Published:Updated:

`எந்த இயந்திரத்தில் கொள்ளையடிப்பது?!' -சென்னைத் திருடனைத் தவிக்கவிட்ட 3 ஏ.டி.எம்கள்

சென்னை சைதாப்பேட்டையில் கொள்ளையடிக்க ஏ.டி.எம் அறைக்குள் சென்ற கொள்ளையன், மூன்று இயந்திரங்கள் இருந்ததால் குழப்பமடைந்தான்.

ஏ.டி.எம் இயந்திரம்
ஏ.டி.எம் இயந்திரம்

சென்னை சைதாப்பேட்டை ஜீனியஸ் சாலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் கிளை ஒன்று உள்ளது. இந்தக் கிளையின் சார்பில் ஏ.டி.எம் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஒரே அறையில் பணம் எடுக்கும் இயந்திரமும் டெபாசிட் செய்வதற்கு 2 இயந்திரங்களும் பாஸ்புக்கை என்ட்ரி செய்வதற்கு ஒரு இயந்திரமும் வைக்கப்பட்டுள்ளன.

இந்த ஏ.டி.எம் அறைக்குள் ஒரு ஏ.டி.எம் இயந்திரத்தைக் கொள்ளையன் உடைத்துக்கொண்டிருப்பதாக சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மும்பையிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஏ.டி.எம் கார்டுகள்
ஏ.டி.எம் கார்டுகள்

உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து சைதாப்பேட்டை காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாலை 2.25 மணியளவில் சம்பவம் நடந்த இடத்துக்கு போலீஸார் சென்றனர். அங்கு ஏ.டி.எம் அறையில் யாரும் இல்லை. ஆனால், பாஸ்புக் என்ட்ரி செய்யும் இயந்திரம் உடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து போலீஸார் அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது ஒருவர் ஏ.டி.எம் அறையிலிருந்து வெளியில் வரும் காட்சி பதிவாகியிருந்தது.

இதையடுத்து அந்த நபர் யார் என்று போலீஸார் விசாரித்துவருகின்றனர். தொடர்ந்து அந்தப்பகுதியில் உள்ள ஒவ்வொரு சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்து கொள்ளையன் குறித்த தகவல்களைச் சேகரித்துவருகின்றனர். இதுகுறித்து சைதாப்பேட்டை போலீஸார் கூறுகையில், ``மும்பையில் உள்ள வங்கியின் தலைமை அலுவலகத்திலிருந்து ஏ.டி.எம் இயந்திரங்கள் கண்காணிக்கப்பட்டுவருகின்றன. சமீபத்தில்கூட ஆவடி முத்தையால்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற உதயசூரியன், வங்கியின் தலைமை அலுவலகத்திலிருந்து கொடுத்த தகவலின்படி கைது செய்யப்பட்டார்.

`யூடியூப் வீடியோ பார்த்து கற்றுக்கொண்டேன்!' - ஏடிஎம் கொள்ளையில் சிக்கிய சென்னை இன்ஜீனியர்

சைதாப்பேட்டை வங்கி சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஏ.டி.எம் அறையில் மூன்று இயந்திரங்கள் இருந்துள்ளன. அதற்குள் நுழைந்த கொள்ளையன், எந்த இயந்திரத்தை உடைப்பது என்று தெரியாமல் குழப்பமடைந்துள்ளான். பணம் எடுக்கும் டெபாசிட் செய்யும் இயந்திரங்களை விட்டுவிட்டு பாஸ்புக் என்ட்ரி போடும் இயந்திரத்தை உடைத்துள்ளான். ஆனால், அதற்குள் மும்பை தலைமை அலுவலகத்திலிருந்து போலீஸுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் செல்வதற்குள் கொள்ளையன் தப்பி ஓடிவிட்டான். ஆனால் அவனின் முகம், பதிவாகியுள்ளது. அதன்படி விரைவில் அவன் கைது செய்யப்படுவான்" என்றனர்.

இதுகுறித்து மேலும் போலீஸார் கூறுகையில், ``லட்சக்கணக்கில் பணம் வைக்கப்படும் ஏ.டி.எம் மையங்களுக்கு உரிய பாதுகாப்பை வங்கி நிர்வாகம் வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்துவருகிறது. அதுதொடர்பாக வங்கி நிர்வாகத்துடன் காவல்துறை சார்பில் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. ஆனால், இன்னும் சென்னை மற்றும் அதன்புறநகர்ப் பகுதிகளில் செக்யூரிட்டிகள் இல்லாத ஏ.டி.எம் மையங்கள் உள்ளன.

`அரசியலைத் தேர்வு செய்தது ஏன்?!' -தஞ்சையில் மனம்திறந்த ஜீவஜோதி

செக்யூரிட்டிகள் இல்லாத ஏ.டி.எம் மையங்களை நோட்டமிடும் கொள்ளைக் கும்பல் அதிகாலை நேரத்தில் கைவரிசை காட்டிவருகிறது. தற்போது, அனைத்து ஏ.டி.எம் மையங்களும் வங்கியின் தலைமை அலுவலகத்தின் கண்காணிப்பில் உள்ளன. செக்யூரிட்டிகள் இல்லாத ஏ.டி.எம் மையங்கள் உட்பட அனைத்து ஏ.டி.எம்களும் 24 மணி நேரமும் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்பட்டுவருகின்றன. இதனால் ஏ.டி.எம் இயந்திரங்களில் இனி கொள்ளையடிக்க முடியாத நிலை உள்ளது. அதையும் மீறி கொள்ளையடிக்க முயன்றால் போலீஸாரிடம் சிக்கிக் கொள்வார்கள்" என்கின்றனர்.