Published:Updated:

``பைக்கு மேல சும்மா இருந்ததால எடுத்தேன்!" - ஹெல்மெட் திருட்டில் சிக்கிய நபர்

ஹெல்மெட் திருட்டு

டூ வீலரை நிறுத்திச் சென்ற சில நிமிடங்களிலேயே அங்கு நீல நிற சட்டையும், தலையில் காக்கித் தொப்பியும் அணிந்தபடி பல்சர் பைக்கில் வந்த நபர் ஒருவர், ஹெல்மெட்டைத் திருடிக்கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் சென்ற காட்சி பதிவாகியிருந்தது.

``பைக்கு மேல சும்மா இருந்ததால எடுத்தேன்!" - ஹெல்மெட் திருட்டில் சிக்கிய நபர்

டூ வீலரை நிறுத்திச் சென்ற சில நிமிடங்களிலேயே அங்கு நீல நிற சட்டையும், தலையில் காக்கித் தொப்பியும் அணிந்தபடி பல்சர் பைக்கில் வந்த நபர் ஒருவர், ஹெல்மெட்டைத் திருடிக்கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் சென்ற காட்சி பதிவாகியிருந்தது.

Published:Updated:
ஹெல்மெட் திருட்டு

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் பிரபல மருத்துவமனைக்கு எதிரேயுள்ள பத்திரம் எழுதும் அலுவலகத்துக்கு இளைஞர்கள் இருவர் டூ-வீலரில் வந்திருக்கின்றனர். தொடர்ந்து அவர்கள் சாலையின் ஓரத்தில் டூ-வீலரை நிறுத்திவிட்டு ஹெல்மெட்டை கண்ணாடியில் தொங்கவிட்டபடி பத்திரம் எழுதும் அலுவலகத்துக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. சிறிது நேரத்தில், வேலையை முடித்துவிட்டு அவர்கள் கீழே வந்து பார்த்தபோது டூ வீலரில் வைத்திருந்த ஹெல்மெட் மாயமாகியிருந்தது. ஹெல்மெட் காணாமல்போனது தொடர்பாக அக்கம் பக்கத்தினர் மற்றும் பக்கத்துக் கடைக்காரர்களிடம் இளைஞர்கள் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து பக்கத்து வணிக நிறுவனத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சியை இளைஞர்கள் பார்த்தபோது, டூ வீலரை நிறுத்திச் சென்ற சில நிமிடங்களிலேயே அங்கு நீல நிற சட்டையும், தலையில் காக்கி தொப்பியும் அணிந்தபடி பல்சர் பைக்கில் வந்த நபர் ஒருவர், ஹெல்மெட்டைத் திருடிக்கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் சென்ற காட்சி பதிவாகியிருந்தது.

சிசிடிவி காட்சி
சிசிடிவி காட்சி

இதை ஆதாரமாகக் கொண்டு ஹெல்மெட்டைத் திருடிய நபரை கண்டுபிடிப்பதற்காக இளைஞர்கள் அருப்புக்கோட்டை நகரின் பல பகுதிகளிலும் தேடியிருக்கின்றனர். மேலும், நண்பர்களுக்கும் தகவல் தெரிவித்து சுற்றுவட்டாரத்தில் நீல நிற சட்டை, காக்கி நிற தொப்பி அணிந்தபடி யாரேனும் டூ வீலரில் வந்தால் மடக்கிப் பிடிக்குமாறும் சொல்லியிருக்கின்றனர். அதன்படி ஆத்திப்பட்டி பகுதியில், இளைஞர்கள் சொன்ன அடையாளத்தின்படி ஒருவரை மடக்கிப் பிடித்திருப்பதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. அதைத் தொடர்ந்து அங்கு சென்ற இளைஞர்கள், தமிழக அரசின் இலச்சினைகொண்ட காக்கித் தொப்பி அணிந்தபடி பிடிபட்ட நபரிடம் விசாரணை நடத்தியிருக்கின்றனர். அதற்கு பதிலளித்தவர், ``நான் வனத்துறையில் பணியாற்றுகிறேன். என் பெயர் ராஜ்குமார், நான் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவன்" என்று கூறியிருக்கிறார்.

திருட்டு
திருட்டு

போலீஸாகப் பணியாற்றும்போது, ஹெல்மெட்டை எதற்காகத் திருடினீர்கள் என இளைஞர்கள் கேட்டதற்கு, "டூ வீலர் மீது சும்மா இருந்ததால் எடுத்து வந்தேன். இப்போ விட்டுவிட வேண்டியதுதானே" என பதில் கூறியவாறே திருடிய ஹெல்மெட்டை எடுத்து மீண்டும் இளைஞர்களிடமே ஒப்படைத்திருக்கிறார் ராஜ்குமார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் மற்றும் சிசிடிவி கேமரா காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவிவருகின்றன. மேலும் சம்பவம் தொடர்பாகப் புகார் கொடுக்க இளைஞர்களுக்கு விருப்பமில்லாததால் ஹெல்மெட் திருட்டில் ஈடுபட்டவர் அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், திருட்டில் ஈடுபட்ட ராஜ்குமார் என்பவர், உண்மையில் வனத்துறையில் பணியாற்றுபவர்தானா அல்லது வனத்துறையின் பெயரைச் சொல்லிக் களங்கம் ஏற்படுத்த முயல்கிறாரா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. மேலும், தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் பணம் டெபாசிட் செய்ய உதவுவதாகக் கூறி எழுதப் படிக்கத் தெரியாத நபரை இதே ராஜ்குமார் ஏமாற்றியதாகவும் சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டு பதிவிடப்பட்டுவருகிறது. எனவே, வீடியோ பின்னணியில் உள்ள ராஜ்குமார் குறித்து தீர விசாரித்து காவல்துறை அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.