Published:Updated:

வேறொருவரை மணந்த காதலி; நியாயம் கேட்க சுவர் ஏறிக் குதித்த இளைஞருக்குக் காத்திருந்த அதிர்ச்சி!

வீட்டுக்குள் குதித்த இளைஞர்

தன்னை ஏமாற்றிவிட்டு வேறொருவரைத் திருமணம் செய்த காதலியிடம், நியாயம் கேட்பதற்காக நள்ளிரவில் வீட்டுக்குள் குதித்திருக்கிறார் இளைஞர் ஒருவர்.

வேறொருவரை மணந்த காதலி; நியாயம் கேட்க சுவர் ஏறிக் குதித்த இளைஞருக்குக் காத்திருந்த அதிர்ச்சி!

தன்னை ஏமாற்றிவிட்டு வேறொருவரைத் திருமணம் செய்த காதலியிடம், நியாயம் கேட்பதற்காக நள்ளிரவில் வீட்டுக்குள் குதித்திருக்கிறார் இளைஞர் ஒருவர்.

Published:Updated:
வீட்டுக்குள் குதித்த இளைஞர்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகிலிருக்கும் ஒரு கிராமத்தில் அம்மனுக்குக் கூழ்வார்த்தல் திருவிழா நடந்தது. விழாவைத் தொடர்ந்து அன்றிரவு கலை நிகழ்ச்சி நடந்திருக்கிறது. கிராம மக்கள் அங்கு கூடியிருக்க... திருட்டுச் சம்பவங்களைத் தடுக்க ஆரணி நகர போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். நள்ளிரவு நேரத்தில், சந்தேகப்படும்படி பைக்கில் சுற்றித்திரிந்த இளைஞர் ஒருவரை கண்காணித்தனர். அவரைப் பின்தொடர்ந்து சென்றபோது, அவர் ஒரு வீட்டின் அருகில் பைக்கை நிறுத்திவிட்டு சுவர் ஏறி உள்ளே குதித்தார்.

பின்தொடர்ந்த போலீஸாரும் வீட்டுக்குள் தாவி அந்த இளைஞரை மடக்கிப் பிடித்தனர். ‘திருடனாக இருக்குமோ?’ என்ற சந்தேகத்தில் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அதுதான் இல்லை. தன்னை ஏமாற்றிவிட்டு வேறொருவரை மணந்த காதலியைச் சந்தித்து நியாயம் கேட்பதற்காக வீட்டுக்குள் குதித்திருக்கிறார் என்பது தெரியவந்தது.

ஆரணி
ஆரணி

விசாரணையில் அந்த இளைஞர், போளூர் அருகிலிருக்கும் பொன்நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. 27 வயதாகும் அவரும், இந்தச் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண்ணும் சில ஆண்டுகளாகக் காதலித்துவந்திருக்கிறார்கள். திருமணம் செய்துகொள்ள வேண்டுமெனில், வேலையில் இருக்க வேண்டுமென அந்தப் பெண் கன்டிஷன் போடவே... இளைஞரும் மலேசியாவுக்குச் சென்று கார்பென்ட்டர் வேலை செய்துவந்தார். ஓரளவு செட்டிலாகும் அளவுக்குச் சம்பாதித்த பின்னரே ஊர் திரும்ப வேண்டுமென காதலி சொல்லிவிட்டதால், கடுமையாக உழைத்திருக்கிறார். இந்தச் சூழலில், சில மாதங்களுக்கு முன்பு தன் கிராமத்தைச் சேர்ந்த வேறொரு நபரை அந்த இளம்பெண் திருமணம் செய்துகொண்டார். பெற்றோர் சம்மதத்தின்பேரில், இந்தத் திருமணம் நடந்திருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதையடுத்து, மலேசியாவிலிருந்த காதலனுடன் போனில் பேசுவதை அந்தப் பெண் தவிர்த்துவிட்டார். நண்பர்கள் மூலம் காதலிக்கு வேறொருவருடன் திருமணம் ஆகிவிட்டதை அறிந்து, இளைஞர் அதிர்ச்சியடைந்திருக்கிறார். உடனடியாக மலேசியாவிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பினார். தன்னை ஏமாற்றிய காதலியைச் சந்தித்து நியாயம் கேட்கப் பலமுறை முயன்றிருக்கிறார். சரியான நேரம் கிடைக்காததால், அவர்களால் சந்தித்துக்கொள்ள முடியவில்லை. இந்த நிலையில்தான் திருவிழா நேரத்தில், காதலியின் ஊருக்குள் வந்திருக்கிறார். போனில் பேசிவிட்டு, அவரின் வீட்டுக்குள் சுவர் ஏறிக் குதித்தபோது, போலீஸாரிடம் சிக்கிக்கொண்டது விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

வீட்டுக்குள் குதித்த இளைஞர்
வீட்டுக்குள் குதித்த இளைஞர்

போலீஸார், இளைஞரின் தந்தையை காவல் நிலையத்துக்கு வரவழைத்து நடந்ததைக் கூறி எச்சரித்தனர். ‘‘திருமணம் ஆகிவிட்டது. அந்தப் பெண்ணை தொந்தரவு செய்தால், அவரின் வாழ்க்கை பறிபோய்விடும். இப்போது அவர் வந்தால் சேர்ந்து வாழ்வாயா, முடியாதுல்ல?’’ என்று இன்ஸ்பெக்டர் கேள்வி கேட்க... உடனே ‘‘சேர்ந்து வாழ்வோம்’’ என்று இளைஞர் பதில் சொன்னார். இந்த பதிலை எதிர்பார்க்காத இன்ஸ்பெக்டர் அதிர்ச்சியடைந்து இளைஞரைப் பார்க்க... அருகிலிருந்த தந்தையோ, இளைஞரை கன்னத்தில் அறைந்தார். இதையடுத்து, ‘‘இனிவரும் நாள்களில், இது போன்ற தவறு செய்யாமல் பார்த்துகொள்ள வேண்டும். தொடர்ந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என எழுதி வாங்கிக்கொண்டு இளைஞரையும், அவரின் தந்தையையும் எச்சரித்து வீட்டுக்கு அனுப்பிவைத்தனர் போலீஸார்!