மகாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத்தைச் சேர்ந்தவர் சரண்சிங் (20). இவர் அதே ஊரில் கல்லூரியில் படிக்கும் சுக்பிரீத் கவுர் (18) என்ற பெண்ணை ஒருதலைப்பட்சமாகக் காதலித்துவந்தார். ஆனால் அந்தப் பெண் அவரைக் காதலிக்கவில்லை. இதை அந்தப் பெண் பலமுறை அந்த வாலிபரிடமும் சொல்லிவிட்டார். ஆனாலும் சரண்சிங் தொடர்ந்து காதல் தொல்லை அளித்துவந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் வழக்கம்போல் மாணவி கவுர் கல்லூரிக்குச் சென்றுவிட்டு வெளியில் வந்தார். அப்போது, அவரிடம் சென்று மீண்டும் சரண் சிங் `ஏன் என்னை காதலிக்க மறுக்கிறாய்?’ என்று கேட்டார். அதற்கு அந்தப் பெண், தன்னால் காதலிக்க முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால் கோபமடைந்த சரண் சிங் தன்னிடமிருந்த கத்தியை எடுத்து கவுர் கழுத்தை அறுத்துவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார்.

ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்த கவுரை பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்பட்டு சிகிச்சை பலனலிக்காமல் அவர் இறந்துபோனார். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவுசெய்து, போலீஸ் அதிகாரி சச்சின் பாட்டீல் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சரண் சிங்கைத் தேடிவந்தனர். சரண் சிங் லாசல்காவ் என்ற இடத்தில் உள்ள அவரின் சகோதரி வீட்டில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. உடனே விரைந்து சென்ற போலீஸார் சரண் சிங்கைக் கைதுசெய்து, அழைத்து வந்து, விசாரித்துவருகின்றனர். அவரிடம் விசாரித்ததில் தன்னைக் காதலிக்க மறுத்த கோபத்தில் கொலை செய்துவிட்டதாகத் தெரிவித்தார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் எடுத்து விசாரித்துவருகின்றனர்.
