை. அவர்கள் தரப்பு விளக்கத்தையும் பரிசீலனைக்குப் பிறகு வெளியிடத் தயாராக உள்ளோம்.

அடுத்த கட்டுரைக்கு