Published:Updated:

`உயர் சிகிச்சைக்கு கொண்டுபோறோம்'- மார்த்தாண்டம் பெண் உயிரிழப்புக்கு தனியார் மருத்துவமனை காரணமா?

சிந்து ஆர்

தனியார் மருத்துவமனையிலிருந்து சுமார் 300 மீட்டர் தூரத்தில் உள்ள குழித்துறை அரசு மனைத்துவமனையில் ஆம்புலன்ஸ் நின்றுள்ளது.

Merlin Divya
Merlin Divya

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே, ஆற்றூர் பகுதியைச் சேர்ந்த பேராசிரியர் விஜின் என்பவரின் மனைவி, மெர்லின் திவ்யா. தலைப்பிரசவத்திற்காக மெர்லின் திவ்யாவை மார்த்தாண்டம் சி.எஸ்.ஐ மிஷன் தனியார் மருத்துவமனையில் நேற்று சேர்த்துள்ளனர். இன்று காலை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பிரசவ அறைக்கு அவரைக் கொண்டு சென்றுள்ளனர். குழந்தை பிறந்த சிறிது நேரத்தில், குழந்தையுடன் மெர்லின் திவ்யாவையும் ஒரு ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளனர்.

Merlin Divya
Merlin Divya

அதைப் பார்த்த உறவினர்கள், எங்கே கொண்டுசெல்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர். உயர் சிகிச்சைக்காகக் கொண்டு செல்வதாக மருத்துவமனை ஊழியர்கள் கூறி, அவசரமாக ஆம்புலன்ஸை கிளப்பியுள்ளனர். உறவினர்களும் ஆம்புலன்ஸை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். தனியார் மருத்துவமனையிலிருந்து சுமார் 300 மீட்டர் தூரத்தில் உள்ள குழித்துறை அரசு மனைத்துவமனையில் ஆம்புலன்ஸ் நின்றுள்ளது. ஆம்புலன்ஸில் இருந்து மெர்லின் திவ்யாவையும் குழந்தையையும் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றுள்ளனர்.

அங்கு, தாயையும் குழந்தையையும் பரிசோதித்த மருத்துவர்கள், இருவரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், சி.எஸ்.ஐ மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்ததால்தான் தாயும் சேயும் உயிரிழந்ததாகக் குற்றம் சாட்டினர்.

Merlin Divya
Merlin Divya

மேலும், இருவரும் இறந்ததை மறைக்கும் விதமாக உறவினர்களிடம்கூட தகவல் தெரிவிக்காமல், மேல் சிகிச்சைக்காகக் கொண்டுசெல்வதுபோல் நாடகமாடி, அரசு மருத்துவமனையில் உடலை சேர்த்ததாகவும் புகார் தெரிவித்தனர்.

இதுகுறித்து மார்த்தாண்டம் சி.எஸ்.ஐ மிஷன் மருத்துவமனை தரப்பில் விசாரித்தோம், "மெர்லின் திவ்யாவிற்கு நார்மல் டெலிவரி நடந்தது. அப்போது, திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அதில் குழந்தை இறந்தது, தாயைக் காப்பாற்ற வெண்டிலேஷன் தேவைப்பட்டதால், மருத்துவர்கள் டீம், குழித்துறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றது. அங்கு, முறைப்படி மருத்துவர்களிடம் விவரம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், மெர்லின் திவ்யாவை காப்பாற்ற இயலவில்லை" என்றனர்.