Published:Updated:

10 மாதமாகத் தேடல்;முருகன் கும்பல் சிக்கியது!- மொட்டைபோட்டு நேர்த்திக்கடன் செலுத்திய திருச்சி போலீஸ்

கொள்ளையன் முருகன் போலீஸார் வசம் சிக்கியதில் பலருக்குக் கொண்டாட்டம். அந்தவகையில் திருச்சி தனிப்படை போலீஸார் கோயிலுக்கு நேர்த்திக்கடன் தீர்த்து மொட்டையடித்துள்ளனர்.

மொட்டையடித்த தனிப்படை போலீஸார்
மொட்டையடித்த தனிப்படை போலீஸார்

திருச்சி நகைக்கடை கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட திருவாரூர் முருகன் தலைமையிலான கொள்ளைக் கும்பல், திருச்சியில் பல்வேறு வங்கிகளைக் கொள்ளை அடிக்கத் திட்டமிட்டது. இறுதியாக திருச்சி, சமயபுரம் அடுத்த பிச்சாண்டார்கோயில் பஞ்சாப் நேஷனல் வங்கிக் கொள்ளை மற்றும் திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கடை உள்ளிட்ட கொள்ளையை அரங்கேற்றியது தெரியவந்துள்ளது.

கடந்த 11-ம் தேதி, திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக் கொள்ளையில் ஈடுபட்ட முருகன், வேறு வழக்கில் பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தார். முருகனை போலீஸ் கஸ்டடியில் எடுத்த கர்நாடக போலீஸார், அன்று இரவே ரகசியமாகத் திருச்சி அழைத்து வந்து புதைத்து வைத்திருந்த நகைகளை எடுத்துச் சென்றனர்.

முருகன், மணிகண்டன், சுரேஷ்
முருகன், மணிகண்டன், சுரேஷ்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டைப் பகுதியில் காரில் முருகன், நகைகளுடன் சென்றுகொண்டிருந்த கர்நாடக போலீஸாரை தமிழக போலீஸார் விரட்டிப் பிடித்தனர். தொடர்ந்து அவர்களிடம் தமிழக போலீஸார் நடத்திய விசாரணையில், முருகன் திருச்சியில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதும், சமயபுரம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளை அடித்தது குறித்தும் தெரியவந்தது.

முருகன் கூறிய தகவலின் அடிப்படையில், நகைக்கடை கொள்ளைக்கு அவருக்கு உடந்தையாக இருந்த மதுரை வாடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த கணேசனை திருச்சி போலீஸார் கைது செய்தனர். இதேபோல் வங்கிக் கொள்ளையில் தொடர்புடைய திண்டுக்கல்லைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார்.

திருச்சி எஸ்.பி ஜியா உல் ஹக்
திருச்சி எஸ்.பி ஜியா உல் ஹக்

இதனிடையே, ஜனவரி 29-ம் தேதி திருச்சி சமயபுரம் பிச்சாண்டார் கோயில் பகுதியிலுள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவத்தில், பேங்க் லாக்கரை உடைத்து 470 சவரன் தங்க நகைகள் மற்றும் 19 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. அதையடுத்து வழக்கை விசாரிக்கச் சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதன் தலைமையில் எஸ்.ஐ செந்தில்குமார், காவலர்கள் விஜயகுமார் மற்றும் ஹரிஹரன் உள்ளிட்டோர் அடங்கிய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

தொடர்ந்து தனிப்படை போலீஸார் பெங்களூரு, மும்பை என வடமாநிலங்களில் அலைந்தும் பல்வேறு இடங்களில் விசாரித்தும் துப்பு துலங்கவில்லை. இந்நிலையில் லலிதா ஜுவல்லர்ஸ் நகைக்கடையில் தொடர்புடைய முருகன் குறித்த தகவல்கள் வெளியானதும், திருச்சி சமயபுரம் வங்கிக் கொள்ளையிலும் முருகன் தலைமையில் சுரேஷ், மதுரை வாடிப்பட்டியைச் சேர்ந்த கணேசன், தஞ்சாவூர் அடுத்த செங்கிப்பட்டி பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட கும்பல்தான் கைவரிசை காட்டியது தெரியவந்தது.

