Published:Updated:

`டிக்டாக்கில் வீடியோ; பைக் திருட்டைக் கண்டுபிடிக்க உதவிய வாட்ஸ்அப்' -சென்னை இளைஞரின் புதிய முயற்சி

பைக் திருட்டில் கைதான ரமேஷ், விக்னேஷ்
பைக் திருட்டில் கைதான ரமேஷ், விக்னேஷ்

ஊரடங்கு சமயத்தில், திருமங்கலம் பகுதியில் பைக்கை திருடிய கும்பல், அதை திருமுல்லைவாயலில் தைரியமாக ஓட்டிவந்ததை வாட்ஸ்அப் நண்பர்கள் மூலம் கண்டுபிடித்துள்ளனர்.

ஊரடங்கு காரணமாக சென்னை நகரமே வெறிச்சோடிக் காணப்படுகிறது. மக்கள் நடமாட்டம் இல்லை என்றாலும் திருட்டுச் சம்பவங்கள் குறையவில்லை. மதுவுக்காக டாஸ்மாக் கடைகளில் திருட்டு நடப்பது தொடர்கதையாகிவருகிறது. திருமங்கலத்தில் வீட்டின் முன் நிறுத்தியிருந்த விலை உயர்ந்த பைக்கைத் திருடிய கும்பல், அதைத் தைரியமாக திருமுல்லைவாயலில் ஓட்டிவந்துள்ளது.

சென்னை திருமங்கலம், டி.வி நகரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (24), இவர், கடந்த 24-ம் தேதி, வீட்டின்முன் தன்னுடைய விலை உயர்ந்த பைக்கை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் சென்றுள்ளார்.

பாலசுப்பிரமணியன்
பாலசுப்பிரமணியன்

மறுநாள், அவர் வெளியில் வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. அதனால் பாலசுப்பிரமணியன் அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவர், காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் திருமங்கலம் காவல் நிலையத்திலும் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து, சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்துவந்தனர். ஊரடங்கு காரணமாக போலீஸார் அனைவரும் பிஸியாக இருந்ததால், பாலசுப்பிரமணியனே தன்னுடைய பைக்கைக் கண்டுபிடிக்க களத்தில் இறங்கினார்.

தன்னுடைய முகநூல் நண்பர்கள் மற்றும் வாட்ஸ்அப் நண்பர்களுக்கு பைக்கின் புகைப்படத்தை அனுப்பிவைத்தார். அதனால் சென்னை முழுவதும் உள்ள பாலசுப்பிரமணியனின் நண்பர்கள், பைக்கை தேடத் தொடங்கினர். இந்தச் சமயத்தில் திருடப்பட்ட பைக்கை திருமுல்லைவாயலில் இளைஞர்கள் ஓட்டிச் செல்வதைப் பார்த்த பாலசுப்பிரமணியனின் நண்பர்கள், உடனடியாக போனில் தகவலைப் பகிர்ந்தனர். அதனால் பாலசுப்பிரமணியன் மற்றும் அவரின் நண்பர்கள் உடனடியாக திருமுல்லைவாயலுக்கு வந்தனர். பைக்கை ஓட்டிச் சென்ற இளைஞர்களை ரகசியமாகப் பின்தொடர்ந்தனர்.

திருடப்பட்ட பைக்
திருடப்பட்ட பைக்

திருமுல்லைவாயல் ஏரிக்கரைப் பகுதியில் உள்ள வீட்டுக்குச் சென்ற இளைஞர்கள், பைக்கை வெளியில் நிறுத்தினர். பின்னர், அவர்கள் வீட்டுக்குள் சென்றனர். அந்த வீட்டுக்குள் இன்னும் சில இளைஞர்கள் இருந்தனர். இதையடுத்து பாலசுப்பிரமணியன், திருமுல்லைவாயல் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில், போலீஸ் டீம் அங்கு சென்று வீட்டை சுற்றி வளைத்தது. போலீஸைப் பார்த்ததும் வீட்டிலிருந்த இளைஞர்களில் சிலர் ஏரி வழியாக தப்பிச்சென்றனர். வீட்டிலிருந்த வடபழனியைச் சேர்ந்த ரமேஷ் (25), அவரின் நண்பர் குன்றத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் (19) ஆகிய 2 பேரை மடக்கிபிடித்தனர். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.

அந்த வீட்டுக்குள் லேப்டாப்கள், நகைகள், இன்னும் 2 பைக்குகள், கத்தி, அரிவாள் போன்றவை இருந்தன. அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸார், காவல் நிலையத்துக்குக் கொண்டுவந்தனர். பைக் திருட்டு வழக்கு திருமங்கலம் காவல் நிலையத்தில் பதிவாகியுள்ளதால், பைக்கையும் ரமேஷ், விக்னேஷ் இருவரையும் அங்கு ஒப்படைத்தனர். திருமங்கலம் போலீஸார் இருவரையும் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

`பெற்றோருக்கு பாரமாக இருக்க விரும்பல!’- மாயமான  மாணவியைக் கண்டுபிடிக்க உதவிய முகநூல் நண்பர்கள்
பைக் திருட்டில் கைதான ரமேஷ், விக்னேஷ்
பைக் திருட்டில் கைதான ரமேஷ், விக்னேஷ்

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``திருமுல்லைவாயில் ஏரிக்கரை பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து விக்னேஷ், ரமேஷ் மற்றும் அவர்களின் கூட்டாளிகள் என 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்கியிருந்துள்ளனர். வீடுகளில் நுழையும் இந்தக் கும்பல், லேப்டாப், செல்போன், பணம், நகையைக் கொள்ளையடித்து, அவற்றை இந்த வீட்டில் பதுக்கி வைத்திருந்தனர். கைதானவர்கள் அளித்த தகவலின்படி, பத்துக்கும் மேற்பட்டவர்களைத் தேடிவருகிறோம். இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் டிக்டாக்கில் வீடியோக்களைப் பதிவு செய்துள்ளனர். இந்த வீட்டில் சந்தோஷமாக அவர்கள் வாழ்ந்துவந்துள்ளனர்" என்றனர்.

பைக் திருட்டில் ஈடுபட்ட இளைஞர்கள் வெளியிட்ட வீடியோவில், `பயம், அதைக் கொடுத்தது யாரு, நாங்கள். ஆனா, எங்களுக்கு பயம் என்றால் என்னவென்றே தெரியாது' என 'அந்நியன்' படத்தின் விக்ரம் போல பேசி நடித்துள்ளனர். மற்றொரு டிக்டாக் வீடியோவில், கும்பலாக மது அருந்துகின்றனர். இன்னொரு வீடியோவில் கத்தியோடு இந்தக் கும்பல் மிரட்டுகிறது. பல டிக்டாக் வீடியோக்களை இந்தக் கும்பல் வெளியிட்டதால், விரைவில் பிடித்துவிடுவோம் என போலீஸார் தெரிவித்தனர்.

திருடப்பட்ட பைக்
திருடப்பட்ட பைக்

பாலசுப்பிரமணியன் கூறுகையில், `` நான் என்ஜிஓ-வில் பணியாற்றிவருகிறேன். என்னுடைய பைக் திருடப்பட்டதும் சமூக வலைதளத்தில் அந்தத் தகவலைப் பதிவுசெய்தேன். சில தினங்களுக்குப் பிறகு, நண்பர் ஒருவர் எனக்கு கொடுத்த தகவலின்படி, பைக்கை காவல்துறையினரின் உதவியோடு மீட்டுள்ளேன். வாட்ஸ்அப் மூலம் என்னுடைய பைக் மீண்டும் திரும்பக் கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு