Published:Updated:

`சிசிடிவி-க்கு சூயிங்கம்; யூடியூப் ரெஃபரன்ஸ்!’ -அரியலூர் அடகுக் கடையை அதிரவைத்த கொள்ளையர்கள்

கொள்ளையரில் ஒருவன் சிசிடிவி கேமராவை சூயிங்கம் கொண்டு மறைத்து அதன்பின்னர் கொள்ளை அடிக்க முயன்றது தெரியவந்தது.

கொள்ளைச் சம்பவம்.
கொள்ளைச் சம்பவம்.

திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளையைப் போன்று, அரியலூரில் உள்ள அடகுக்கடையில் சுவரில் ஓட்டைபோட்டு கொள்ளையடிக்கும் முயற்சி நடந்துள்ளது. சிசிடிவி கேமராவில் சூயிங்கம் வைத்து அடைத்துவிட்டு, முகமூடி அணிந்துகொண்டு கொள்ளையடிக்க முயற்சி செய்திருக்கிறார்கள்.

சுவரைத் துளையிட்டுக் கொள்ளை
சுவரைத் துளையிட்டுக் கொள்ளை

கரூர் மாவட்டம் மலைக்கோவிலூர் அருகேயுள்ள குப்பைமேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் கடந்த 20 ஆண்டுகளாக அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் கடைவீதியில் ஸ்டேட் பேங்க் அருகே அடகுக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம்போல் கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

கடையின் அருகே குடியிருந்து வருபவர் மோகன். நள்ளிரவு ஒரு மணி அளவில் மோகன் தூங்கிக்கொண்டிருந்தபோது வீடு அதிரும் சத்தம் கேட்டு எழுந்து வெளியே வந்து பார்த்திருக்கிறார். அப்போது, அடகுக்கடையின் பின்பக்கச் சுவரை கொள்ளையர்கள் துளையிட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டிருக்கிறார்.

இதை அறிந்த கொள்ளையர்கள் இடித்த சுவரின் கற்களை எடுத்து மோகன் மீது வீசத் தொடங்கியுள்ளனர். மோகன் விலகிக் கொள்ளவே அவரது வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. அதன்பின் மோகனின் சத்தம் கேட்டு அவரது மகன் மற்றும் மனைவி ஆகியோர் ஓடிவந்து பார்த்துள்ளனர். அப்போது, முகமூடி அணிந்த மூன்று பேர் அந்த இடத்தில் இருந்து தப்பியோடியுள்ளனர்.

சிசிடிவி கேமராவில் பபுள்கம்.
சிசிடிவி கேமராவில் பபுள்கம்.

இதையடுத்து மோகன் தனது வீட்டில் உள்ள சிசிடிவி கேமராவைச் சென்று பார்த்தபோது, கொள்ளையரில் ஒருவன் சிசிடிவி கேமராவை சூயிங்கம் கொண்டு மறைத்து அதன்பின்னர் கொள்ளை அடிக்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து கடை உரிமையாளர் ராமலிங்கத்துக்குத் தகவல் கொடுத்துள்ளார். இதன்பின்னர், ஆண்டிமடம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார் ராமலிங்கம்.

கடையில் ஆய்வு நடத்திய போலீஸார், உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்புள்ள நகை, பணம் தப்பியது தெரியவந்தது. இதையடுத்து சிசிடிவி காட்சிகளின் வழியாக முகமூடிக் கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.

அடகுக்கடை கொள்ளை முயற்சி குறித்து நம்மிடம் பேசிய போலீஸார், `` யூடியூப்பில் திருச்சி லலிதா ஜுவல்லரி என்று டைப் செய்தால் நூற்றுக்கணக்கான வீடியோ, ஆடியோ செய்திகள் திரையில் வருகின்றன. அதில் வெளியில் சத்தம் வராமல் இருப்பதற்காக கடப்பாரையில் சாக்குத் துணியைக் கட்டிக் கொண்டு உடைத்தனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொள்ளை
கொள்ளை

இந்த வீடியோக்களைப் பார்த்துதான் ஆண்டிமடத்தில் உள்ள நகைக்கடையில் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். முதலில் கடையின் உரிமையாளர் வைத்திருந்த சிசிடிவி கேமராவில் சூயிங்கம் வைத்து மறைத்துவிட்டு உள்ளே நுழைந்துள்ளனர்.

மேலும், உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்துக்கொண்டு வந்துள்ளனர். சுவரை உடைக்கும் போது ஏற்பட்ட அதிர்வால் பக்கத்து வீட்டுக்காரர் வந்து பார்த்திருக்கிறார். இல்லாவிட்டால், கொள்ளை முயற்சி அரங்கேறியிருக்கும்.

சிசிடிவி கேமராவில் பதிவான காட்சி
சிசிடிவி கேமராவில் பதிவான காட்சி

இதுதொடர்பாக, சந்தேகத்தின் பேரில் இருவரைப் பிடித்து விசாரித்துக்கொண்டிருக்கிறோம். கூடிய விரைவில் முக்கியக் குற்றவாளிகளைக் கைது செய்துவிடுவோம்" என்கின்றனர்.