நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காட்டில் வசித்து வருபவர் செல்லத்துரை (வயது 45). இவர் அப்பகுதியில் காஸ் சிலிண்டர் திருடுவதை வழக்கமாக கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் வேதாரண்யம் காவல் நிலையத்தில் தொடர்ந்து புகார் அளித்து வந்திருக்கின்றனர்.
இந்த நிலையில், கோடியக்காட்டிலுள்ள செல்லத்துரையை கைது செய்ய வேதாரண்யம் போலீஸார் இரண்டு முறை முயற்சி செய்திருக்கின்றனர். ஆனால் அவர் தப்பித்துச் சென்றுவிட்டதாகத் தெரிகிறது .

மீண்டும் நேற்று (30.12.2022) அதிகாலை செல்லத்துரையை கைது செய்ய வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன், காவலர்கள் ராஜ் ஐயப்பன், சக்திவேல் ஆகிய 3 பேரும் சென்றனர். அப்பொழுது செல்லத்துரை, அவரின் மனைவி ராணி, மகன் வீரக்குமார், மகள் கவிப்பிரியா, செல்லத்துரையின் தாய் பார்வதி ஆகியோர் போலீஸாரை கட்டை, கல் கொண்டு தாக்கியிருக்கின்றனர். மேலும் செல்லத்துரை சிறு கத்தியை கொண்டு போலீஸாரை குத்தியிருக்கிறார். மேலும் செல்லத்துரையும், மகன் வீரக்குமாரும் போலீஸாரை கொடூரமாக தாக்கியிருக்கின்றனர்.
இதில் போலீஸார் இருவருக்கு காயம் ஏற்பட்டது. இன்ஸ்பெக்டர் குணசேகரனுக்கு கைமுட்டு இறங்கிய நிலையில் மண்டை உடைந்தது. தாக்குதலுக்கு ஆளான மூன்று பேரும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பின்பு மேல் சிகிச்சைக்காக இன்ஸ்பெக்டர் குணசேகரன் திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கபட்டார். இதைத் தொடர்ந்து, போலீஸாரைத் தாக்கியவர்களைக் கைது செய்ய வேதாரண்யம் டி.எஸ்.பி. தலைமையில் போலீஸார் சென்றனர்.
அப்போது வீட்டில் பதுங்கியிருந்த செல்லத்துரையை பிடிக்க முயன்றபோது சப்-இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் ஏட்டுபாலமுருகன் ஆகியோர் கைகளை செல்லத்துரை கடித்து குதறிவிட்டு அருகிலுள்ள குளத்தில் குதித்து தப்பிக்க முயன்றிருக்கிறார்.

போலீஸாரும் விடாமல் குளத்தில் குதித்து செல்லத்துரையை மடக்கிப் பிடித்தனர். போலீஸாரைத் தாக்கிய செல்லத்துரை, வீரக்குமார், கவிப்பிரியா, பார்வதி ஆகியோரை வேதாரண்யம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர் மேலும் தப்பிச் சென்ற செல்லத்துரையின் மனைவி ராணியை தேடி வருகின்றனர். இதுபற்றி நாகை மாவட்ட எஸ்.பி ஜவகர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்.