Published:Updated:

கொய்யாக்காய் தருவதாக அழைத்துச் சென்று கழுத்தறுத்த இளைஞர்! - சிறுவன் கொலையில் அதிர்ச்சி வாக்குமூலம்

மாமா வீட்டின் மாடிக்கு ஹரிஹரதீபனை கொய்யாக்காய் தருவதாக ஏமாற்றி வரவழைத்துள்ளார். பின்னர், அவன் கைகளைக் கட்டி, வாயில் துணியைவைத்து ரூ.5-க்கு கடைகளில் விற்கப்படும் சிறு கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலைசெய்திருக்கிறார்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கோட்டையூர் -சின்னையம்பட்டியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவர் துவரங்குறிச்சியில் தன்னுடைய அக்கா நடத்தும் ஹோட்டலில் கேஷியராக இருக்கிறார். இவருக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். மூத்த மகள் திருமணம் முடிந்து வெளியூரில் இருக்கிறார். இரண்டாவது மகள் திருச்சியில் தங்கி ப்ளஸ் ஒன் படித்துவருகிறார். மூன்றாவது மகள் 9-ம் வகுப்பு படித்துவருகிறார். கடைசியாக ஹரிஹரதீபன் என்ற 6 வயது மகன் 1-ம் வகுப்பு படித்துவருகிறார்.

ஹரிஹரதீபன்
ஹரிஹரதீபன்

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ராமகிருஷ்ணன் வேலைக்குச் சென்றுவிட்டார். அவருடைய மனைவி வித்யா கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் கணக்கெடுப்புப் பணிக்காகச் சென்றுவிட்டு வீடு திரும்பியிருக்கிறார். அப்போது வீட்டில் மகன் இல்லாததால் அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்திருக்கிறார். அப்போது அவரின் மாமா வீட்டின் மாடியில் ஹரிஹரதீபன் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்திருக்கிறார். அதைப் பார்த்து கதறிய வித்யா, போலீஸுக்குத் தகவல் தெரிவித்தார். நத்தம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்துவந்தனர்.

சின்னையம்பட்டி 200 வீடுகளைக்கொண்ட சிறிய கிராமம் என்பதால் யாருக்கும் தெரியாமல் வெளியிலிருந்து வந்து யாரும் கொலை செய்திருக்க மாட்டார்கள்; முதற்கட்டமாக அக்கம்பக்கத்தில் விசாரிக்கலாம் எனப் போலீஸார் முடிவெடுத்திருக்கிறார்கள்.

அப்போது ராமகிருஷ்ணனின் தம்பி சந்திரசேகர் குடும்பத்தினருக்கும், இவர்கள் குடும்பத்தினருக்கும் சிறு சிறு பிரச்னைகள் இருந்தது தெரியவந்திருக்கிறது. குறிப்பாக கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் சந்திரசேகரின் மகன் அஜய்ரத்தினம் (20) மீது போலீஸாருக்குச் சந்தேகம் ஏற்படவே அவரைப் பிடித்து விசாரித்தனர். அப்போது போலீஸாரிடம் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். உடனே போலீஸார் அவரைக் கைதுசெய்தனர். மேலும் எதற்காக, எப்படிக் கொலை நடந்தது என்பதை அஜய்ரத்தினம் போலீஸாரிடம் வாக்குமூலமாக அளித்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியடையவைத்திருக்கிறது.

அஜய்ரத்தினம்
அஜய்ரத்தினம்

இது குறித்து போலீஸாரிடம் விசாரித்தபோது, ``திருச்சியில் படித்துவரும் ராமகிருஷ்ணன் மகள் ஒருவருடன் பழகியிருக்கிறாராம். அவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துள்ள புகைப்படங்களை அஜய்ரத்தினம் பார்த்திருக்கிறார். இது குறித்து அஜய், தனது பெரியப்பாவிடம் தெரிவித்திருக்கிறார். மேலும், வேறு ஒருவரின் செல்போனை வாங்கி அதிலிருந்து தங்கையின் போட்டோவைப் பதிவிட்டிருக்கிறார். இதை ராமகிருஷ்ணன் வீட்டார் கண்டுபிடித்து அஜய்ரத்தினத்தைக் கண்டித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து மீண்டும் சமூக வலைதளத்தில் இவரும் சேர்ந்திருக்கும் படம் வெளியாகியிருக்கிறது. இது குறித்து ராமகிருஷ்ணன் திண்டுக்கல் சைபர் க்ரைம் போலீஸாரிடம் புகார் அளித்திருக்கிறார். போலீஸார் விசாரணையில் மீண்டும் அஜய்ரத்தினம்தான் படங்களைப் பதிவிட்டது என்பது தெரியவந்தது. இருப்பினும் அவரைக் கண்டித்துவிடுமாறும், வழக்கு பதிவு செய்ய வேண்டாம் எனவும் ராமகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.

இருப்பினும் அஜய்ரத்தினம், ராமகிருஷ்ணன் குடும்பத்தினர் மீது மிகுந்த ஆத்திரத்தில் இருந்திருக்கிறார். இந்நிலையில்தான் ராமகிருஷ்ணன் வீட்டின் அருகேயுள்ள அவரின் மாமா வீட்டின் மாடிக்கு ஹரிஹரதீபனை கொய்யாக்காய் தருவதாக ஏமாற்றி வரவழைத்திருக்கிறார். பின்னர், ஹரிஹரதீபனின் கைகளைக் கட்டி, வாயில் துணியைவைத்து ரூ.5-க்கு கடைகளில் விற்கப்படும் சிறு கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலைசெய்திருக்கிறார்'' என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு