Published:Updated:

திருச்சி: `ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட்... ஃபேஸ்புக் காதலி அனுப்பிய ஆபாசப் படம்!'-வாலிபருக்கு நடந்த சோகம்

திருச்சி கே.கே.நகர் காவல் நிலையம்
திருச்சி கே.கே.நகர் காவல் நிலையம்

ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான இளைஞரை திருச்சிக்கு வரவழைத்து, அடித்துத் துவைத்து, பணம் பறித்த பெண் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பாதிக்கப்பட்ட இளைஞர் கொடுத்த புகாரின் பேரில் திருச்சி போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டம், பண்ருட்டியைச் சேர்ந்தவர் வினோத் குமார். 12-ம் வகுப்பு படித்திருக்கும் இவருக்குத் திருமணமாகி, ஒரு குழந்தையும் இருக்கிறது. ஃப்ளெக்ஸ் டிசைனராகப் பணியாற்றிவந்த வினோத்குமார், பல மணி நேரம் ஃபேஸ்புக், வாட்ஸ்அப்பில் மூழ்கிக்கிடப்பது வழக்கம். இந்நிலையில், அவரது ஃபேஸ்புக்கில் திருச்சியைச் சேர்ந்த நிஷா என்ற பெண் ஒருவர் ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் கொடுத்திருக்கிறார். அவரும் அதை ஏற்றுக்கொண்டிருக்கிறார்.

திருச்சி
திருச்சி

முதலில் சில நாள்கள் இருவரும் நட்பாகப் பழக, அவருடைய செல்போன் நம்பரை வாங்கி, தனிப்பட்ட முறையில் பேச்சைத் தொடர்ந்திருக்கிறார். ஒருகட்டத்தில் பேச்சு முற்றிப்போய், ``உன்னை எனக்குப் பிடிச்சிருக்கு. உன்னை நான் கல்யாணம் பண்ணலாம்னு இருக்கேன்’’ என ஒரு மெசேஜ் அனுப்பியிருக்கிறார் நிஷா. அதற்கு எதுவும் பதிலளிக்காமல் இருந்திருக்கிறார் வினோத்குமார். கொஞ்ச நேரத்தில், ``உன்னோட நான் தனியாக இருக்கணும்’’ என்று ஓர் ஆபாசப் படத்தை அனுப்பியிருக்கிறார் நிஷா. பின்னர் வினோத்குமாரும் அவரைச் சந்திக்க வேண்டும் என்ற தன்னுடைய ஆவலை வெளிப்படுத்தினார். இதையடுத்து வினோத்குமாரை கடந்த 5-ம் தேதி திருச்சிக்கு வருமாறு அழைத்திருக்கிறார் நிஷா.

வினோத்குமார் தன் குடும்பத்தினரிடம் வேலை விஷயமாக திருச்சிக்குச் செல்வதாகப் பொய் சொல்லிவிட்டு, தனது ஃபேஸ்புக் காதலியை நேரில் பார்க்கும் ஆவலில் சினிமா பட கதாநாயகன்போல், டூவீலரில் புயலெனப் புறப்பட்டு திருச்சி வந்திருக்கிறார். திருச்சி வந்தவுடன் அந்த நிஷாவுக்கு போன் செய்திருக்கிறார். அவரை காஜாமலைக்கு வருமாறும், அங்கிருக்கும் பள்ளி ஒன்றின் அருகில் காத்திருப்பதாகவும் சொல்லியிருக்கிறார் நிஷா. பள்ளி விடுமுறை என்பதால் ஆள் அரவமின்றி இருந்த அந்தப் பகுதிக்கு வந்த வினோத்குமாரிடம் அங்கு மறைந்திருந்த ஆறு பேர் கொண்ட கும்பல் அவரை மடக்கிப் பிடித்து, கத்தியைக் காட்டி மிரட்டி, அவர் வைத்திருந்த பர்ஸ், ஸ்மார்ட்போன், ஏடிஎம் கார்டு மற்றும் அவரது இருசக்கர வாகனத்தைப் பறித்துக்கொண்டு ஓடியது. செய்வதறியாது திகைத்து நின்ற வினோத்குமார் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.

கைதான நிஷா, முகமது யாசிர் மற்றும்  ஆசிக்
கைதான நிஷா, முகமது யாசிர் மற்றும் ஆசிக்

நிஷாவின் போன் நம்பரைவைத்து அவரை மடக்கிப் பிடித்த போலீஸார் அவரிடம் தங்கள் பாணியில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் நிஷா அனைத்து விவரங்களையும் கூற, இதில் மூளையாகச் செயல்பட்ட முகமது யாசிர், ஆசிக் ஆகியோருடன் நிஷாவையும் சேர்த்து மூவரும் கைது செய்யப்பட்ட நிலையில் அஜீஸ், சித்திக், அன்சாரி ஆகிய மூன்று பேரும் தலைமறைவாகிவிட்டனர். கைது செய்யப்பட்ட மூவரும் தகவல் மற்றும் தொழில்நுட்பச் சட்டம் உள்ளிட்ட எட்டு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

அடுத்த கட்டுரைக்கு