Election bannerElection banner
Published:Updated:

நிழலுலக ராஜாக்கள்: ஒதுங்கிய வரதாபாயும், எழுந்த தாவூத் இப்ராஹிமும்! நாயகனின் கதை — பகுதி 6

நிழலுலக ராஜாக்கள்
நிழலுலக ராஜாக்கள்

வரதாபாய் இறந்த பிறகுதான் தாவூத் இப்ராஹிம் போன்ற தாதாக்கள் தலையெடுக்க ஆரம்பித்தனர். தாவூத் அப்போதே டோங்கிரி பகுதியில் சிறு சிறு குற்றங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான்.

தங்கக்கடத்தலில் தனிக்காட்டு ராஜாவாக இருந்த ஹாஜி மஸ்தானுக்கு பணம் பருவமழையாக கொட்டிக் கொண்டிருந்தது. தனது தொழிலை அடுத்து குஜராத்துக்கு மாற்ற திட்டமிட்டார். ஆனால் அதற்கு முன்பாக செய்யவென ஒரு ஆசை அவருக்கு இருந்தது. மும்பையின் பாட்ஷாவாக மாறவேண்டும் என்ற ஆசை!

மும்பைக்கு பாட்ஷாவாக மாறுவது தனியொரு ஆளால் முடியக்கூடிய காரியம் அல்ல. இன்னொருவரின் துணையும் தேவை என்று கருதினார் ஹாஜி மஸ்தான். அவரது மனதில் ஒரே ஒருவர்தான் தோன்றினார். வரதாபாய்! ஹாஜி மஸ்தான் தென்மும்பையில் முடிசூடா மன்னனராக இருந்தது போல் மத்திய மும்பையில் வரதாபாய் இருந்தார். வரதாபாயுடன் நட்பை ஏற்படுத்திக்கொள்ள தக்க தருணம் பார்த்துக்கொண்டிருந்தார் ஹாஜி மஸ்தான்.

ஹாஜி மஸ்தான் - வரதாபாய்

வரதாபாய் ஒரு முறை துறைமுகத்தில் சுங்கவரித்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த, மத்திய அமைச்சருக்கு சொந்தமான ஆண்டனா ஒன்றை திருடிவிட்டதாக போலீசார் கைது செய்திருந்தனர்.கடத்தல் பொருள் எங்கிருக்கிறது என சொல்லவில்லையெனில் போலீஸ் பாணியில் அடித்து விசாரிக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று போலீசார் எச்சரித்தனர்.

ஹாஜி மஸ்தான், வரதா பாய்
ஹாஜி மஸ்தான், வரதா பாய்
ட்விட்டர்

ஆசாத் மைதான் போலீஸ் நிலையத்தில் தனியாளாக வரதாபாய் அடைக்கப்பட்டிருந்தார். இரவில் ஏதாவது நடக்கக்கூடும். அவர் அடைக்கப்பட்டிருந்த லாக்கப்பிற்கு வெள்ளை சட்டை அணிந்திருந்த ஒருவர் வந்தார். பணியில் இருந்த யாரும் வந்தவரை தடுக்கவில்லை. வந்தவர் 555 சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தார்.

வரதாபாயிடம், ``என்ன தலைவரே சவுக்கியமா ?” என புகைபிடித்துகொண்டே தமிழில் பேசினார்.

வரதாபாய்க்கு ஆச்சர்யம். வந்தவர் வேறு யாருமல்ல, ஹாஜி மஸ்தான்!

``ஆண்டனாவை திரும்ப கொடுத்தால் அதிக அளவில் பணம் சம்பாதிக்க நான் வழிகாட்டுகிறேன்” என்றார் மஸ்தான். சுங்க அதிகாரிகள் மற்றும் போலீசாரின் தூதராக மஸ்தான் வந்திருக்கிறார் என நினைத்து வரதாபாய் அதிர்ச்சி அடைந்தார்.

உடனே வரதாபாய், ``என்னிடம் ஆண்டனா இல்லை என்றும் உங்களுடன் சேர்ந்து தொழில் செய்ய விரும்பவில்லை என்றும் சொன்னால் என்ன செய்வீர்கள்”, என்று கேட்டார்.

உடனே மஸ்தான் மிகவும் அமைதியாக, ``எனக்கு இழப்புதான். உங்களது முடிவு தவறானது என்று நினைத்துக்கொள்வேன்,” என்றார். ``நான் தங்கம், வெள்ளியை கடத்துபவன். இது போன்று மதிப்பு குறைவான பொருட்கள் பக்கம் செல்வதே இல்லை. உங்களிடம் இருக்கும் பொருளை சோர் பஜாரில் தான் விற்பனை செய்ய முடியும். என்னுடன் வந்தால் தங்கம், வெள்ளி வியாபாரத்தில் உங்களையும் பங்குதாரராக சேர்த்துக்கொள்கிறேன்”.

