Published:Updated:

சென்னை மணமகளை புதுமாப்பிள்ளை கார்த்திக் ஏமாற்றியது எப்படி? - பெண் வீட்டினரின் கண்ணீர்க் கதை

சென்னையில் நடந்த திருமண வரவேற்பின் போது அரசு டாக்டராக நடித்த புதுமாப்பிள்ளையின் சுயரூபம் வெளியில் தெரிந்தது. தாலி கட்டிய கையோடு புதுமாப்பிள்ளை மற்றும் அவருக்கு உறவினர்களாக நடித்த 4 பேர் சிறைக்கம்பிகளை எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

karthick
karthick

சென்னை கொளத்தூர் ஜி.கே.எம். காலனி புனித அந்தோணியார் கோயில் தெருவில் குடியிருப்பவர் பவானி. இவர், சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் தலைமைச் செவிலியராகப் பணியாற்றிவருகிறார். இவரின் கணவர் 26 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். பவானிக்கு இரண்டு பெண் குழந்தைகள். மூத்த மகளை திருமணம் செய்து கொடுத்துவிட்டார். இரண்டாவது மகள் பி.காம் படித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவந்தார். அவருக்கு வரன் தேடிவந்தார் பவானி. அப்போது, பவானியின் அண்ணன் கஜேந்திரனின் 40 ஆண்டுக்கால நண்பர் வீரமணி என்கிற சொக்கலிங்கம் என்பவர் மூலம் கார்த்திக் துரை ராமசந்திரனின் ஜாதகம் பவானிக்குக் கிடைத்துள்ளது.

cctv footage
cctv footage

கார்த்திக், டாக்டராகப் பணியாற்றுவதாக பெண் வீட்டினரிடம் வீரமணி கூறியுள்ளார். கார்த்திக் குறித்து பவானி கேட்டபோது அவர் லண்டனில் டாக்டர் படிப்பை முடித்துவிட்டு பிரபலமான பல்கலைக்கழகத்தில் மேல்படிப்பு படித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் முதல்சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவில் அறுவை சிகிச்சை நிபுணராகப் பணியாற்றி வருகிறார். மாதச் சம்பளம் 2,20,000 ரூபாய் என்று மாப்பிள்ளை வீட்டினர் கூறியுள்ளனர். இதையடுத்து கார்த்திக் வேலை பார்க்கும் அரசு மருத்துவமனைக்குச் சென்று பவானி விசாரித்துள்ளார். அப்போது கார்த்திக் பெயரில் அங்கு ஒருவர் அறுவை சிகிச்சை நிபுணராக இருப்பது பவானிக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதனால் மாப்பிள்ளை வீட்டினர் கூறிய தகவல்களை பவானி முழுமையாக நம்பியுள்ளார்.

கார்த்திக்கின் ஜாதகப் பொருத்தம் பார்த்த பவானி, மீண்டும் வீரமணியிடம் விசாரித்துள்ளார். அப்போது கார்த்திக் தங்கமான பையன், இதுபோன்ற நல்ல பையன் கிடைப்பது கஷ்டம் என்று வீரமணி கூறியுள்ளார். இதையடுத்து கோயம்புத்தூருக்குச் சென்று கார்த்திக் குறித்து விசாரித்துள்ளனர். அப்போது கோயம்புத்தூர் விமான நிலையம் அருகே உள்ள ஒரு வீட்டை பவானி குடும்பத்தினரிடம் மாப்பிள்ளை வீட்டினர் காண்பித்துள்ளனர்.

karthick
karthick
`ரூ.11 லட்சம், 75 சவரன்  வரதட்சணை; போதையில் உளறிய மாமா!' - திருமண வரவேற்பில் சிக்கிய போலி டாக்டர்

