Published:Updated:

போதையால் தள்ளாடும் தமிழ்நாடு; பாதை மாறும் இளைஞர்கள் - என்ன செய்யப்போகிறது காவல்துறை?!

போதை மாத்திரை

குடிசை தொழில் போல போதை பொருள் விற்பனை தமிழ்நாட்டில் நடப்பதால் அதைக் கட்டுப்படுத்துவதில் பல்வேறு சவால்கள் காவல்துறையினருக்கு ஏற்பட்டுள்ளது.

போதையால் தள்ளாடும் தமிழ்நாடு; பாதை மாறும் இளைஞர்கள் - என்ன செய்யப்போகிறது காவல்துறை?!

குடிசை தொழில் போல போதை பொருள் விற்பனை தமிழ்நாட்டில் நடப்பதால் அதைக் கட்டுப்படுத்துவதில் பல்வேறு சவால்கள் காவல்துறையினருக்கு ஏற்பட்டுள்ளது.

Published:Updated:
போதை மாத்திரை

சென்னை விமான நிலையங்களிலும் வெளி மாநிலங்களிலிருந்து சென்னைக்கு வரும் ரயில்களிலும் தினந்தோறும் போதை பொருள்கள் கடத்தப்படுகின்றன. அதில் என்றைக்காகவது ஒருநாள் கிலோ கணக்கில் போதை பொருள்கள் சிக்குகின்றன. போதை பொருள் தொடர்பாக வழக்கு பதிவு செய்யும் காவல்துறை, கடத்தலில் ஈடுபட்டவர்களோடு வழக்கை முடித்துக் கொள்வது வாடிக்கையாக உள்ளது. இந்தக் கடத்தலின் ஆணி வேரைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது காவல்துறைக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது. அதற்கு, அரசியலும் பணமும் பின்னணியில் இருப்பதால் காவல்துறையினர் கண்டுக்கொள்ளாமல் விட்டுவிடுவதே ஏதார்த்த உண்மை என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

கஞ்சா
கஞ்சா

போதை பொருள்களே குற்ற சம்பவங்களுக்கு முக்கிய காரணமாக உள்ளது. அதனால் போதை பொருள் கடத்தலைத் தடுக்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். அதுதொடர்பாக போதை பொருள் ஒழிப்பு மாநாடும் சென்னையில் நடத்தப்பட்டுள்ளது. அதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ``போதை பொருள்கள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார். கடந்த சில தினங்களுக்கு முன், எத்தியோப்பியா நாட்டிலிருந்து சென்னைக்கு வந்த பயணிகள் விமானத்தில் ரூ.11.75 கோடி மதிப்புடைய 1.218 கிலோ கோக்கையின் என்ற போதைப் பொருள் சிக்கியிருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

போதை பொருளைக் கடத்தி வந்ததாக வென்சுலா நாட்டைச் சேர்ந்த பிரான்சிஸ் ஜோயில் டோரீஸ் (38) என்ற பெண் பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர். சென்னையில் உள்ள ரயில் நிலையங்களிலும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்கள் சிக்குவது வாடிக்கையாக உள்ளது. அதைத் தடுக்க உள்ளூர் போலீஸாருடன், ரயில்வே போலீஸாரும் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் போதை பொருள் கடத்தல் தொடர்பாக 143 பேரை சென்னைப் போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 493 கிலோ குட்கா புகையிலை பாக்கெட்டுகள், 62.2 கிலோ மாவா, ரூ.4 ஆயிரம் பணம், 2 மோட்டார் சைக்கிளை போலீஸார் பறிமுதல் செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

குட்கா
குட்கா

இதுகுறித்து போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் பேசினோம். ``தமிழ்நாட்டின் தலைநகர் சென்னைக்கு பல்வேறு வழிகளில் கஞ்சா, குட்கா, ஹெராயின் உள்ளிட்ட போதை பொருள்கள் கடத்தி கொண்டு வரப்படுகின்றன. சென்னைக்கு ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலிருந்து போதைப் பொருள்கள் கடத்தி வரப்படுகின்றன. அதைப்போல, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் ஒரு ரூட்டில் போதை பொருள்கள் கடத்தப்படுகின்றன. கடல் வழியாகவும் போதை பொருள்கள் கடத்தப்படுகின்றன. சென்னைக்கு ஆந்திராவிலிருந்து அதிகளவில் கஞ்சா, லாரிகள் மூலம் கடத்தி வரப்படுகின்றன. குறிப்பாக கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு வரும் லாரிகளில் காய்கறி, பழங்கள் உள்ளிட்ட பொருள்களோடு கஞ்சாவை பதுக்கி கடத்தல் கும்பல் கொண்டு வந்து சென்னையில் உள்ள மொத்த டீலர்களிடம் விற்று விடுகின்றனர். மொத்த டீலர்கள், கஞ்சா ஒவ்வொரு பகுதியில் உள்ள லோக்கல் டீலர்களுக்கு சப்ளை செய்து விடுகின்றனர்.

