Published:Updated:

குமரி: `கணவனைக் கொலை செய்ய ஒத்திகை; சிக்கிய மனைவி!’ - இன்ஷூரன்ஸ் பணத்துக்காக நடந்த கொடூரம்

போலீஸால் கைது செய்யப்பட்ட காயத்ரி தன் கணவன் கணேசுடன்
போலீஸால் கைது செய்யப்பட்ட காயத்ரி தன் கணவன் கணேசுடன்

கணவன் விபத்தில் இறந்தால் இன்ஷூரன்ஸ் பணத்தை வாங்கி கடனை அடைத்துவிடலாம். பின்னர் தனது யாசருடன் வாழலாம் எனக் காயத்ரி திட்டம் தீட்டியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியிலுள்ள கேசவ திருப்பால்புரத்தைச் சேர்ந்தவர் கணேஷ் (39). இவர் வீடியோகிராபர் ஆகப் பணிபுரிந்து வந்தார். இவரும் காயத்ரி (31) என்பவரும் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கரம்பிடித்துள்ளனர். தற்போது இவர்களுக்கு 4 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கணேஷுக்கு தலையில் அடிப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார்.

வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது திடீரென கணேஷ் கட்டிலில் இருந்து விழுந்து தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டியதாக அவரது மனைவி கூறியிருக்கிறார். தனியார் மருத்துவமனையில் மூன்று மணிநேரம் ஆப்பரேஷன் நடந்துள்ளது. இருப்பினும் கணேஷுக்கு நினைவு திரும்பவில்லை. கணேஷுக்கு ஏற்பட்ட காயம் கட்டிலில் இருந்து விழுந்தது போன்று இல்லை எனவும், இரும்பால் அடித்ததுபோன்று உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து காயத்ரியிடம் கணேஷின் உறவினர்கள் கேட்டுள்ளனர். அதற்கு, அவர்கள் இரவு தூங்கிக்கொண்டிருந்தபோது இரண்டுபேர் திடீரென வந்து தாக்கியதாக காயத்ரி கூறியுள்ளார். இதனால் காயத்ரி மீது அவர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து வடசேரி காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்டமாக காயத்ரியிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அதில் காயத்ரியே திட்டமிட்டு கணேசை கொலை செய்ய முயன்ற அதிர்ச்சி தகவல் வெளியானது.

கைதான விஜயகுமார்
கைதான விஜயகுமார்

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "மதுரையைச் சேர்ந்த யாசர் என்பவர் நாகர்கோவில் செட்டிக்குளம் பகுதியில் ஜெராக்ஸ் மற்றும் மொபைல் கடை வைத்திருக்கிறார். அவருக்கும் காயத்ரிக்கும் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் அது திருமண உறவைத் தாண்டிய காதலாக மாறியிருக்கிறது. இருவரும் பல இடங்களுக்கு சுற்றித்திரிந்துள்ளனர். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு யாசர் பிளே ஸ்கூல் ஆரம்பித்துள்ளார். அதற்காக கணவர் பெயரில் உள்ள வீட்டு பத்திரத்தை அடகுவைத்து 10 லட்சம் ரூபாய் பெற்று, அதை யாசருக்கு கொடுத்துள்ளார் காயத்ரி. பின்னர் அந்த ஸ்கூலுக்கு ஆசிரியராக பணியில் இணைந்திருக்கிறார். வீட்டை அடகுவைத்தது பற்றி கணவர் கணேஷ் கேட்டதற்கு தனது தம்பிக்கு பணத்தை கொடுத்ததாக சொல்லியுள்ளார். இதுபற்றி விசாரித்த கணேஷுக்கு காயத்ரியின் தகாத உறவு விவகாரம் தெரிய வந்திருக்கிறது. இதனால் இருவருக்குள்ளும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இது ஒருபுறம் இருக்க வீட்டை அடகுவைத்து எடுத்த லோன் பணத்திற்கு வட்டி கட்ட முடியாமல் காயத்திரி தவித்திருக்கிறார். அதற்காக கந்து வட்டிக்கு பணம் வாங்கவும் முயற்சித்துள்ளார். அதுவும் கைகூடவில்லை. இந்த நிலையில்தான் கணவன் எடுத்துள்ள இன்சூரன்ஸ் பாலிசி காயத்ரியின் நினைவுக்கு வந்தது. கணவன் விபத்தில் இறந்தால் இன்ஷூரன்ஸ் பணத்தை வாங்கி கடனை அடைத்துவிடலாம். பின்னர் தனது யாசருடன் வாழலாம் என நினைத்துள்ளார். இதற்காக யாசருடன் சேர்ந்து பிளான் போட்டுள்ளார். யாசர் கொரோனா ஊரடங்கு காரணமாக தற்போது மதுரையில் இருப்பதால் மொபைல் போன் மூலம் ஸ்கெட்ச் போட்டுகொடுத்துள்ளார்.

கருணாகரன்
கருணாகரன்

அந்த திட்டத்தின்படி யாசரின் நண்பர்களான கருணாகரன், விஜயகுமார் ஆகியோரை காயத்ரி வீட்டுக்கு அனுப்பி கணேஷை கொலை செய்வது குறித்து ஒத்திகை பார்த்துள்ளார். காயத்ரி தூங்கும் இடம், கணேஷ் தூங்கும் இடங்களை பார்வையிட்டு திட்டமிட்டுள்ளனர். சம்பவத்தன்று கருணாகரன் மற்றும் விஜயகுமார் இரவு நேரத்தில் காயத்ரி வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த கணேசின் தலையில் கல் உடைக்கும் பெரிய சுத்தியாலால் கொடூரமாக தாக்கியுள்ளனர். கட்டிலில் மெத்தை மற்றும் தலையணை இருந்ததால் தலையில் பலமாக அடி படவில்லை. ஆனால் கணேசின் மண்டை ஓடு உடைந்து ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. அவரது அடி வயிற்றுப்பகுதியிலும் சுத்தியலால் தாக்கியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதை அடுத்து கணேஷ் கட்டிலிலிருந்து கீழே விழுந்து விட்டதாக முதலில் நாடகமாடிய காயத்ரி, பின்னர் யாரோ இருவர் வீட்டினுள் வந்து தாக்கியதாக கூறியுள்ளார். காயத்ரி மாற்றி மாற்றி பேசியது கணேசின் உறவினர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதனால்தான் அவர்கள் புகார் அளித்தார்கள். இந்த வழக்கில் காயத்ரி, கருணாகரன், விஜயகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரையில் இருந்த யாசர் தலைமறைவாகிவிட்டதால் அவரை தொடர்ந்து தேடிவருகிறோம்" என்றனர் போலீஸார். காதல் மனைவியே கணவனை கொலை செய்ய முயன்ற சம்பவம் குமரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு