Published:Updated:

படிப்பில் பி.எஸ்ஸி... திருட்டில் பிஹெச்.டி...

பாண்டியன்
பிரீமியம் ஸ்டோரி
News
பாண்டியன்

‘பலே’ பாண்டியன்!

“2009-ம் வருஷம்... என் அப்பா திடீர்னு இறந்துட்டார். அப்போ அவரை அடக்கம் செய்யக்கூட என்கிட்ட காசு இல்லை. என் பக்கத்து வீட்டுல இருந்த ஒருத்தர் பணம் குடுத்து ஹெல்ப் பண்ணினார். அப்பயிருந்து அவர்கூடப் பழக்கம். அதுக்கப்புறம் கொஞ்சநாள் கழிச்சு “ஒரு இடம் வாங்கணும். 20 சவரன் நகை இருக்கு. வித்துக் குடேன்”னு என்கிட்ட கொஞ்சம் நகைகளைக் கொடுத்தார். ஆபத்தான சமயத்துல உதவினவராச்சேன்னு தெரிஞ்ச ஒரு கடையில விக்கப் போனேன். போலீஸ்ல மாட்டிக்கிட்டேன். சிட்லபாக்கம் போலீஸ் என்னையும் அவரையும் திருட்டு வழக்குல ஜெயிலுக்கு அனுப்பிட்டாங்க. வெளியே வந்ததுக்கப்புறம் என்ன பண்றதுனு தெரியலை. திருட ஆரம்பிச்சேன்”- இப்படித் தன் ஃப்ளாஷ்பேக்கை காவலர்களிடம் விவரித்த பாண்டியன் என்கிற மாயகிருஷ்ணன் மீது இன்றைக்கு நூற்றுக்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் இருக்கின்றன!
படிப்பில் பி.எஸ்ஸி... திருட்டில் பிஹெச்.டி...

திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியில், கடந்த இரண்டு மாதங்களாகவே பூட்டப்பட்டிருக்கும் வீடுகளில் தொடர்ச்சியாகத் திருட்டுச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. எட்டு வீடுகளில் அடுத்தடுத்து இப்படி நடக்கவே, சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வுசெய்தனர். போலீஸார் அணியும் பிரவுன் நிற ஷூ, காக்கி நிற பேன்ட் என்று ஒரே நபர்தான் இந்த எட்டு திருட்டுச் சம்பவங்களிலும் ஈடுபட்டிருக்கிறான் எனத் தெரிய வந்தது. ஒரு சிசிடிவி பதிவில், பல்சர் பைக்கில் செல்வதையும், அதே நாளில் இன்னொரு சிசிடிவி பதிவில் ஜூபிடர் ஸ்கூட்டரில் செல்வதையும் கண்ட போலீஸார் குழம்பிப் போயிருக்கிறார்கள்.

தொடர் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட அந்த நபரைப் பிடிக்க எஸ்.பி அரவிந்தன் உத்தரவின் பேரில், திருவள்ளூர் டி.எஸ்.பி துரைபாண்டியன் தலைமையில், இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி, சப்-இன்ஸ்பெக்டர் அபர்ணா உள்ளிட்டோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. பல இடங்களில் தேடிவந்த தனிப்படை போலீஸாரிடம் 4.10.2020 அன்று வேப்பம்பட்டு செக்போஸ்ட்டில் பந்தாவாக வந்து சிக்கினான் அந்த 29 வயது இளைஞன். அவனை செவ்வாய்பேட்டை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தபோதுதான் மேலே உள்ள உண்மைகளைச் சொல்லத் தொடங்கினான் அவன்.

படிப்பில் பி.எஸ்ஸி... திருட்டில் பிஹெச்.டி...

கவனி... கண்காணி... திருடு!

பெயர், பாண்டியன் என்ற மாயகிருஷ்ணன். படித்தது பி.எஸ்ஸி, பூட்டை உடைப்பதில் பிஹெச்.டி! திருட்டின் ஆரம்பகட்டப் பணியாக, குறிப்பிட்ட பகுதிக்கு பைக்கில் சென்று பூட்டப்பட்டிருக்கும் வீடுகளை நோட்டமிடுவான். அந்தத் தெருவில் ஆள் நடமாட்டம் குறைவாக இருக்கும் நேரம் எது என்பதை அறிந்துகொள்வான். சம்பவ தினத்தன்று டிப்டாப் உடையில், ஹெல்மெட்டைத் தலையில் மாட்டிக்கொண்டு, முதுகில் லேப்டாப் பேக்போல காலி பேக்கையும் மாட்டிக்கொண்டு, ஐடி இளைஞனைப்போல அந்த வீட்டுக்குச் செல்வான். வேலையில் கில்லாடி, எந்தப் பூட்டையும் உடைக்க அவனுக்குத் தேவை 15 நிமிடங்கள்தான். போலீஸாரிடம் சிக்காமலிருக்க அவன் பயன்படுத்துவது திருட்டு பைக்குகள். ஹெல்மெட் அணிந்திருப்பதால் சிசிடிவி-யில் முகம் தெரியாது. இதனாலேயே வேப்பம்பட்டுப் பகுதியில் நடந்த திருட்டுச் சம்பவங்களில் பாண்டியனின் முகம் எந்தச் சிசிடிவி-யிலும் பதிவாகவில்லை. ஆனால், அவனைச் சிக்கவைத்தது அவன் அணிந்திருந்த போலீஸார் அணியும் பிரவுன் நிற ஷூவும், காக்கிற நிற பேன்ட்டும்தான்.

பாண்டியனைப் பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படைக்கு, சென்னையின் பிற காவல் நிலையங்களிலிருந்து பல அட்வைஸ்கள் வந்தன. அதில், எல்லோரும் கோரஸாகச் சொன்ன ஒரு விஷயம் இது: “ `திமிரு புடிச்சவன்’ படத்துல வர்ற வில்லன் வாயில் பிளேடு வெச்சிருக்கறது மாதிரி, இந்த பாண்டியன் வாயில் பிளேடு வெச்சிருப்பான். மாட்டிக்கிட்டவுடனே நம்மகூட வந்துட்டிருக் கறப்பவே அந்த பிளேடை எடுத்து கழுத்து, கை, வாயி, வயிறுனு அறுத்துக்குவான். காயமும் ரத்தமுமா இருக்கிற அவனை கஸ்டடியில எடுக்க முடியாது. நேரா ஹாஸ்பிடலுக்குக் கூட்டிட்டுப் போய், ட்ரீட்மென்ட் முடிச்சு ஜெயிலுக்குத்தான் அனுப்ப முடியும். பல கேஸ்களில் அவனை கஸ்டடியில எடுத்து விசாரிச்சு நகைகளை மீட்க வாய்ப்பில்லாம போகுது. இதனாலேயே, அவனோட பல கேஸ்கள் இன்னும் இழுத்துக் கிட்டிருக்கு!”

பாண்டியனின் இந்த ஸ்டைலை அறிந்துகொண்ட திருவள்ளூர் மாவட்ட போலீஸார், அவனைப் பிடித்ததும் உடனே உடல் முழுவதும் ‘ஸ்கேன்’ செய்திருக்கிறார்கள். குறிப்பாக, பற்களுக்குள் பிளேடு இருக்கிறதா என்று இரண்டு முறை செக் செய்திருக்கிறார்கள். பிறகு அவனிடம் விசாரித்து, 53 சவரன் மதிப்பிலான நகைகள், தங்க பிஸ்கட்டுகள், இரண்டு பைக்குகளைப் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.

படிப்பில் பி.எஸ்ஸி... திருட்டில் பிஹெச்.டி...

இரண்டு டூ வீலர்கள் எப்படி?

‘வீட்டு நகைகளைத் திருடும் பாண்டியனிடம் தங்க பிஸ்கட்டுகள் எப்படி?’ என்று போலீஸார் விசாரித்திருக்கிறார்கள். திருடும் நகைகளை ஆந்திராவுக்குக் கொண்டு சென்று அதை உருக்கி, தங்க பிஸ்கட்டுகளாக மாற்றிக்கொண்டு சென்னை திரும்பிவிடுவதாகச் சொல்லியிருக்கிறான் பாண்டியன். “ஒரே நாள் பல்சர் பைக்கிலும், ஜூபிடர் ஸ்கூட்டரிலும் சென்றது எப்படி” என்று விசாரித்திருக்கிறார்கள். “ஒருவாட்டி போலீஸ் துரத்தறப்ப, தப்பிக்க ஓடும்போது தடுமாறினதுல கால் எலும்பு ஃப்ராக்சர் ஆகிருச்சு சார். கியர் மாத்துறப்ப கால்ல திடீர்னு வலி எடுக்கும். வேப்பம்பட்டு ஏரியாக்கள்ல திருட்டுக்குக் கெளம்பினப்ப பல்சர்லதான் போனேன். திடீர்னு வலி வந்துடுச்சு. சரினு வண்டியை ஒரு பிரியாணி கடையில விட்டுட்டு, பிரியாணி சாப்டுட்டு வெளியில வந்தேன். பார்த்தா, ரெடியா ஒரு ஜூபிடர் ஸ்கூட்டர் சாவியோட நின்னுக்கிட்டு இருந்துச்சு. நடக்கறதெல்லாம் நமக்கு சாதகமாத்தாண்டா இருக்குன்னு அந்த ஸ்கூட்டரை எடுத்துட்டுப் போயிட்டேன் சார்” என்று கூலாக பாண்டியன் சொல்வதைக் கேட்டு சிரிப்பதா, கோபப்படுவதா என்று புரியாமல் குழம்பிப்போயிருக்கிறார்கள் போலீஸார்.

பாண்டியனைப் பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படையில் இடம்பெற்ற போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் பேசினோம். ``பாண்டியன் ஒரு பிரபல குற்றவாளி. சென்னை மயிலாப்பூர், பள்ளிக்கரணை, ஆதம்பாக்கம், மணலி புதுநகர், திருநின்றவூர், ஆவடி, திருமுல்லைவாயல், புழல், மாதவரம், மாதவரம் பால்பண்ணை, கொடுங்கையூர், அம்பத்தூர், மடிப்பாக்கம் உட்பட பல காவல் நிலையங்களில் அவன்மீது திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மூன்று முறைக்கு மேல் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பிறகும், சிறையிலிருந்து வெளியில் வந்த பாண்டியன் மீண்டும் திருட்டில் ஈடுபட்டு வந்திருக்கிறான். சென்னையில் அவனை போலீஸார் தேடியதால், புறநகரான வேப்பம்பட்டு பகுதியில் திருடியிருக்கிறான். அவன் அளித்த வாக்குமூலத்தில், ‘2009-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரையிலான 11 ஆண்டுகள், தொடர்ந்து திருடி வருவதாக’க் கூறியிருக்கிறான். திருடிய நகைகளை, பழைய நகைகளை வாங்கும் நிறுவனத்தில் விற்றுவிட்டு, விதவிதமாய் மது அருந்துவதையும், விலை உயர்ந்த ஆடைகளை அணிவதையும் வழக்கமாக வைத்திருந்திருக்கிறான். 3,000 ரூபாய்க்கு மேல் விலையுள்ள பிராண்டடு சட்டைகளை மட்டுமே அணிவான். பைக், ஹை ஃபையான உடைகள், ஹெல்மெட், திருடிய நகைகளைக் கொண்டு செல்ல லேப்டாப் பேக்போல ஒரு BackPack எனத் திரிவதால், அவனைப் பார்த்தால் திருடன் என்றே யாரும் நினைக்க மாட்டார்கள். போலீஸாரின் விசாரணையிலிருந்து தப்பிக்க, பிளேடால் அறுத்துக்கொள்வதை ஓர் உத்தியாகத் தொடர்ந்து செய்துவருகிறான் பாண்டியன். அதுவே ஒருநாள் அவனின் உயிருக்கு ஆபத்தாக அமையலாம். தண்டிப்பதைவிட ஒரு குற்றவாளியைத் திருத்த முடிந்தால் நல்லது என்ற வகையில்தான் குற்றவாளிகளை அணுகுகிறோம். ஆனால், திருந்துவது அவர்கள் கையில்தான் இருக்கிறது. வலுக்கட்டாயமாக யாரையும் நாம் மாற்றிவிட முடியாது” என்றார்.

பல்வேறு பூட்டுகளை கண நேரத்தில் திறந்த பாண்டியன், தற்போது புழல் சிறையின் பூட்டுகளுக்குப் பின்னால், தன் தவறுகளையும், நாள்களையும், கம்பிகளையும் எண்ணிக் கொண்டிருக்கிறான்!