Published:Updated:

மினி லாரியில் கடத்தப்பட்ட மின்விசிறி, விளக்கு, நாற்காலி! - போலீஸ் நிலையத்திலேயே விளையாடிய திருடன்

எஸ்.மகேஷ்

சென்னையில் செயல்படும் புறகாவல் நிலையத்தில் பட்டப்பகலில் மின்விசிறி, மின்விளக்கு, நாற்காலிகளைத் திருடிச் சென்ற திருடனை போலீஸார் சிசிடிவி கேமரா மூலம் தேடிவருகின்றனர்.

police booth
police booth

திருட்டுச் சம்பவங்கள் நடந்தால் காவல் நிலையத்தில் புகார் கொடுப்பது வழக்கம். ஆனால், சென்னையில் எந்நேரமும் பரபரப்பாகக் காணப்படும் எஸ்.ஆர்.பி டூல்ஸ் புறக்காவல் நிலையத்திலேயே திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது. இது, சென்னை காவல்துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Representational image
Representational image

சென்னை தரமணியை அடுத்த எஸ்.ஆர்.பி டூல்ஸ் பஸ் நிறுத்தத்தில் போக்குவரத்துப் பிரிவு போலீஸாருக்கான புறக்காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்தக் காவல் நிலையத்தை சட்டம் ஒழுங்கு போலீஸாரும் பயன்படுத்துவதுண்டு. கடந்த 2-ம் தேதி மதியம் 4 மணி முதல் 6 மணி வரை போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜி ஈடுபட்டுள்ளார்.

பிறகு, அவர் புறக்காவல் நிலையத்துக்கு வந்தார். அப்போது காவல் நிலையத்திலிருந்த மின்விசிறி, நாற்காலிகள், மின்விளக்குகள் ஆகியவை திருட்டுப் போயிருந்தன. புறக்காவல் நிலையத்திலேயே திருட்டா என்று அதிர்ச்சியடைந்த ராஜி, என்ன செய்வது என்று உயரதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்தார். பிறகு, வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

Representational image
Representational image

அதன்பேரில் போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனர். பிறகு அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது புறக்காவல் நிலையத்திலிருந்து மின்விசிறி, நாற்காலிகள், மின்விளக்குகள் ஆகியவற்றை மினி லாரியில் ஏற்றிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. இதனால் அந்த மினி லாரி யாருக்குச் சொந்தமானது என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.