ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கையில் பிரசித்திபெற்ற மங்களேஸ்வரி சமேத மங்களநாதர் கோயில் அமைந்திருக்கிறது. மிகவும் பழைமையான இந்தக் கோயிலில் ஆறடி உயரம்கொண்ட நடராஜர் சிலையைக் காணலாம். இந்த நடராஜர் சிலை விலை மதிக்க முடியாத பச்சை மரகதக்கல்லால் உருவாக்கப்பட்டது. மரகத நடராஜரின் சிலை ஆண்டு முழுவதும் சந்தனம் பூசிய நிலையில் இருக்கும். திருவாதிரை தினத்தன்று சந்தனம் அகற்றப்பட்டு, மரகத மேனியுடன் பக்தர்களுக்குக் காட்சியளிப்பார் நடராஜர்.
இந்தக் கோயில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்துவருகிறது. இந்த நிலையில், கடந்த மாதம் 100 ஆண்டுகளுக்குப் பிறகு சித்திரை தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்தக் கோயிலில் ஏழு பட்டர்கள் என அழைக்கக்கூடிய பூசாரிகள் பூஜைகள் செய்துவருகின்றனர்.
கடந்து 2019-ம் ஆண்டு ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ரகு என்ற பக்தர் ஒருவர், ஒன்றரைக் கிலோ எடையுள்ள முக்கால் அடி உயரமுள்ள வராகி அம்மன் வெண்கலச் சிலையைக் கோயிலுக்கு தானமாகக் கொடுத்து, மூலஸ்தானத்தில் உள்ள வராகி அம்மனுக்கு பூஜைகள் செய்யும்போது இந்தச் சிலைக்கும் பூஜை செய்யுமாறு வழங்கியிருக்கிறார். அதன்படி தினமும் வராகி அம்மனுக்கு பூஜை செய்யும்போது மூலஸ்தானத்தில் இந்தச் சிலைக்கும் பூஜை செய்வதை வழக்கமாகக்கொண்டிருந்தனர்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தச் சிலை திடீரென மாயமாகியிருக்கிறது. ஆனால், ஓரிரு தினங்களில் அதே போன்ற புதிய சிலை ஒன்று அங்கு இருந்திருக்கிறது. காணாமல்போன சிலைக்கு பதிலாக புதிய சிலை கோயிலில் வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக பூசாரிகளில் ஒருவரான மங்கலம் என்பவர் ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான திவான் பழனிவேல் பாண்டியனிடம் புகார் செய்தார். அதில் கோயிலில் அன்றைய தினம் பூஜைகள் மேற்கொண்ட அருண்குமார் என்ற பூசாரி தானமாகக் கொடுக்கப்பட்ட வராகியம்மன் சிலைக்கு பதிலாக அதேபோல, வேறு சிலையை வாங்கி வைத்திருப்பதாகப் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து பூசாரிகள் அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
குறிப்பாக அருண்குமாரிடம் விசாரித்தபோது, தான் பூஜை செய்த அன்றுதான் சிலை காணாமல்போனதால்... தன்மீது பழி விழுந்துவிடுமோ என்பதால், அதே போன்ற சிலையை வாங்கி வைத்ததாகத் தெரிவித்திருக்கிறார். இதனால் சந்தேகமடைந்த திவான் உத்திரகோசமங்கை காவல் நிலையத்தில் சிலை காணாமல்போனது குறித்து புகார் அளித்திருக்கிறார்.

நாம் திவான் பழனிவேல் பாண்டியனிடம் பேசினோம். ``காணாமல்போன வராகி அம்மன் சிலை ரூ.8,000 மதிப்புள்ளது. தங்கம், வெள்ளி சிறிதளவில் கலந்துசெய்த வெண்கலச் சிலை. இது 2019-ம் ஆண்டு ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஒருவர் மூலம் தானமாகக் கொடுக்கப்பட்டது. மூலஸ்தானத்திலிருந்த அந்தச் சிலை திடீரென காணாமல்போனது குறித்து விசாரித்தபோது பல முன்னுக்குப் பின் முரணான தகவல்களைப் பூசாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால் விசாரித்து உண்மையை வெளிக் கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு போலீஸில் புகார் செய்திருக்கிறேன்.
சிலையின் மதிப்பு குறைவு, சிறிய சிலைக்கு எதற்கு இந்தப் புகாரெல்லாம் எனக் கேள்விகள் எழுந்துவருகின்றன. சிலையின் அளவைவைத்துத் தவறு செய்தவர்களைத் தப்பவிடக் கூடாது. கடவுள் சிலையைத் திருடியவர்கள் யாராக இருந்தாலும் கண்டிப்பாக அவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும். அதற்காகத்தான் புகார் அளித்திருக்கிறேன். கண்டிப்பாக இன்னும் ஓரிரு தினங்களில் சிலையைத் திருடியவர்கள் யார் என்பது தெரியவரும்" எனக் கூறினார்.