Vikatan

இது குறித்தி செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி எஸ்.பி ஜியா உல் ஹக், ``தனிப்படை போலீஸார், வங்கிக் கொள்ளை தொடர்பான வழக்கின் குற்றவாளிகளை, பெங்களூர் கோவா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த 10 மாதங்களாக தேடி அலைந்தனர். ஆனால், குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியல. எப்படியும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என உறுதியாக இருந்தோம். அதனால், குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டால் திருச்சி சமயபுரம் மற்றும் கும்பகோணம் அடுத்த திருநாகேஸ்வரம் கோயிலுக்கு மொட்டை அடித்து முடிக்காணிக்கை செலுத்த உள்ளதாக வேண்டிக்கொண்டோம். வங்கிக் கொள்ளையில் தொடர்புடைய குற்றவாளிகள் குறித்து தற்போது துப்பு துலங்கி உள்ளது எங்களுக்குப் பெரும் நிம்மதி. இதனால், எங்களின் வேண்டுதல்படி கோயிலுக்கு மொட்டை அடிக்க உள்ளோம்” என உணர்ச்சி பொங்கக் கூறினார்.

`வெல்டர்' ராதாகிருஷ்ணன்
`வெல்டர்' ராதாகிருஷ்ணன்

இந்நிலையில் நேற்று வங்கிக் கொள்ளை வழக்கின் தனிப்படையில் இருந்த காவலர் விஜயகுமார் கும்பகோணம் அடுத்த திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோயிலிலும், காவலர் ஹரிஹரன் சமயபுரம் மாரியம்மன் கோயிலிலும் மொட்டையடித்து முடிகாணிக்கை செலுத்தியுள்ளனர். மேலும், தனிப்படை எஸ்.ஐ செந்தில்குமார் விரைவில் நேர்த்திக்கடன் செலுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.

Vikatan

இந்நிலையில் லலிதா ஜுவல்லரி நகை கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திவரும் திருச்சி மாநகர தனிப்படை போலீஸ் அதிகாரிகள், ``லலிதா ஜுவல்லர்ஸ் நகைக்கடை கொள்ளை வழக்கை, திருச்சி மாநகர் அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருவதுடன், குற்றவாளிகளைக் கைது செய்து வருகிறோம். மேலும், கொள்ளையடிக்கப்பட்ட 28 கிலோ தங்க நகையில் சுமார் 24 கிலோ வரை தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆனால், எங்கள் விசாரணையில் சிக்கிய முருகன் சொன்ன தகவலின் அடிப்படையில்தான், சமயபுரம் வங்கிக் கொள்ளையில் அவனுக்கும் அவரது கூட்டாளிகளுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

மொட்டையடித்த தனிப்படை போலீஸார்
மொட்டையடித்த தனிப்படை போலீஸார்

இந்நிலையில் வங்கிக் கொள்ளை தொடர்பாக அமைக்கப்பட்ட திருச்சி மாவட்ட தனிப்படை போலீஸார், தாங்களே சிரமப்பட்டு குற்றவாளிகளைக் கைது செய்தது போலவே சித்திரிக்கிறார்கள்” எனப் புலம்பினர்.

போலீஸார் மொட்டை போட்டுக்கொள்ளும் விவகாரத்தால் திருச்சி மாவட்ட மற்றும் தனிப்படை போலீஸாருக்குள் ஈகோ யுத்தம் கிளம்பியுள்ளது. திருச்சி வங்கிக் கொள்ளை தொடர்பாக அமைக்கப்பட்ட தனிப்படை போலீஸார், குற்றவாளிகள் சிக்கியதால் அடிக்கப்பட்ட முடிக்காணிக்கை பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.