இதுதவிர ஆந்திராவிலிருந்து பைக் மூலமாகவும், ரயில்கள், பேருந்துகள் மூலமாகவும் கஞ்சாவை லோக்கல் டீலர்கள் கடத்திவருகின்றனர். அவர்கள், கஞ்சா பழக்கத்துக்கு அடியானவர்களுக்கு பல வகையில் விற்பனை செய்கின்றனர். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கூட கஞ்சா விற்கப்படுகிறது. அதில் வாட்ஸ்அப்பில் ஆர்டர் செய்தால் டோர் டெலிவரியும் செய்யப்படுகிறது. உணவு டெலிவரி செய்வதைப் போல கஞ்சா டெலிவரியும் சென்னையில் படுஜோராக நடந்துவருகிறது. ஒரு பாக்கெட்டின் விலை ரூ.250ல் தொடங்கி 500 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

வலி நிவாரண மாத்திரைகள்
வலி நிவாரண மாத்திரைகள்

கஞ்சா புகைக்கும் பழக்கம் மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. கஞ்சா போதைதான், பல குற்ற சம்பவங்களுக்கு முக்கிய காரணமாக உள்ளது. சமீபத்தில் டிரைவருடன் சென்ற இளம்பெண்ணை, கஞ்சா போதையில் போரூர் பகுதியில் கூட்டாக ஐந்து இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இளம்பெண் அணிந்திருந்த தங்க நகைகளையும் அந்தக் கும்பல் வழிப்பறி செய்துள்ளனர். அதுதொடர்பான புகாரில் ஐந்து இளைஞர்களை எஸ்.ஆர்.எம்.சி போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கஞ்சா, குட்காவைத் தொடர்ந்து போதைக்காக வலி நிவாரண மாத்திரைகள், மருந்துகளை இன்றைய இளைஞர்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். மருந்து, மாத்திரைகளை ஊசி மூலம் ஏற்றிக் கொள்பவர்கள் போதையில் தள்ளாடிவருகின்றனர். அதைத் தடுக்க மெடிக்கல் ஸ்டோர்ஸ் உரிமையாளர்களிடம் டாக்டரின் பரிந்துரையில்லாமல் மருந்து, மாத்திரைகளை விநியோகிக்க கூடாது என்று அறிவுறுத்தியிருக்கிறோம். ஆனாலும் ஆன்லைன் மூலம் வலி நிவாரண மாத்திரைகளை ஆர்டர் செய்து போதைக்காகப் பயன்படுத்தி வருகின்றனர். அதை தடுக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரிசார்ட்கள், பண்ணை வீடுகளில் வீக் என்ட் பார்ட்டிகள் நடத்தப்படுகின்றன. அதில் சில பார்ட்டிகளில் போதை பொருள் சப்ளை செய்யப்படுகின்றன. ரகசியமாக நடத்தப்படும் இந்தப் பார்ட்டிகளில் ஐ.டி. நிறுவனங்களில் வேலைப்பார்ப்பவர்களும் வி.வி.ஐ.பி-க்கள், தொழிலதிபர்களின் வாரிசுகள் கலந்து கொள்கின்றனர். சில மாதங்களுக்கு முன் சென்னை அண்ணாநகரில் உள்ள பிரபலமான மாலில் நடந்த பார்ட்டியில் ஐ.டி. நிறுவன ஊழியர், மர்மமான முறையில் உயிரிழந்தார். அதன்பிறகே அங்கு பார்ட்டி நடந்த தகவல் எங்களுக்கு (அண்ணாநகர் போலீஸாருக்கு) தெரியவந்து, சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

போதை பொருள்
போதை பொருள்

புற்றீசல் போல போதை பொருள் கடத்தல் கும்பல்கள் சென்னை, அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. அதனால்தான் அவர்களை முழுமையாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியவில்லை. போதை பொருள் கடத்தல் பின்னணியில் ரௌடி கும்பல்களுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இந்த நெட்வொர்க்கை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும் என்றால், சென்னைக்கு வரும் வழிகள் முழுமையாக கண்காணிக்கப்பட வேண்டும்.

அவ்வாறு கண்காணிக்கப்பட்டால் அன்டை மாநிலங்கள் வழியாக போதை பொருள்களைக் கடத்தி வர முடியாது. அதற்கான ஆபரேஷன் விரைவில் தொடங்கவுள்ளது. இன்னொரு வேதனைக்குரிய தகவல் என்னவென்றால் போதை பொருள் கடத்தல் கும்பலுடன் சில காவல்துறையினருக்கும் ரகசிய கூட்டணி இருந்து வருகிறது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த போதை பொருள் தடுப்பு மாநாட்டில் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது சஸ்பென்ட் நடவடிக்கையோடு இனி கைது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக கலந்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. அதனால், போதை பொருள் தடுப்பு வேட்டை வழக்கத்தை விட இனி வருங்காலங்களில் தீவிரப்படுத்தப்படும். தற்போது கஞ்சா வியாபாரிகளின் சொத்துக்கள் முடக்கப்படுவதால் அதன் விற்பனை குறைந்துள்ளது" என்றனர்.