திருவண்ணாமலையைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் சென்னை பகுதியிலுள்ள பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தங்கி 11-ம் வகுப்பு படித்துவந்துள்ளார். இந்நிலையில், மாணவிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடல்நிலை சரியில்லாததால் தனது பெற்றோரைத் தொடர்புகொண்டு தன்னை வீட்டுக்கு அழைத்துச் செல்லும்படி கூறினாராம் அந்த மாணவி. இதைத் தொடர்ந்து பெற்றோரும் சென்னைக்குச் சென்று சிறுமியை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். கடந்த 10 தினங்களுக்கு முன்பு, தனது வீட்டில் தனியாக இருந்த சிறுமி எலி மருந்தைச் சாப்பிட்டு வாந்தி எடுத்துள்ளார்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், சிறுமியை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அப்போது சிறுமிக்கு சிகிச்சை அளித்து பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி ஆறு மாத கர்ப்பமாக இருப்பதாக பெற்றோரிடம் தெரிவித்தனராம். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளனர். புகாரைத் தொடர்ந்து மாணவி பயின்ற உண்டு உறைவிடப் பள்ளியிலும், மாணவியின் நிலைக்கு காரணமான நபர் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர் மகளிர் காவல்துறையினர்.
இந்நிலையில், திருவண்ணாமலைப் பகுதியில் வசித்துவந்த 31 வயது திருமணமான இளைஞர் ஹரிபிரசாத், மாணவியிடம் ஆசைவார்த்தைகளைக் கூறி பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியது தெரியவந்துள்ளது. மேலும், மாணவி பயின்ற உண்டு உறைவிடப் பள்ளியைச் சேர்ந்த விடுதி வார்டனும், ஆசிரியர் ஒருவரும் மாணவியின் கர்ப்பம் குறித்த தகவலை மறைத்ததும் தெரியவந்துள்ளது.

இதைத் தொடர்ந்து மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய இளைஞர் ஹரிபிரசாத் உட்பட மூன்று பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர் திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் துறையினர். இச்சம்பவம் திருவண்ணாமலைப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.