மாப்பிள்ளை கார்த்திக்கிற்கு அப்பா, அம்மா இல்லை என்று கூறியுள்ளனர். இதனால், கார்த்திக்கிற்கும் பவானியின் இரண்டாவது மகளுக்கும் மே 23-ம் தேதி திருமண நிச்சயதார்த்தமும் செப்டம்பர் 11-ம் தேதி திருமணமும் செப்டம்பர் 12ம் தேதி திருமண வரவேற்பும் நடத்த முடிவு செய்யப்பட்டது. திருமணத்தின்போது மணமகளுக்கு 35 சவரன் நகையும் மாப்பிள்ளை கார்த்திக்கிக்கு 5 சவரன் செயினும் போட வேண்டும் என இருவீட்டினரும் பேசி சம்மதித்தனர். அதன்படி நிச்சயதார்த்தமும் திருமணமும் சிறப்பாக நடந்துமுடிந்துள்ளது.

நிச்சயதார்த்தம் முடிந்தபிறகு கார்த்திக்கும் மணமகளும் போனில் நீண்ட நேரம் பேசிவந்துள்ளனர். அப்போது கார்த்திக், தன்னுடைய ஏ.டி.எம். கார்டு பிளாக் ஆகிவிட்டதாகக் கூறியுள்ளார். மேலும் வருமானவரித்துறை பிரச்னையும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அதை பவானியும் அவரின் மகளுமான மணமகளும் நம்பியுள்ளனர். இதையடுத்து பவானி, அவரின் மகள் ஆகியோரை நம்ப வைத்த கார்த்திக் இருவரிடமிருந்து 12 லட்சம் ரூபாய் வரை வாங்கியுள்ளார்.

car
car

வரவேற்பு நிகழ்ச்சியின்போது 3 லட்சம் ரூபாயை கார்த்திக் பவானியிடம் கேட்டுள்ளார். அப்போது பவானி, ஏற்கெனவே 12 லட்சட் ரூபாய் கொடுத்துவிட்டேன். தற்போது தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். அதற்கு கார்த்திக், பணம் தரவில்லை என்றால் உங்களின் மகளை இன்றிரவே ஏதாவது செய்து கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் பெண் வீட்டினருக்கும் மாப்பிள்ளை வீட்டினருக்கும் திருமண மண்டபத்தில் வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கார்த்திக் நாற்காலியை எடுத்து வீசியுள்ளார். மகளுக்கு நேர்ந்த சம்பவத்தால் பவானி மயங்கியுள்ளார்.

இந்தச் சமயத்தில் மணமகளை விட்டுவிட்டு கார்த்திக் மற்றும் அவரின் உறவினர்கள் மண்டபத்திலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்குள் பணம் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் கார்த்திக் திருமணத்துக்கு வந்தவர்கள் உண்மையான உறவினர்கள் இல்லை என்று பெண் வீட்டினருக்குத் தெரியவந்துள்ளது. இதையடுத்துதான் மகளின் வாழ்க்கையை வீணாக்கியதோடு அரசு டாக்டர் என்று கூறி ஏமாற்றிய கார்த்திக், அவருக்கு உதவிய வீரமணி, ஜெயக்குமார், வசந்தி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க மாதவரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் பவானி.

karthick
karthick

மாதவரம் போலீஸார், திருமண மண்டபத்திலிருந்து கார்த்திக் மற்றும் அவரின் உறவினர்களாக நடித்தவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அப்போது கார்த்திக் முகத்தை கையால் மறைத்தபடி, ப்ளீஸ் என்னை விட்டுவிடுங்கள் என்று போலீஸாரிடம் கெஞ்சியுள்ளார். அப்போது உன் சுயரூபம் வெளியில் தெரிந்தால்தான் வேறு யாரும் ஏமாற மாட்டார்கள் என்று போலீஸார் கூறியுள்ளனர். திருமண மண்டபத்தில் உள்ள சிசிடிவி கேமராவை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது பெண் வீட்டினரும் மாப்பிள்ளை வீட்டினரும் மோதிக் கொள்ளும் சம்பவம் பதிவாகியுள்ளது. அதன்அடிப்படையில் கார்த்திக்கின் பின்னணி குறித்து விசாரணை நடந்துவருகிறது.