Published:Updated:

தூத்துக்குடி: 16 வயது சிறுமியைப் பெண் கேட்ட இளைஞர்... தர மறுத்ததால் சிறுமியுடன் தற்கொலை முயற்சி!

கடம்பூர் காவல் நிலையம்
News
கடம்பூர் காவல் நிலையம்

தூத்துக்குடியில் 16 வயது சிறுமியைக் காதலித்து, அவரின் வீட்டில் பெண் கேட்டுத் தராததால் சிறுமியுடன் விஷமருந்திய இளைஞர்மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள செவல்குளம், காலனிதெருவைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவர், ஜே.சி.பி ஆபரேட்டராக வேலை செய்துவருகிறார். இந்த நிலையில், வேல்முருகனும் அதே கிராமத்தைச் சேர்ந்த 11-ம் வகுப்பு படித்துவரும் 16 வயது உறவுக்காரச் சிறுமியும் காதலித்துவந்ததாகச் சொல்லப்படுகிறது. இவர்களின் காதல் விவகாரம் இருவர் வீட்டுக்கும் தெரிய வரவே, சிறுமியின் வீட்டார் படிப்பில் கவனம் செலுத்துமாறு சொல்லி கண்டித்தனராம்.

வேல் முருகன்
வேல் முருகன்

இருப்பினும் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து சுற்றித் திரிந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், வேல்முருகன் திருமணம் செய்வதற்காக அந்தச் சிறுமியின் வீட்டுக்குச் சென்று பெண் கேட்டிருக்கிறார். அதற்கு பெற்றோர் தனது மகளுக்கு 16 வயதே நடப்பதாலும், 12-ம் வகுப்புக்குப் பிறகு கல்லூரியில் சேர்த்து படிக்கவைக்கவிருப்பதாகவும் சொல்லி பெண் தர மறுத்ததாகச் சொல்லப்படுகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த நிலையில், சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அங்கு சென்றிருக்கிறார் வேல்முருகன். `நம்ம ரெண்டு பேரையும் ஒண்ணு சேர விட மாட்டாங்க. ஒண்ணாத்தான் சேர்ந்து வாழ முடியலை. ஒண்ணாச் சேர்ந்து உயிரை விட்டுடுவோம்’ எனச் சொல்லி இருவரும் விஷமருந்தியுள்ளனர். சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்த அந்த சிறுமியின் அம்மா, இருவரும் மயங்கிக் கிடந்ததைப் பார்த்ததும் கூச்சலிட்டிருக்கிறார். அவரின் கூச்சல் சத்தம் கேட்ட அருகிலிருந்தவர்கள் இருவரையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

கடம்பூர் காவல் நிலையம்
கடம்பூர் காவல் நிலையம்

இருவரும் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த நிலையில் சிறுமியின் தாய், கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், காவல் நிலைய ஆய்வாளர் மாரியம்மாள், வேல்முருகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்துவருகிறார். சிறுமியைப் பெண் கேட்டு தர மறுத்ததால், இளைஞர் ஒருவர் சிறுமியுடன் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.