வரதாபாயால் நம்ப முடியவில்லை.

``இதனால் உங்களுக்கு என்ன லாபம்?”

``உங்களைப் போன்றவர்களை நண்பர்களாக்கிக் கொள்ள விரும்புகிறேன். உங்களது ஆள் பலத்தை பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறேன்”.

ஹாஜி மஸ்தான்
ஹாஜி மஸ்தான்
ட்விட்டர்

மஸ்தானிடம் அளவுக்கு அதிகமாக பணம் இருக்கிறது. அவரது வாய்ப்பை நிராகரிக்க முடியவில்லை. சிறையில் இருந்தாலும் போலீசாரின் சித்ரவதையை சந்திக்கவேண்டியிருக்கும். வேறு வழியிருக்கவில்லை. மஸ்தானின் வாய்ப்பை வரதாபாய் ஏற்றுக்கொண்டார். திருட்டு ஆண்டனா எங்கிருக்கிறது என்ற விபரத்தையும் தெரிவித்தார். இருவரும் சிறையில் ஒருவருக்கொருவர் கைகுலுக்கிக்கொண்டனர்.

மஸ்தான் கோட்சூட் அணிந்திருந்தார். விலை உயர்ந்த சிகரெட் புகைத்துக்கொண்டிருந்தார். மற்றொருவர் வேஷ்டி கட்டிக்கொண்டு நெற்றியில் பட்டை இட்டிருந்தார். இருவரும் கைகுலுக்குவதை பார்த்த போலீசாருக்கு ஆச்சரியம். வரதாபாய் ஆண்டனா இருக்கும் இடத்தை தெரிவித்ததால் சுங்க அதிகாரிகள் வரதாபாயை விடுதலை செய்தனர்.

சிறையிலிருந்து வெளியில் வந்ததும் வரதாபாய் ஆட்கள் அவரிடம் எதையும் துணிந்து பேச பயந்தனர். வரதாபாய் மனநிலை எப்படி இருக்கிறது என தெரியவில்லை. ஆனால் தான் விடுதலையானதை கொண்டாட விழாவுக்கு ஏற்பாடு செய்தார் வரதாபாய்.

நட்புன்னா என்னன்னு தெரியுமா?

மஸ்தான் எப்படி வரதாபாயுடன் நட்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைத்தாரோ அதே போல் வரதாபாயும் ஹாஜி மஸ்தானுடன் நட்பு வைத்துக்கொள்ள வேண்டும் என்று நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டிருந்தார். அவரது நட்பு தானாக வந்து சேர்ந்திருப்பதோடு அவர் தன்னை தொழில் கூட்டாளியாகவும் சேர்த்துக்கொண்டதில் வரதாபாய் மகிழ்ச்சி கொண்டார்.

கடத்தல் தொழிலில் ஏற்கனவே கடுமையான போட்டி இருந்தது. ஆனால் மஸ்தானுடன் சேர்ந்த பிறகு துறைமுகத்தில் வரதாபாய்க்கு பிரச்னை இருக்கவில்லை. துறைமுகத்தில் இருந்து பொருட்களை கடத்தி வந்து வெளிநாட்டுப் பொருட்கள் என விற்பனை செய்யும் தொழிலில் வரதாபாய் கால் பதித்தார். துறைமுகத்தில் கூலித்தொழிலாளர்களாக வேலை பார்த்த தமிழர்கள் பொருட்களை வெளியில் கொண்டு வர அவர் பயன்படுத்தினார்.

வெளிநாட்டில் இருந்து வரும் பொருட்கள் கப்பலில் இருந்து இறக்கி வைக்கப்பட்டதும் காணாமல் போகும். பொருட்களை காணவில்லை என்றோ அல்லது தவறாக டெலிவரி செய்யப்பட்டுவிட்டதென்றோ அல்லது பொருட்கள் கப்பலில் வந்து சேரவில்லை என்றோ ஒரு காரணத்தை அதிகாரிகள் எழுதி பிரச்னையை முடித்துவிடுவர். பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டியவர் இன்சூரன்ஸ் மூலம் தனது பொருட்களுக்கான பணத்தை வசூலித்துக் கொள்வர். பின்னர் அவரை அழைத்து வரதாபாய் பேச்சுவார்த்தை நடத்துவார். இன்சூரன்ஸ் பணத்தை சமமாக பகிர்ந்து கொள்வதோடு இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களையும் அதை இறக்குமதி செய்ய வேண்டியவருக்கு பாதி விலையில் வரதாபாய் விற்றுவிடுவார்.

ஹாஜி மஸ்தான்
ஹாஜி மஸ்தான்

வரதாபாயின் இம்முறையில் பணத்தை இழப்பது இன்சூரன்ஸ் கம்பெனிகள்தான். ஆனால் இத்தகைய திருட்டுச் செயல்கள் தொடர்ந்ததையடுத்து துறைமுகத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. வரதாபாய் புதிய உத்திகளுக்கு மாறினார்.

துறைமுக அதிகாரிகள் மற்றும் சுங்க அதிகாரிகளுக்கு பணம் கொடுத்து பொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்கும்படி வரதாபாய் தெரிவித்து விடுவார். அவர்களும் இறக்குமதியாகும் பொருட்களை தங்களது பாதுகாப்பில் வைத்திருந்துவிட்டு இன்சூரன்ஸ் கம்பெனி இறக்குமதியாளருக்கு பணத்தை கொடுத்த பிறகு, உரிமை கோரப்படாத பொருட்கள் என்று கூறி சுங்கத்துறை அவற்றை வரதாபாயிடம் கொடுத்துவிடும்.

பல கோடி ரூபாய் இத்தகைய கடத்தலில் புழங்கினாலும் எந்தவித ரத்தக்களரியும் ஏற்படவில்லை. ஹாஜி மஸ்தான் தங்கம் கடத்துவதை குறைத்துக்கொள்ள ஆரம்பித்த பிறகு அந்த இடைவெளியை வரதாபாய் நிரப்பினார். ஆனால் அவர் தங்கத்தை தவிர்த்து இதர பொருட்களை கப்பல் மூலம் கடத்திக்கொண்டு வந்தார். யார் தலையும் உருளவில்லை. வரதாபாய் மும்பையில் ஆள் பலம் பொருந்திய தாதாவாக வலம் வந்தார்.

வரதாபாய் வீழ்ச்சியும், தாதாபாய் எழுச்சியும்

எப்போதும் வரதாபாயை சுற்றி ஆட்கள் இருந்து கொண்டே இருப்பர். அவரது வீட்டிற்கு மக்கள் பிரச்னைகளோடு வந்து கொண்டே இருப்பர். தாராவி, செம்பூர், மாட்டுங்கா, அண்டாப்ஹில், கோலிவாடா போன்ற பகுதியில் வரதாபாய் மிகவும் பிரபலமாக இருந்ததால் அவர் மீது அரசியல்வாதிகளும் கைவைக்கத் தயங்கினர். வரதாபாய் மீது போலீசில் யாரும் புகார் செய்யவில்லை. வரதாபாயுடன் சேர்ந்து இருந்தவர்கள் அனைவரும் தங்களுக்கு தேவையானதை சேர்த்து வைத்துக்கொண்டனர்.

தாவூத் இப்ராஹிம்
தாவூத் இப்ராஹிம்

இப்போது கூட வரதாபாயுடன் இருந்த ஒருவர் மும்பையில் பிரபல அரசியல்வாதியாக இருக்கிறார். அவர் வரதாபாய் இருக்கும்போது சாராயக் கடத்தலில் திறமைசாலியாக இருந்தார்.

1980-களில் கரீம் லாலா, ஹாஜி மஸ்தான் ஆகியோர் தங்களது செயல்களை குறைத்துக்கொண்ட நிலையில் வரதாபாய் மட்டுமே மும்பையின் முடிசூடா மாபியா மன்னனாக இருந்தார். ஆனால் அவரை ஒழிக்க துணை கமிஷனராக ஒய்.சி.பவார் வந்தார்.

1982-ம் ஆண்டு பவார் துணை கமிஷனராக வந்தபோது வரதாபாய் ஆட்களை கைது செய்தார். இதனால் தனது தொழிலை கைவிட்டுவிட்டு 1985-ம் ஆண்டு வரதாபாய் சென்னை சென்று கடைசிக் காலத்தை கழித்தார். 1988-ம் ஆண்டு ஜனவரி மாதம் மாரடைப்பு ஏற்பட்டு சென்னையில் காலமானார் வரதாபாய். அவரின் கடைசி கால ஆசையை நிறைவேற்றும் பொருட்டு ஹாஜி மஸ்தான் வரதாபாய் உடலை மும்பைக்கு தனி விமானத்தில் கொண்டு வந்தார். மும்பையில் அவரது உடலுக்கு ஆயிரக்கணக்கான தமிழர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

வரதாபாய் இறந்த பிறகுதான் தாவூத் இப்ராஹிம் போன்ற தாதாக்கள் தலையெடுக்க ஆரம்பித்தனர். தாவூத் அப்போதே டோங்கிரி பகுதியில் சிறு சிறு குற்றங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான். சிறுவனாக இருந்ததால் அப்போது பெரிய அளவில் அவனை யாரும் கண்டுகொள்ளவில்லை.

பகுதி 5ஐ படிக்க....

நிழலுலக ராஜாக்கள்: `நாயகன்’ வரதாபாய்க்காக உயிரையும் விடத் துணிந்த மும்பைத் தமிழர்கள் | பகுதி 5
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு